Enable Javscript for better performance
அனேக சித்தர்கள் யோகிகள் வாழ்ந்த மலையாண்டவர் கோயில்!- Dinamani

சுடச்சுட

  
  FB_IMG_1555038680229

   

  கடலூர் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியான பண்ருட்டி பகுதி சித்தர்கள் வாழ்ந்த பூமி. குறிப்பாக கெடிலம் நதிக்கரை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். 
   
  பண்ருட்டி - வடலூர் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியை ஒட்டி கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 9 கி.மீ தொலைவில் உள்ளது சி.என் பாளையம், எனப்படும் சென்னப்ப நாயக்கன் பாளையம் இங்கு ஊருக்குள் ஒரு சிவாலயமும், மலை மீது ஓர் சிவாலயமும் உள்ளது. இதனை மலையாண்டவர் கோயில் என அழைக்கின்றனர். புஷ்பகிரி எனவும் அழைக்கப்படுகிறது. 
   
  சுமார் நூற்றுப்பத்தடி உயரம் கொண்ட இம்மலையில் 5, 6-ம் நூற்றாண்டுகளில் சமண துறவிகளும், 7-ம் நூற்றாண்டுகளில் செங்கல் தளியாக ஒரு சிவன் கோயிலும் சப்தகன்னியர் கோயிலும் இருந்துள்ளது. இதில் பிராமி, மாகேஸ்வரி மட்டும் கிடைத்துள்ளன. இந்த சிவனே மலையாண்டவர் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

  பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு சிவனுக்கு ராஜராஜேசுவரர் எனவும், அம்பிகை ராஜராஜேஸ்வரி எனவும்  பெயரிடப்பட்டு முழுமையான சிவன் கோயிலாக உருவெடுத்தது. மலை அடிவார ஊருக்கு ராஜராஜேசுவரம் எனப் பெயர் வழங்கப்பட்டது. பின்னர் நாயக்கர் காலத்தில் சென்னப்ப நாயக்கர் இப்பகுதியின் பாளையக்காரராக ஆனவுடன் இவ்வூர் சென்னப்ப நாயக்கன் பாளையம் என அழைக்கப்பட்டது. 

  பின்னர் 1762-ல் ஆற்காடு நவாப் இப்பாளையத்தை ஆங்கிலேயரிடம் வழங்க அதன்பின் அப்பு முதலியார், சங்கர நாயக்கர் எனக் கைமாறியது. ஆங்கிலேய - டச்சு போரில் இம்மலை பாசறையாக மாறியது. அப்போது கோயிலின் பல சிலைகள் சிதைக்கப்பட்டன. 18-ம் நூற்றாண்டில் இம்மலையில் வசித்த சன்யாசி சகோதரர்கள் சொக்கலிங்க சுவாமிகள், முத்தையா சுவாமிகள் ரசவாத மருத்துவ பணிகள் செய்து மக்களை வாழ்வித்தனர். இக்கோயில் திருப்பணிக்குப் பெரிதும் உதவினர். இவ்விருவரது சமாதி மலையடிவாரத்தில் உள்ளன.

  இவ்விரு சகோதரர்களின் குருவான வைணவ ஆச்சாரியார் விலட்சனானந்தா சுவாமிகள் இத்தலம் வந்து கணபதி, முருகன் சிலைகளின் அடியில் பஞ்சாட்சர மந்திர தகட்டை வைத்து குடமுழுக்கு செய்தார். அதனால் அன்று முதல் அனைத்து வைபவங்களும் கணபதியை முன்னிறுத்தியே செய்யப்படுகிறது. தெப்ப உற்சவமும் விநாயகர் காண்கிறார்.

  ஞானசம்பந்தரைப் போல் குழந்தையிலேயே இறைவன் அருள்பெற்ற பரங்கிப்பேட்டை குழந்தை சுவாமிகள் சிலகாலம் இம்மலையில் தங்கி தவத்தில் இருந்தார். இதனை அறிந்த இப்பகுதி மக்கள் பெருமளவில் இம்மலைக்கு வரத் தொடங்கினர். இவர் இளநீர் மற்றும் வேப்பங்கொழுந்தை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்தவர். மலையின் கிழக்கில் இருக்கும் பிரணவ தீர்த்தத்தில் அடிக்கடி ஜலநிஷ்டையில் இருப்பார். பின்னர் ஓர் நாள் வெளிவந்து காய்ந்த குச்சிகளை எரியூட்டி இறைவனை ஜோதியாக நினைந்து வழிபடுங்கள் எனக் கூறுவார்.

  ஒரு நாள் நீங்களே எனக்குத் தீபம் காட்டுங்கள் என சிஷ்யர்களிடம் கூறி ஜல நிஷ்ட்டையில் ஆழ்ந்தார் மூன்று நாள் ஆகியும் வராமல் போகவே சிஷ்யர்கள் அவரை வெளிக்கொண்டுவந்து பார்த்தபோது சமாதி அடைந்திருந்தார். அவரது சமாதி இன்று இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் நவஜோதிர் லிங்க வரிசை அருகில் உள்ளது.

  இக்கோயிலுக்கு சமஸ்கிருதத்தில் புஷ்பாசல புராணம் என ஒன்று எழுதப்பட்டு பின்னர், அதனை திருவாடுதுறை ஆதீன வித்துவான் சுப்பிரமணிய தம்பிரான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மலையின் உச்சியில் கிழக்கு நோக்கிய மூன்று கருவறைகள் உயர்ந்த விமானங்களுடன் உள்ளது. நடுவில் ராஜராஜேச்வரரும் இடத்தில் விநாயகரும் வலதில் தண்டாயுதபாணியும் உள்ளனர். அருகில் தெற்கு நோக்கியபடி அம்பிகை ராஜராஜேஸ்வரி உள்ளார். இம்மூன்று கருவறைகளின் எதிரில் நீண்ட கூம்பு வடிவ மண்டபம் உள்ளது. தற்போது முகப்பு மண்டபம் ஒன்றும் கொடிமரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

  மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட மலையாகும். இந்த கோவிலில் தைப் பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது 
   
  இக்கோயிலைச் சுற்றி ஏழு லிங்கங்கள் உள்ளதைக் காணலாம், இந்த ஏழும் ஏழு சித்தர்கள் அதிட்டானம் எனக் கூறுகின்றனர். இவர்கள் சட்டி பரதேசி சுவாமிகள், சுரைக்காய் சித்தர், பிராமண சந்நியாசி, கரூர் சுவாமிகள் எருக்கம்பால் சித்தர், பச்சை கந்த சுவாமிகள் இன்னும் பெயர் அறியா சித்தர்கள்.

  பெரிய மரத்தடியில் அகத்தீஸ்வரர் உள்ளார். சண்டேசர் மற்றும் துர்க்கையும் உள்ளார்கள். வடகிழக்கில் நவக்கிரகம், பைரவர், சூரிய சந்திரன்கள் உள்ளனர். கருவறையின் நேர் பின்புறம் நவஜோதிர் லிங்கம் உள்ளது. மலையின் கிழக்கில் சித்தர் இறைவனுடன் ஐக்கியமான சிறப்பு வாய்ந்த பிரணவ தீர்த்தம் உள்ளது. அதனை ஒட்டி சிவப்பிரகாச தீர்த்தம் உள்ளது. இதில் தான் தெப்போற்சவம் நடைபெறும். கோயிலின் தென்புறம் நால்வர் சன்னதியும், சப்தகன்னியர் சன்னதியும் உள்ளது.
   

  இம்மலையில் கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பல்லவர் கால சிவன் கோயில் இருந்ததற்கானச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்தில் இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்ற போது இங்கு பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
   
  இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளனர். ஒரு அறை விநாயகரின் கீழ் உள்ளது மற்றொன்று அம்பிகையின் கீழ் அமைந்துள்ளது 15x5 என்ற அளவில் அறை உள்ளது. இதன் விதானத்தினை மரக்கட்டைகள் தாங்குகின்றன. இதில் கணபதியின் கீழ் இரு மண் புற்றுக்கள் மனிதனைச் சுற்றி எழும்பியதை போல் காட்சியளிக்கின்றனவாம். அம்பிகையின் கீழ் உள்ள நிலவறையில் பலி  பீடங்கள் இரண்டு உள்ளன. இங்கிருந்து கிடைக்கப்பெற்றது அபூர்வமான வள்ளலாரின் அமர்ந்த நிலை ஐம்பொன் திருமேனி. இச்சிலையை ஆய்வு செய்தபோது, "ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி என்று சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளைப் படித்ததில் இது வள்ளலாரின் உருவச் சிலை' என உறுதி செய்யப்பட்டது.
   
  இச்சிலையை 19.4.1905-ம் ஆண்டு பண்ருட்டியைச் சேர்ந்த ச.சொக்கலிங்க செட்டியார், விழமங்கலம் ந.வேலாயுத செட்டியார் தருமம் செய்ததாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 30.1.1874-ல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டுக் கொண்டார் வள்ளலார். 
   
  அவ்வப்போது தனிமையில் தியானத்திற்குச் செல்லும் வள்ளலார், 1862-ல் வள்ளலார் தனது அன்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "கருங்குழியிலிருந்து வடமேற்கே ஓர் ஊருக்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு என்றும், தற்காலத்தில் யான் வசிக்கும் இடம் இதுவென்று குறிப்பதற்கூடாது' என்றும் அவர் எழுதியுள்ளார். எனவே அவர் வாழ்ந்த இடங்களில் மலையாண்டவர் மலையும் (புஷ்பகிரி) ஒன்று என அறியப்படுகிறது. 
   
  இம்மலையின் மேலிருந்து வடகிழக்கில் பார்த்தால் தூரத்தில் விலங்கல்பட்டு சுப்பிரமணியர் மலைக்கோயில் தெரியும். சித்த புருஷர்களின் அருளும், முலிகை வனமும், சுத்தமான காற்றும் செம்மலை ஊற்றுக்கள் தரும் தீர்த்தமும் கொண்ட இம்மலை நல்ல அதிர்வுகளை நம்முள் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. 
   
  - கடம்பூர் விஜயன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai