சுடச்சுட

    
    car


    திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை அதிகார நந்தி உற்சவமும், 63 நாயன்மார்கள் உற்சவமும் நடைபெற்றன.
    காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, நாயன்மார்களால் பாடல் பெற்ற திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் அதிகார நந்தி உற்சவமும், 63 நாயன்மார்கள் உற்சவமும் நடைபெற்றன. 
    இதையொட்டி மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர், தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரர், 63 நாயன்மார்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின் அலங்கரிக்கப்பட்ட சிவன், பார்வதி, விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட உற்சவர்கள் மற்றும் 63 நாயன்மார்களின் ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர்களும், நாயன்மார்களும் தேரடி பேருந்து நிலையம், கிரிவலப் பாதை வழியாக மாடவீதிகளை வந்தடைந்தனர். 
    ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டு கிரிவலப் பாதையில் நடந்து சென்றனர். கோடைக் காலம் என்பதால் அப்பாதை முழுவதும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்ததால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு இதமாக இருந்தது. கிரிவலப் பாதை வழி நெடுகிலும் பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட், உணவு வகைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன், தக்கார் மற்றும் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் விஜி உள்ளிட்ட பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai