ஜோலார்பேட்டை அருகே மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள்

ஜோலார்பேட்டை அருகே கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் கற்சிற்பத்தை அப்பகுதி மக்கள் செவிட்டீஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள்


ஜோலார்பேட்டை அருகே கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் கற்சிற்பத்தை அப்பகுதி மக்கள் செவிட்டீஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரில் உள்ளது ஏலகிரி கிராமம். ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் சமண சமயத்தைச் சார்ந்த கருங்கல்லினால் ஆன தொன்மையான மகாவீர தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
 இந்த கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி வளாகத்தின் பின்புறம் வயல்வெளியில் ஒரு பாழடைந்த கிணற்றின் அருகில் இந்தச் சிற்பம் இருந்தது. 
எந்த தெய்வம் என அறியப்படாமலே இருந்து வந்தது. தீர்த்தங்கரர், சமண மதம், மகாவீரர் ஆகியவை பற்றிய புரிதல் இப்பகுதி மக்களிடம் இல்லை. 
எனினும் ஏலகிரி கிராம மக்கள் சிலரின் கூட்டு முயற்சியால் கிணற்றின் அருகில் நூறு சதுர அடி பரப்பளவில் ஒரு கட்டடம் எழுப்பி, அதற்குள் தொன்மையான இச்சிற்பத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர். இச்சிற்பத்தை செவிட்டீஸ்வரர் என்ற பெயரால்  மக்கள் வழிபடுகின்றனர். 
இது தொடர்பாக, தொன்மையான சமண மதத் தடயங்கள் உள்ள இடங்களில் விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டு வரும் சமண ஆர்வலர் பேரணி ஸ்ரீதரன் தினமணி செய்தியாளரிடம்  கூறியது: 
மலைகள், குன்றுகள், இயற்கையான குகைகள் உள்ள பகுதிகளில் தமிழகத்தில் இன்றும் 150-க்கும் கூடுதலான இடங்களில் பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த சமணச் சான்றுகள் உள்ளன. கற்படுக்கைகள், புடைப்புச் சிற்பங்கள், மருந்துக் குழிகள், துறவியர்களால் நடத்தப்பட்ட பள்ளி குறித்த கல்வெட்டுகள் என மலை சார்ந்த இடங்களில் உள்ள இத்தகைய வரலாற்று ஆவணங்கள் இன்றும் தொன்மையை நமக்கு விளக்குகின்றன.
இந்த மலைப் பகுதிகளில் சமணத் துறவியர்களால் நடத்தப்பட்ட பள்ளிகள் குறித்து தெரிவிக்கும் வகையில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,சித்தூர் மாவட்டங்களில் பல கிராமங்களின் பெயர்கள் பள்ளி என்ற பெயரோடு முடிவுற்று அழைக்கப்படுவதை நாம் அறியலாம்.
ஏலகிரி கிராமத்தை தொடர்ந்து கணமந்தூர், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் சமண மதத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான தொன்மையை உணர்த்தும் சான்றுகள் உள்ளன.
ஏலகிரி கிராமத்தில் கிழக்கு திசை நோக்கி அர்த்தப்பரியங்காசன கோலத்தில் தியான நிலையில் அமர்ந்துள்ள இந்தத் தீர்த்தங்கரரின் உருவ அமைதியைக் காண்கையில் கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டுக்குள் இச்சிற்பம் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. தீர்த்தங்கரர் தலையின் பின்புறம் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்பதைக் குறிக்கும் முக்குடை, அரை வட்ட வடிவிலான பிரபாவளி, இருபுறமும் சாமரம் வீசும் சாமரதாரிகள் என நேர்த்தியான முறையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
105 செமீ உயரமும் 85 செமீ அகலமும் கொண்டதாக இச்சிற்பம் அமைந்துள்ளது.
எளிய நிலையில் வாழும் இந்த ஏலகிரி மக்கள் தொன்மையான இந்த சிற்பத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். பல இடங்களில் கவனிப்பாரின்றி உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் கனமந்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் தொல்லியல் துறை செய்ய வேண்டிய பணியை மக்களே தன்னார்வத்துடன் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
சமண ஆய்வாளர்கள் அனந்தராஜ், அகஸ்தியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com