கோடைக்கால நோய்கள்: கொத்து கொத்தாக முடி உதிருதா? சுக்கிர பகவானை வணங்குங்க!

இன்றைய அவசரமான வாழ்க்கை முறை மாற்றத்தினால் நம்முடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன்..
கோடைக்கால நோய்கள்: கொத்து கொத்தாக முடி உதிருதா? சுக்கிர பகவானை வணங்குங்க!

இன்றைய அவசரமான வாழ்க்கை முறை மாற்றத்தினால் நம்முடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் இன்னொரு விஷயமும் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. அதனைக் குறித்து நாம் தினமும் கவலைப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம். என்ன தெரியுமா? தலைமுடி. 

ஆம், இன்று ஆண், பெண் என இருபாலரிலும் இளம் வயதினருக்கு இருக்கும் பிரச்னையே தலைமுடி பிரச்சனைதான். தலை முடிப்பிரசனை இன்றைக்கு தலையாய பிரச்னையாக இருக்கிறது. சரியாக பராமரிப்பு இல்லாதது, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கொடுக்காமல் இருப்பது போன்றவை தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இன்றைக்கு முடியுதிர்வு பிரச்னையை சந்திக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது எனுமளவுக்கு எல்லாருமே முடி சம்மந்தமாக எதாவது ஒரு புகாரை வாசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும் அதிரடியாகத் தொடங்கி இப்போதே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. போதிய மழை இல்லாமல், வெயிலில் தலைகாட்ட முடியாத அளவுக்குக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் வறட்சி மிகுந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டோடு கோடைக்கால நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வெயில் காலத்தில் ஏற்படும் மிகச் சாதாரணமான சரும நோய் வியர்க்குரு. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை அதிகமாகச் சுரந்து வெளியேற முடியாமல் தடைப்படும்போது தலைமுடி கொட்டுதல், தலையில் அரிப்பெடுப்பது, பொடுகுத்தொல்லை, கொப்புளங்கள் உள்ளிட்டவை அதிக வியர்வையால் ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை காத்துக்கொள்வது அவசியம். 

வெயில் காலத்தில், 'அல்ட்ரா வயலட்' அதிகமாக வெளிப்படுவதன் காரணமாக, முடி நன்கு வளரும். என்றாலும் வெயிலின் பாதிப்பால், முடியின் நுனி வெடிக்கும். இதனால், முடி வளர்ச்சி தடைப்படும். வெயில் காலத்தில், சிலருக்கு தலையில் அரிப்பெடுக்கும். வெயில் காலத்தில், வியர்வையால் பொடுகு தொல்லை, முடி உதிர்வு, இளநரை பிரச்னை என ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்னை. என்றாலும் முடி உதிர்வில் இருந்து முடியைக் காப்பாற்றுவதற்குப் பலரும் படும்பாடு சொல்லி மாளாது. முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் உள்ளன.

முடி என்பதனை கேசம், கூந்தல், மயிர், என்று பலவாறு கூறுவர். மயிர் என்பது இன்று ஒருவரை இழிவாக ஏசுவதற்குப் பயன்படுகின்றது. தலையில் உள்ள மயிர் நம்மைப் பாதுகாப்பதற்கு இயற்கையளித்த வரமாகும். மனிதனுக்குள்ளதைப் போன்றே பிற உயிரினங்களுக்கும் இம்மயிர் உயிர்காக்கும் கவசமாகத் திகழ்கின்றது. தலைமுடி, தாடி, மீசை, புருவம், இமை என்று இடத்திற்கு ஏற்றாற்போன்று முடிக்குப் (மயிர்க்கு) பெயர் வழங்கப்படுகின்றது.

இன்று நடைமுறையில் பலரும் முடியைப் பற்றி மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள். தலைமுடியைக் குறித்து. "மயிரை கட்டி மலையை இழுப்போம் - வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடிகொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? முடி வளர்ச்சி மற்றும் முடி கொட்டுதலுக்கான ஜோதிட காரணம் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம்!

முடிப்பிரச்னை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இது புராண இதிகாச காலங்களிலிருந்தே தொடர்ந்துகொண்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் குறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று “கொங்கு தேர் வாழ்க்கை" என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை செயற்கை வாசனைப் பொருள்களாலேயே கூந்தல் மணம் பெறுகிறதா? என்ற கருத்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இன்று நீண்ட கருமையான கூந்தலை பற்றி சினிமா பாடலில்தான் கேட்கும் நிலையில் இருக்கிறது.  தலைக்கு முடி என்பது மிகவும் முக்கியமானதாகும். தலை நிறைய முடி இருந்தால் மட்டுமே முகத்திற்கும் அழகு உண்டாகும். தலை முடி நீளமாக அழகாக உள்ள பெண்களை எல்லா ஆண்களும் விரும்புவார்கள். தற்போது நிறைய முடி வளர்த்து குடுமி போட்டுக் கொள்ளும் ஆண்களும் உள்ளார்கள்.

தலைவாரி பூச்சூடிக் கொள்வது என்பது பெண்களுக்கே தனி அழகு தான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூட "தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை” எனத் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு முடி கொட்டும் என்றாலும் வழுக்கை என்பது அவ்வளவாக ஏற்படாது. ஆனால் முடி கொட்டி வழுக்கையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் ஆண்களே.

ஜோதிடத்தில் கூந்தல்

அழகான கருமையான முடியைப் பெற லக்கினமும் சுக்கிரனும் பலமாக இருக்கவேண்டும். சாதாரணமாக முடிக்கு காரகன் கேது என்றாலும் அழகிய கருமையான கூந்தலுக்குக் காரகன் சுக்கிரனாவார். எண்ணெய் வடியும் சிக்கு சேர்ந்த துர்நாற்றத்துடன் கூடிய கூந்தலுக்கு சனைஸ்வர பகவான் காரகனாவார். சுக்கிரன், சந்திரன் இருவரும் முக அழகிற்கு முக்கியமானவர்கள். கால புருஷ ராசியில் தலையைக் குறிக்கும் மேஷமும், ஜெனன ஜாதக லக்னமும் இவற்றுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. லக்னம் பலமாக இருந்தால் நல்ல உடலமைப்பு, முக அழகு, அழகான தலை முடி உண்டாகிறது.

சூரியன், செவ்வாய், சந்திரனையோ சுக்கிரனையோ பார்வை செய்தால் முடி உதிர்ந்து வழுக்கை உண்டாகும். லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றாலும் வழுக்கை உண்டாகும். சுக்கிரனும் சந்திரனும் சூரியன் செவ்வாயால் பாதிக்கப்படுவது நல்லதல்ல. சனி செவ்வாயைப் பலமாக பார்த்தாலும் முறையற்ற முடி அமைப்பு உண்டாகின்றது.

முடி உதிர ஜோதிட ரீதியான காரணங்கள்

1. காலபுருஷ ராசிப்படி தலைமுடியைக் குறிக்கும் பாவம் மேஷ ராசியாகும். மேஷ லக்னமும் அதன் அதிபதி செவ்வாயும் முடியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாவர். லக்னம் மற்றும் லக்னாதிபதியின் பலமும் முடி வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. 

2. குரு மற்றும் செவ்வாயின் இணைவும் முடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றது. முடி வளர்ச்சிக்குத் தேவையான பயோடின் எனும் சத்திற்கு குரு காரகனாவார். இரும்புச் சத்தினை குறிக்கும் போலிக் ஆசிட்டிற்கு காரகன் செவ்வாய் ஆவார். மேலும், முடி வளர்ச்சிக்குத் தேவையான மற்றொரு வைட்டமின் B-6க்கு குரு காரகன் என்கிறது மருத்துவ ஜோதிடம். குருவும் செவ்வாயும் பலமிழந்தோ அல்லது அசுப தொடர்போ கொள்ளும்போது மேற்கண்ட சத்து விகித குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டுகிறது.

3. லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு 6/8/12 மற்றும் அசுப தொடர்புகள் ஏற்படும்போது முடி கொட்டுகிறது. மற்றும் மேஷ லக்னம் செவ்வாய் இவர்களோடு சனி ராகு சேர்க்கை ஏற்படும்போது முடி கொட்டுகிறது.

4. சூரியன் உச்சம் பெற்றாலும் நீசம் பெற்றாலும் சூரிய சுக்கிர சேர்க்கை நெருங்கிய பாகையில் ஏற்பட்டாலும் முடி கொட்டுகிறது. முக்கியமாக எந்த லக்னமாக இருந்தாலும் சூரியன் லக்னத்தில் நின்றால் அவர்களுக்குப் பித்தம் (உஷ்ணம்) அதிகரித்து முடி கொட்டுகிறது.

5. சூரியன்-குரு-செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டாலும் முடி கொட்டுகிறது.

6. செவ்வாய், சனி சேர்க்கை முடி கொட்டுதல் மற்றும் வழுக்கையும் ஏற்படுகிறது.

7. லக்னத்தில் ராகு, மேஷத்தில் ராகு, செவ்வாயோடு ராகு, சுக்கிரனோனு ராகு சேர்க்கை பெற்றவர்கள் முடியை சாயம் இடுவது, பலவித கெமிக்கல்களை உபயோகப்படுத்துவது, நேர்படுத்துவது (ஸ்ட்ரைட்னிங்) வெட்டிவிடுவது போன்ற செயல்களால் முடியைச் சேதப்படுத்துவர்.

முடியுதிர்வை தடுக்க பரிகாரங்கள்

1. கேச என்னும் சொல் மயிர் என்பதைக் குறிக்க அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் ‘கேச’ என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை அதர்வண வேதத்தில் உள்ளது.

2. அதிக முடியைக் கொண்டவன் எனும் பொருளுடைய கேசவ பெருமாளை வணங்குவது முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்.

3. கேது ஸ்வரூபமான வராக மூர்த்தியை வணங்குவதும் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். முடிவளரும் தைலத்திற்கு அஸ்வினி என பெயர் வைத்ததிலிருந்தே கேது முடி வளர்ச்சிக்கு முக்கியமானவர் என்பது புலனாகும். வராக மூர்த்தி குடிகொண்டிருக்கும் திருப்பதியில் அவ்வளவு முடிக் காணிக்கை செலுத்தப்படுவதற்கு வராஹரும் கேதுவின் ஆதிக்கமுமே ஆகும்.

4. ரத்தம், இரும்புச்சத்து ஆகியவற்றின் காரகனான அங்காரகனை வைத்தீஸ்வரன் கோயிலில் வணங்குவது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் எனப்படும் இரும்புச்சத்தை அதிகரிப்பதும் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

5. மருத்துவ ஜோதிடம் திருவாதிரையை முடியின் நக்ஷத்திரமாக கூறுகிறது. எனவே அடி முடி காண முடியாத லிங்கோத்பவரை திருவாதிரை நக்ஷத்திர நாளில் வணங்குவது முடிவளர்சியை அதிகரிக்கும்.

6. திருச்சி மலைக்கோட்டையில் குடிகொண்டிருக்கும் தாயுமானவர் சன்னதியில் அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் மட்டுவார்குழலம்மையை வணங்கினால் சுகப்பிரசவம் மட்டுமல்லாது நீண்ட கூந்தல் வளரும் என்பது நிதர்சனம்.  

7. கருமையான கூந்தலுக்கு சனைஸ்வர பகவானை வணங்குவது, அவர் காரகம் பெற்ற நல்லெண்ணெய் ஸ்நானம் செய்வது, மற்றும் நீலி ப்ருங்காதி தைலம், ப்ருங்காமல தைலம், செம்பருத்தி தைலம், மருதாணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம், கரிசலாங்கண்ணி தைலம் போன்றவற்றைக் கூந்தலில் உபயோகிப்பது நல்ல பயனளிக்கும்.

8. பெண்களுக்கு ஜாதகத்தில் குரு பகவான் 6/8/12, வக்கிரம், நீசம் போன்ற நிலைகளில் இருப்பவர்கள் சர்க்கரை நோய், ஒபிசிடி எனும் உடல்பருமன் நோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சினையுடையவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை அதிகமாக இருக்கும். அத்தகைய குறைபாடு உள்ளவர்கள் தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் கொலீன், இனொசிடால், பயோடின் ஆகியவற்றோடு குருபகவானின் காரகம் நிறைந்த விட்டமின் B-6 மாத்திரைகள் உட்கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடல்லாமல் குழந்தை பாக்கியத்தையும் ஏற்படுத்தும்.

9. இவற்றோடு நம்ம ஹீரோ சுக்கிரனையும் கவனிக்கனுங்க. சுக்கிர பகவானின் அருளைப் பெற கும்பகோணம் கஞ்சனூர், திருச்சி ஸ்ரீ ரங்கம், சென்னை திருமயிலையின் சுக்கிர ஸ்தலமான வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள சுக்கிர பகவான், சென்னை மாங்காடு வெள்ளீஸ்வரர் காமாக்ஷி ஆகியவர்களை வணங்கி வரவேண்டும். அப்பதான் அழகான கூந்தலைப் பெறமுடியும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510
Email: astrosundararajan@gmail.com
Web: www.astrosundararajan.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com