Enable Javscript for better performance
நாக தோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தி தலம்!- Dinamani

சுடச்சுட

  

  நாக தோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தி தலம்!

  By - கடம்பூர் விஜயன்  |   Published on : 10th April 2019 03:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nagarasanpet

   
  கும்பகோணம்-திருச்சேறை சென்று அங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள நாகரசம்பேட்டையை அடையலாம். அதே போல் வலங்கைமானிலிருந்து குடவாசல் வரும் சாலையில் குப்பசமுத்திரம் எனும் ஊரின் அக்கரையில்தான் நாகரசம்பேட்டை உள்ளது. இடையில் ஆற்றைக் கடக்க பாலம் உள்ளது. 

  நாகரசன்பேட்டையில் முன்னர் அமைந்திருந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வந்தன. அப்போது சேஷகணேசபுரம் என்ற பெயரில் அழைக்கப்பெற்று வந்த இத்திருத்தலம், பின்னர் நாகர்களின் அரசனான ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் நாகஅரசன் பேட்டை எனப்பட்டு நாகரசம் பேட்டை ஆனது. இறைவன் பெயர் நாகநாதர். கிழக்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார்.

  பெரிய கோயிலாக முகப்பு மண்டபம் அர்த்த மண்டபம் என இருந்த இக்கோயில், சிதைந்த பின்னர் ஊர் மக்கள் தற்போதுள்ளப்படி கட்டி முடித்துள்ளனர். இக்கோயிலுக்கு வந்து நாகநாதரை வழிபட்டால், விஷப் பாம்புகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது மட்டுமில்லாமல், நாகதோஷத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவன் நாகநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நாக தோஷம் நிவர்த்தியாகி, புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். 

  அம்பிகை நித்திய கல்யாணசுந்தரி. இவள் தன் பெயருக்கு ஏற்ப, பெண்களின் திருமணத் தடையைப் போக்கி, மனம் நிறைந்த குடும்ப வாழ்க்கையை அருள்வாள். பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள், அம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும். 

  இந்தக் கோயிலில் ஜுரஹரேஸ்வரர் என்ற லிங்க மூர்த்தியும் அவரது அம்பிகை விசாலாட்சியும் உள்ளார். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், மிளகு ரசம் வைத்து, ஜுரஹரேஸ்வரருக்கு நிவேதனம் செய்து பிரசாதமாகப் பருகினால், எப்படிப்பட்ட கடுமையான காய்ச்சலும் விரைவில் நீங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நிதர்சன உண்மை. 

  பிரகாரத்தில் விநாயகர், முருகன் இருவரும் தனிக்கோயில் கொண்டுள்ளனர். வடமேற்கு மூலையில் நாகர்கள் இருவரைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். தெற்கு நோக்கிய பைரவர் தனி சிற்றாலயம் தன்னில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

  கருவறை கோட்டங்களில் தென்முகன் அழகுடன் உள்ளார். இவரைப் பார்த்தாலே தெரியும் பழங்கோயில் எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்குமென. நாகரசன்பேட்டையைச் சேர்ந்த ராகவன் என்பவர் ஸ்ரீகாரைச்சித்தர் ஆக ஞானம் பெற்றுப் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். அம்பிகை நித்திய கல்யாணசுந்தரியின்மீது அதீத பக்தி கொண்டிருந்த இவர் பாடிய ‘கனக வைப்பு’ என்ற பாடல் திரட்டில்,‘சேஷகணேச புரத்தினிலே சித்தருளை தரிசித்தேனே’ என்றும், ‘நாகரசம் பேட்டையிலே நான் கண்டுய்ந்த ஞானரஸக் கோட்டையினை நாட்டுவேனே’ என்றும் போற்றிப் பாடியுள்ளார்.

  500 வருடங்களுக்கு முன்பு ஞானகுரு தீர்த்த சித்தர் என்பவர், அப்போது சேஷ கணேசபுரம் என்று அழைக்கப்பெற்ற நாகரசன் பேட்டைக்கு வந்திருந்தார். அப்போது, முழுவதுமாகச் சிதிலமடைந்து கிடந்த கோயிலுக்கு எதிரே ஒரு குழந்தை படுத்திருப்பதையும், நாகம் ஒன்று குழந்தையின் அருகில் வந்து படமெடுத்து, சில நிமிடங்கள் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, பின்பு வலம் வந்து சென்றதையும் கண்டார். இது ஞானம் பெற்ற குழந்தை இதனைத் தானே வளர்க்க விரும்புவதாகக் கூறி வளர்த்தார்.

  ஞானகுரு தீர்த்த சித்தரால் வளர்க்கப்பெற்ற அந்தக் குழந்தைதான் வல்லவச் சித்தர் என்ற சித்த புருஷர் ஆவார். அவர்தான் 500 வருடங்களுக்கு முன்பு சிதிலம் அடைந்து காணப்பட்ட இந்த நாகநாதசுவாமி கோயிலைப் புதுப்பித்துக் கட்டியவர். வல்லவச் சித்தரின் குருவான ஞானகுரு தீர்த்த சித்தரின் சமாதி, நாகரசன்பேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சாந்தவெளி என்ற ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அமைந்துள்ளது. இந்த வல்லவா சித்தரை தந்து மானசீக குருவாகக் கொண்டவர் ஸ்ரீ காரை சித்தர் ஆவார்.

  நாக ராஜனும், சித்தர்களும் வழிபட்ட இம்மூர்த்தியை நீங்கள் காண வேண்டாமா, வாழ்வில் வளம் பெற வேண்டாமா? 

  - கடம்பூர் விஜயன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai