ஜாதகப்படி வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு?

ஒரு தனிமனிதருக்கு, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களுக்குத் தேவையான உண்ண உணவு,
ஜாதகப்படி வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு?

1. ஒரு தனிமனிதருக்கு, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களுக்குத் தேவையான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகிய இவை மூன்றையும் யார் வேண்டுமானாலும் தர இயலும். ஆனால், வீடு யாராவது நீயே வைத்துக்கொள் எனத் தரமுடியுமா என்றால் தர முடியாது. மேலும், தானே ஒரு வீட்டைக் கட்ட முடியுமா  என்றால் அதுவும் முடியாது என்றே கூறலாம். பூர்வீக சொத்து ஆயினும் அதனை பெரும் பாக்கியம் ஒருவரின் ஜாதகத்தில் இல்லை என்றால் அவருக்கு எட்டாக்  கனி என்றே தான் சொல்லமுடியும். அப்படியே ஒரு ஜாதகருக்கு கிடைத்ததென்றாலும் அதில் வில்லங்கம் இல்லாமலும், அதிலிருந்து அதனை அனுபவிக்கும் யோகமும்  மற்றும் தனக்குப்பின் தனது பரம்பரைக்கு விட்டுச் செல்ல முடியாமல் போவதும் அவரவர் விதிப்பயனே ஆகும். 

2. எவை, எவை யார் யாருக்கு அமையும் என்பதை ஒருவரின் துல்லியமான பிறப்புத் தகவல்களான, பிறந்த -  நேரம், தேதி, மாதம், வருடம், மற்றும் பிறந்த இடம்  இவைகளைக் கொண்டே அறுதியிட்டுக் கூறிட முடியும். ஒருவரின் பிறப்பு நேரம் தான் அவரின் ஜென்ம லக்னமாக அமைகிறது. அதுவே அவரின் பூர்வ புண்ணியத்தையும்  மற்ற பாவங்களையும் தெளிவாக எடுத்துரைக்கும். எல்லோருக்கும் சொந்த வீடு கட்டி அதில் வசிக்க ஆசையாகத்தான் இருக்கும். ஆனால், இது அனைவருக்கும் சாத்தியமா  என்றால் இல்லை என்றே கூறலாம். 

சிலர், சொந்த இடமே இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சிலர், சொந்த இடம் இருந்தும் அதில் வீடு கட்டும் பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர். அப்படியே வீடு  கட்டினாலும் சிலர், அதில் வசிக்க இயலாமல், ஏதோ ஒரு காரணத்தால், வாடகை வீட்டில் இருக்கின்றனர். 

3. இவை யாவும் எவ்வாறு நிகழ்கிறது? சுவர் இல்லாமல் எப்படி சித்திரம் வரைய முடியாதோ, அப்படி தான் ஒருவரின் ஜாதகத்தில், செவ்வாய் பலம் இல்லாமல் இடம்  வாங்க முடியாது. அதுபோல சுக்கிரன் பலம் இல்லாமல் வீடு அதன் மேல் கட்ட முடியாது. செவ்வாய் தான் பூமி காரகன், சுக்கிரன் அழகான, அலங்காரமான வீடு  அமையச்செய்யும் கிரகம் ஆகும். சில பாவ தொடர்புகளும் ஒரு ஜாதகருக்கு, நிலம், வீடு அமையக் காரணமாகும். எனினும், ஒருவரின் சரியான பிறப்பு குறிப்புகளைக்  கொண்டு மட்டுமே, அவரின் ஜாதகத்தை அலசிப்பார்த்தே இவைகளை துல்லியமாகக் கூறமுடியும். உண்மைக்கு அவசரம், உண்மையாக இருக்க இயலாது என்பதற்கிணங்க,  அவற்றை மெதுவாக ஆராய்ந்து காணுதல், அவசியம் ஆகிறது. 
 
4. சொந்த வீடு பெறும் பாக்கியம் யாருக்கு?

லக்கினாதிபதியும், நான்காம் அதிபதியும் பரிவர்தனைப் பெற்ற ஜாதக அமைப்புடைய ஜாதகர் சொந்த வீடு பெறும் பாக்கியம்  உடையவர் ஆகிறார். 4-ஆம் பாவமும், அதன் அதிபதியும், சுக்கிரனும் சர ராசியிலிருந்தால், ஒரு ஜாதகர் பல வீடுகளை உடையவர் ஆகிறார். சுக்கிரன் ஆட்சி அல்லது  உச்சம் பெற்று, கேந்திரம் (1, 4, 7, 10-ல்) அல்லது திரிகோண (1, 5, 9-ல்) அமைப்பில் இருப்பது அல்லது 2-ஆம் பாவத்தில் 10-ஆம் அதிபதியுடன் இருப்பது, ஒரு  ஜாதகருக்கு சொந்த வீடு பெறும் பாக்கியம் பெறும் நிலையை அடைகிறார்.  4-ஆம் பாவதிபதி, ஒருவரின் ஜாதகத்தில், 11-ஆம் இடத்தில் இருப்பாரே ஆனால், அந்த ஜாதகருக்கு வீட்டினால் வருமானம் கிடைக்கப் பெறுவார். ஒருவருக்கு, அவரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு அதிபதி, லக்கினத்திலிருந்தாலும், 4-ல் இருந்தாலும் அல்லது 4-க்கு உரியவர் தன ஆட்சி, உச்ச வீடுகளிலிருந்தாலும், சுப கிரகங்களுடன் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு, மாளிகை போல் வீடு அமையும். 

5. உதாரணத்திற்கு, மைசூர் மகாராஜாவின் ஜாதகத்தைப் பார்ப்போம்

இதனை ஆய்வு செய்து விவரமாகப் பார்ப்போம்:-

1) கடக லக்கினத்திற்கு, 4 ஆம் வீட்டிற்கு அதிபதியாக வரும் கிரகம் சுக்கிரன் ஆவார். இந்த வீடு துலாம் ராசியாகி, அதன் அதிபதியானவரும், இயற்கை சுபருமான, சுக்கிரன்  ஆவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

2) 4-ஆம் பாவக அதிபதியான சுக்கிரன், லக்கினத்தில் பாக்கியாதிபதியான குரு உடன் சேர்க்கைப் பெறுகிறார். 

3) கடக லக்கினத்திற்கு, யோகாதிபதியானவரும், பூமி காரகருமான செவ்வாய் 2 ல் சூரியன் வீட்டில்  இருப்பதால் இன்றளவும் மிகவும் சிறப்பானதொரு அம்சமாகி  பார்வையாளர்களை ஈர்க்கிறது. 

4) மேலும், நவாம்சத்தில், லக்கினத்திற்கு 4 ல் பூமி காரகரான செவ்வாய்க்கு, பாக்கியாதிபரும், தன காரகருமான குருவின் பார்வை பெறுவது பலவிதமான சிறப்பு அம்சம்  கொண்ட அரண்மனையாக திகழ்கிறது. 

5) எல்லாவற்றிற்கும் மேலாக, லக்கினாதிபதி சந்திரன், 4 க்குரிய சுக்கிரன் பரிவர்தனைப் பெறுவதும் அவர்களே நவாம்சத்தில் அதே இடத்தில் இருப்பதால், வர்கோத்தமம்  அடைவதும் அரண்மனையில் வாழும் வாழ்க்கைக்கு வித்திட்டது எனலாம். 

6) சொந்த வீடு அமையாமல், வாடகை வீடு அமைவது யாருக்கு?

ஒருவரது ஜனன ஜாதகத்தில், லக்கினத்திற்கு 4 ஆம் இடத்தை, நீச்சம் பெற்ற கிரகம் / அஸ்தங்கம்  அடைந்த கிரகம் / கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்த கிரகம்  / 6 அல்லது 12-க்குரிய கிரகம்  / சத்ரு (பகை )  ராசியில் உள்ள கிரகம் / பகையான கிரகம் இவற்றுள் ஒன்றோ அல்லது பலவோ பார்த்தால்; ஒருவரது ஜனன ஜாதகத்தில், லக்கினத்திற்கு 4 ஆம் இடத்து அதிபதி, நீச்சம் / அஸ்தங்கம் / பகை பெற்றிருந்தாலும், 6-ஆம் இடத்தில அல்லது 12 ஆம் இடத்தில் இருந்தாலும், கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்தாலும்; அந்த ஜாதகர் வாடகை வீட்டில் தான் வாசிப்பார். 
          
7) ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பொதுவாக, 4-ம் பாவம், 4-ம் பாவ அதிபதி, சுக்கிரன் இவர்களுக்கு 6, 8, 12-ஆம் அதிபதிகளின் தொடர்பைப் பெற்றிருந்தாலோ அல்லது  ராகு / சனி இவர்களின் தொடர்பு பெற்றிருந்தாலோ அந்த ஜாதகருக்கு சொந்த வீடு இருந்தாலும் அவரால் சொந்த வீட்டில் ஏதேனும் ஒரு காரணத்தால், வசிக்க முடியாத  நிலை ஏற்படும்.

8) எந்த நிறத்தில், வீடு / ஆடை / வண்டி / வாகனம் வாங்க வேண்டும் மற்றும் எந்த நிறத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவதற்கு சோடச சக்கரம் எனும் D-16  பார்த்து அறியச் செய்யலாம். இந்த சக்கரத்தில் ராகு / கேதுக்கள் ஒரே ராசியில் இருக்கும். சாதாரணமாக 180 பாகைக்கு எதிரெதிர் இருக்கும் இந்த நிழல் கிரகங்கள், ஒரே  ராசியில் இருக்கும். அந்த ராசிக்குரிய வண்ணத்தைத் தவிர்ப்பது நல்லது. அதே போல் சுக்கிரன் நிற்கும் ராசிக்குரிய வண்ணத்தைப் பயன்படுத்துவதால் அதிர்ஷ்டமும்,  நன்மையையும் கிடைக்கப்பெறுவர் இது திண்ணம். வீடுகளுக்கு இந்த விதியைப் பயன்படுத்துதல் நலம் பயக்கும். 

9) ஒரு சிலருக்கு, பழைய வீடு அமைவதும்; கடன் பெற்று வீடு கட்டுவது யார் எனவும், கடன் பெறாமல் வீடு கட்டுபவர்கள் யார் என்பதையும்; எந்த நேரத்தில் அவைகள்  ஒரு ஜாதகருக்கு அமையும் என்பதைக் கூட இந்த ஜனன கால ஜாதக அமைப்பின் மூலமாக அறியமுடியும். 

10) வாகன யோகத்திற்கான கிரக நிலைகள்: சந்திரன், 4 ஆம் பாவத்தில் அமர்ந்து உச்சம் பெற்றால், அந்த ஜாதகர் பல வாகனங்களை உடையவர் ஆகிறார். சுக்கிரனும் பலம் பெற்றிருப்பின் விமானமும் உடையவர் ஆவார். 2, 11-ஆம் அதிபதிகள் பரிவர்தனைப் பெற்று 4-ல் உச்சமடைந்து சந்திரன் இருப்பின் வாகன வசதி கொண்டவராக இருப்பார். 

சுக்கிரனும், 4-ஆம் அதிபதியும் வலுவிழந்து இருந்தாலும், பலம் இழந்த கிரகம் அவற்றில் ஒரு கிரகத்தைப் பார்த்தாலும், வாகனத்தால் நஷ்டம் ஏற்படும் என அறியலாம்.  4-ம் அதிபனும், சுக்கிரனும் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால், முறையே, வண்டிகள் பழுது, நஷ்டம், கண்டமும், மிகுந்த பொருள் இழப்பும் ஏற்படும்.

11. வீடு எப்போது கட்ட முடியும்?
1) முதலில் வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு ஜாதகருக்கு இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும். 

2) 4-ஆம் வீட்டுடன், செவ்வாய் சம்பந்தப்பட்டால் வீடு கட்டும் யோகம் ஏற்படும். இதனை, ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் மட்டும் அல்லாமல், அந்த ஜாதகருக்கு நடைபெறும் தசை, புத்தி காலங்களிலும், கோச்சார ரீதியாக 4-ஆம் வீட்டுடன், செவ்வாய் சம்பந்தப்படும் காலங்களிலும் இவை நடந்தேற வாய்ப்பு உண்டு. 3) அதேபோல், 4-ம் வீட்டுடன், சுக்கிரன் சம்பந்தப்பட்டால், வாகன யோகம் ஏற்படும்.

12. இரண்டு சக்கர வாகனமா அல்லது நான்கு சக்கர வாகனமா?
ஒரு ஜாதகருக்கு, வாகன யோகம் இருந்து, சுக்கிரன், நாலு கால் ராசியான மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம், தனுசுவின் பின் பாதி ஆகியவர்களுடன், சம்பந்தப்பட்டால்,  அந்த ஜாதகர், நாலு கால் வாகனமான கார் வாங்குவார் என அறுதியிட்டுக் கூறலாம். ஒரு ஜாதகருக்கு, வாகன யோகம் இருந்து, சுக்கிரன் மிதுனம், மீனம், தனுசுவின், முன் பாதியுடன் சம்பந்தப்பட்டால், அந்த ஜாதகர், இருசக்கர வாகனம் வாங்குவார் எனலாம். மேலும், கிரகங்களின் ஷடபலம் கொண்டு, விலை உயர்ந்த கார் / கட்டிடம் கட்ட,  ஜாதகரால் பெற இயலுமா எனக்கூறலாம்.    

13. ஒவ்வொருவர் பிறந்த நட்சத்திரமும், ஒவ்வொரு கிரக சாபம் பெற்றுள்ளதாக இருக்கும். எனவே, செவ்வாய் கிரக சாபம் பெற்ற நட்சத்திரங்களான, கார்த்திகை, பூரம், மூலம் மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், எளிமையான செவ்வாய்க்குரிய பரிகாரங்களைச் செய்து முடித்து பின் ஒரு நிலமோ அல்லது நிலத்தின் மீது வீடோ அல்லது கட்டிய வீடோ வாங்குவது உசிதம். அதே போல், சுக்கிர கிரக சாபம் பெற்ற நட்சத்திரங்களான, திருவாதிரை, சித்திரை மற்றும் திருவோணம்   நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், எளிமையான சுக்கிரனுக்குரிய பரிகாரங்களைச் செய்து முடித்து பின் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்குவது நல்லது. 

- ஜோதிட ரத்னா தையூர் சி.வே. லோகநாதன்

தொடர்புக்கு:- 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com