சமயபுரம் தேரோட்டம்: செவ்வாய் தோஷம் நீங்க சமயபுரம் மாரியம்மனை வணங்குங்க!

மாரியம்மன் என்றவுடன் நம் மனக்கண்முன் இருப்பவள் சமயபுரம் மாரியம்மன் தான்.
சமயபுரம் தேரோட்டம்: செவ்வாய் தோஷம் நீங்க சமயபுரம் மாரியம்மனை வணங்குங்க!

மாரியம்மன் என்றவுடன் நம் மனக்கண்முன் இருப்பவள் சமயபுரம் மாரியம்மன் தான். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நாளை (16/04/2019) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நாளை விகாரி ஆண்டின் சித்திரை 3-ம் நாள் முதல் செவ்வாய்க்கிழமை மாதவன் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்குத் தேரோட்டம் நடைபெற உள்ளது. 

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மஞ்சள் ஆடை உடுத்தி, கடும் விரதம் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் சமயபுரத்திற்கு வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

தன்னை நாடி வருவோருக்கு மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களைக் காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க, பக்தர்களுக்காக மாரியம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி காலமாகும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்குத் தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாகப் படைக்கப்படும். 

தேரோட்டம்

தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலைகளையோ சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்துவரும் ஒரு விழாவாகும். இந்தியாவிலும், இலங்கையிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது.

கோயில்களைப் பொருத்து 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்த திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்.

தத்துவம்

கொடியேற்றம் முதல் தீர்த்த திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்துச் சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத்திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

தேரின் பல்வேறு உறுப்புக்களும் அண்டத்திலும், இவ்வுலகத்திலும் உள்ள பல்வேறு அம்சங்களைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மக் கதையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

பச்சை பட்டினி விரதம்

அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுர மாரியம்மன் கோவிலில் மட்டும் தான். அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான்.

இந்த அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பது கிடையாது. இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே ஆகாரம். இதற்குப் பச்சை பட்டினி விரதம் எனப் பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார்.

பிள்ளை நலமில்லாத போது தாய் தானே நோன்பு நோற்பால், அதுபோல் அகில உலகத்தின் தாயான மாரியம்மன் தன் குழந்தைகள் நலத்துக்கு விரதம் இருப்பது, அவளின் தாய் உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. தற்போது அம்பாள் அந்த விரதத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள்.

பூச்சொரிதல் முடிந்த நிலையில் சித்திரைத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இதையொட்டி மூலஸ்தானத்திலிருந்து அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளி நாளை காலை திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். இதில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுப்பது மிகவும் காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.  

ஜோதிடத்தில் தேரோட்டம்

ஜோதிடத்தில் சொகுசான வாகனங்களுக்குக் காரகன் சுக்கிரன் ஆவார். தேரில் அலங்காரமும் சேர்ந்து இருப்பதால் சுக்கிரன் பொருத்தமானதாகும். சுக்கிரன் என்றாலே அழகு என்பதால்தான் "திருவாரூர் தேரழகு" என்கிறார்கள் போலும்.

சாதாரணமாக ராஜாக்களும், ஆட்சி செய்பவர்களும் செல்லும் தேர் என்றால் சுக்கிரனோடு நிறுத்திவிடலாம். ஆனால் தெய்வ திருத்தேர் என்றால் மேலும் சில கிரகங்கள் காரகமாகின்றனர்.

உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரங்கள் குதிரையாகவும், ஏழுநாட்களைக் குறிப்பதாகவும் 12 மாதங்களைக் குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேருக்குத் தெய்வீகத் தன்மையைத் தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மையப் பகுதிக்கு குரு காரகன் ஆவார். மேலும் பயணத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.

தேரோட்டம் என்பது ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் தன்மைகளில் அழிக்கும் தன்மையைக் குறிப்பதாலும் தேர் மெதுவாகச் செல்லும் தன்மை கொண்டதாலும் சனைஸ்வர பகவானும் காரகனாகின்றார்.

செவ்வாயும் சமயபுரம் மாரியம்மனும்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்.  மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்புத் துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலம், சமயம் இரண்டும் ஒரே பொருள் என்பது அனைவரும் அறிந்ததே! காலபுருஷனும் சமயபுரம்  மாரியம்மனும் ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

ஜோதிடத்தில் விதவையைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். தர்மத்தைக் காக்க மாரியம்மன் விதவை கோலத்திலும் நின்றதால் மாரியம்மன் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தவர் என்பது புலனாகிறது. எனவே, ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தால் திருமண வாழ்வில் இன்னல்களை அனுபவித்துவருபவர்கள் ஸ்ரீ சமயபுரத்து ஆத்தாளை வணங்கத் திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் யாவும் நீங்கி மகிழ்ச்சி நிலவும். மேலும் செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் ஆகாமல் தவிக்கும் ஆண்களும் பெண்களும் சமயபுரம் மாரியம்மனை முக்கியமாக செவ்வாய்க் கிழமையில் வணங்கிவர விரைவில் திருமணம் கைகூடும்.

செவ்வாயின் வீடான மேஷத்தில் சூரியன் உச்சமாகும் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்க்குக் காரகர் செவ்வாய் ஆகும். தற்போது கோடை வெம்மையின் காரணமாகப் பல இடங்களில் முக்கியமாகத் திருச்சியில் அம்மை நோய் கண்டவர்கள் சமயபுரம் மாரியம்மனை வணங்கிவர அம்மை நோயிலிருந்து பரிபூரணமாகக் குணமாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடத்தில் ரத்தத்தின் காரகர் செவ்வாய் என்பது அனைவரும் அறிந்ததே! ஜாதகத்தில் செவ்வாய் 6/8/12 வீடுகளிலோ, நீசமடைந்தோ, சனி, ராகு கேதுக்களுடன் சேர்ந்தோ நின்று அதனால் ஏற்படும் ரத்த சம்பந்தமான நோய்கள் முக்கியமாக உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சோகை, பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு கோளாறுகள், பெரும்பாடு போன்ற நோய்களினால் கஷ்டப்படுபவர்கள் சமயபுரம் மாரியம்மனை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்து குங்கும அர்ச்சனை செய்துவர அனைத்து நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேலோங்கும்.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே!

எனும் அபிராமி அந்தாதியின் வரிகளுக்கிணங்க பக்தர்களின் துயரினை அழித்து தர்மத்தை நிலைநாட்டப் பச்சை பட்டினி விரதமிருந்து சித்திரை தேரில் பவனிவரும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்தாலே வாழ்வில் வளம் சேரும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com