சுடச்சுட

  

  சொர்ணமய வாழ்வளிக்கும் சொர்ணகிரீஸ்வரருக்கு ஏப்.17-ல் திருக்குடமுழுக்கு

  By DIN  |   Published on : 15th April 2019 03:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lingam

   

  குன்றுதோராடும் குமரன் என்பர் நம் முன்னோர். குன்றுகளில் குமரன் திருக்கோயில்கள் அமைந்திருக்கும் அதுபோலவே சில இடங்களில் குமரனின் தந்தை ஈசனுக்கும் குன்றுகளிலும், மலைகளிலும் சிவன் கோயில்கள் அமைத்துப் பூஜித்து வந்தனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் ஆத்தூர் கிராமத்தில், மிகப்புராதனமான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றிலும் 6 சிவன்கோயில்கள் பூமிக்குள் மறைந்திருந்தது. ஒவ்வொன்றாக வெளிப்பட்டது. ஊரைச் சுற்றிலும் 7 சிவன் கோயில்கள் சீறும் சிறப்புமாய் வழிபாடுகள் நடைபெற்றிருந்தது. கலியின் தாக்கத்தால் சிதிலமடைந்து சில கோயில்கள் புதையுண்டு போயின.

  ஆறாவது கோயிலாக வெளிப்பட்ட ஒரு கோயில் ஆத்தூர் வடக்கால் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதையுண்ட சிவலிங்கமும், நந்தியும் பெருமானும் ஒரு குன்றில் வெளிப்பட்டனர். தற்போது அச்சிறிய குன்றில் சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ சொர்ணகிரீஸ்வரர் என்ற பெயரில் ஈசனும் அம்பிகையும் அருள் கூட்டுகின்றனர்.

  அருள்மிகு சொர்ணகிரீஸ்வரர் பெருமானுக்கு கிழக்கு நோக்கிய சன்னதியும், அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகைக்கு கிழக்கு நோக்கிய தனி சன்னதியும் அமைந்துள்ளது. கோஷ்டங்களில் ஸ்ரீ நர்த்தன கணபதியும், ஸ்ரீ தட்சணாமூர்த்தியும் தெற்கு நோக்கியும், ஸ்ரீ மகாவிஷ்ணு மேற்கு நோக்கியும் வடக்கு நோக்கி ஸ்ரீ பிரம்மாவும், ஸ்ரீ விஷ்ணு துர்க்கையும் அமைந்துள்ளன.

  தெற்கு நோக்கி ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பெருமானுக்குத் தனி சன்னதி அமைந்துள்ளது.    திருக்கோயிலுக்கு முன்புறம் நந்திமண்டமும் பலி பீடமும் அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின் முகமண்டபத்தின் துவாரத்தின் வலது பக்கத்தில் விநாயகப் பெருமானும், இடது பக்கத்தில் ஸ்ரீ பாலமுருகனும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

  ஆலயத்தின் சிறப்புகள்

  ஸ்ரீ சொர்ணகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மலைக்கு சொர்ணகிரி என்று பெயர். மேலும் இது சொர்ணமயமான சேத்திரமாகப் புராதனத்தில் விளங்குகிறது. இந்த கிரியில் அருள்பாலிக்கும் ஈசனும், அம்பிகையும் மற்றுமுள்ள பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்பவர்களுக்கும், மலையைக் கிரிவலம் வருபவர்களுக்கும் வாழ்க்கை சொர்ணமயமாகும் என்பது பெரியோர் வாக்கு.

  இத்தல ஈசனையும், அம்பிகையையும், தங்க நகை வியாபாரம் செய்பவர்கள் வணங்கி வழிபட்டால் வியாபாரம் அபிவிருத்தியாகும். மேலும் பக்தர்கள் வழிபட்டால் தங்க ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழ்வுறுவர்.  

  தற்போது திருப்பணிகள் நிறைவுற்று மங்களகரமான விகாரி ஆண்டு சித்திரைத் திங்கள் 2-ம் நாள் (15.04.2019) திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் துவங்கி சித்திரைத் திங்கள் 4-ம் நாள் (17.04.2019) புதன்கிழமை காலை 9.30 மணிக்குமேல் 11.00 மணிக்குள் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. பக்தகோடிகள் கலந்து கொண்டு பொன், பொருள் உதவி செய்து எம்பெருமான் திருவருளுக்கு பத்திரராகலாம்.

  பேருந்து வசதிகள் : செங்கல்பட்டிலிருந்து - காஞ்சிபுரம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஆத்தூர் கிராமம் உள்ளது. அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் அடிக்கடி செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வரை செல்கின்றன. ஆத்தூர் என்று கேட்டு இறங்கவும். அங்கிருந்து 1 கி.மீ. தூரம் நடந்து சென்றால் கோயிலை அடையலாம்.

  வாகனங்களில் செல்வோர் மகேந்திரா சிட்டிக்கு எதிரில் செல்லும் செட்டிபுண்யம் ஹயக்ரீவர் கோயிலைத் தாண்டி வடகால் கிராமம் சென்றடையலாம்.

  - க. கிருஷ்ணகுமார்

  மேலும் தொடர்புக்கு: 9940039252

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai