விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதவையா?

ஒரு ஆணுக்கு திருமணம் செய்விக்கும் போது சில நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதகங்களை சில குடும்பத்தினர்..
விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதவையா?

1. ஒரு ஆணுக்கு திருமணம் செய்விக்கும் போது சில நட்சத்திரங்களில் பிறந்த பெண் ஜாதகங்களை சில குடும்பத்தினர் தகுந்த காரணமின்றியும், சரியாகப் புரிதல் இன்றியும்  தவிர்க்கிறார்கள். அதாவது, விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் தான் அவைகள். இதனைப் பற்றி விவரமாக இந்தக் கட்டுரையில் காண்போம்.  அவர்களிடம் காரணம் கேட்டால், விசாகம் கொழுந்தனாருக்கு ஆகாது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை, மூலம் போன்றவை மாமனாருக்கு ஆகாது என சில  ஜோதிடர் தெரிவித்ததாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பெண்ணால், புகுந்த வீட்டினருக்கு, பாதிப்பு ஏற்படுமா? ஜோதிடத்தில் இது போன்று சில  பல தகவல்களை அள்ளி தெளித்துவிட்டு சிலர் செல்வதால் பெண்ணைப் பெற்றவர்களுக்கு மிகவும் மனவேதனை அளிக்கத்தான் செய்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை  என ஆராய்வோம். 

2. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ எந்த ஒரு ஜோதிட மூல நூலிலும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாகக் கூறவேண்டுமானால்,  ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் போன்ற உவமைகள் ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவில்லை. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை, ஆனி மாதத்தில்  மூல நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர் / ஜாதகி அரசாளும் என்றும் பின் மூலம் அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பின் என்பது கடைசி பாதமான நான்காம் பாதத்தையே குறிக்கும். அதாவது பின் மூலம் (மூலம் 4-ஆம் பாதம்) நிர்மூலம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள், அரசு, அரசு தொடர்பானவர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள் என்றும், பின் மூலம், மூலம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள், எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதே அதன் பொருள்  ஆகும்.

3. இப்போது, நாம் மிக முக்கியமாகக் குறிப்பிடப்போவது அபிநந்தன் எனும் மாபெரும் விமானப்படை தளபதி. இவரின் நட்சத்திரம் மிருகசீரிடம் பாதம் 4. இவர் எதிரி நாட்டில் சிக்கி, எதிர்கொண்டு வந்ததை யாவரும் அறிவர். எல்லா நட்சத்திரங்களின் 4ஆம் பாதம் உடையவர்கள் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ போராடி வெற்றி பெறுவது இயல்பாகவே அமையும், என்பது ஜோதிட விதியாகும். ஒவ்வொரு நட்சத்திரத்தின் கடைசி பாதம் அடுத்த நட்சத்திரத்தின் அம்சங்களைக் கொண்டே விளங்கும். இங்கு சூரியனின் நட்சத்திரமான கிருத்திகையின் தன்மையே இவருக்கு இருந்தது அதாவது பேச்சில் அதிகாரமும், மமதையும் இருக்கும். என் நாடு, என் தேசம், என் மக்கள் எனும்  மமதையுடன் தைரியமாகப் பேசி, நடந்து தாய் நாடு திரும்பியது நம் அனைவரும் அறிந்ததே ஆகும். 
            
4. இதே போல் ஆயில்யம் நட்சத்திர பெண்ணை ஒரு ஆண் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் தவறாகும்.இது பற்றியும்  பண்டைய நூல்களில் ஏதும் கூறப்படவில்லை. அதே போன்று மற்ற நட்சத்திரங்களான, விசாகம், கேட்டை, போன்றவற்றைப் பற்றியும் ஏதும் பண்டைய நூல்களில்  கூறப்படவில்லை. மகத்தில் பிறந்தவர் ஜகத்தினை ஆளுவார், பரணியில் பிறந்தவர் தரணியை ஆளுவார் போன்ற உவமைகளும் காலப்போக்கில் சிலர் சொல்லிச் சென்று  விட்டனர். ஆனால், பண்டைய ஜோதிட நூல்கள் எதிலுமே, எந்த ஒரு நட்சத்திரத்தையும் தரம் தாழ்த்தியோ / தாக்கியோ அல்லது உயர்த்தியோ / தூக்கியோ கூறவில்லை  என்பது உண்மையிலும் உண்மை ஆன ஒன்றாகும்.  

5. ஆயில்யம், கேட்டை போன்ற நட்சத்திரங்கள் புதனின் சாரம் பெற்றவை. எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், படிக்காவிட்டாலும், பெரிய புத்திசாலிகளைப் போல் பேசுவார்கள். அது இயற்கையிலேயே இவர்களுக்கு வாய்க்கும். இது வேண்டுமானால் சிலருக்கு / சில உறவினர்களுக்கு, தமக்கு அதுபோல் இயலவில்லையே என்ற குற்றவுணர்வு தோன்றி அதுவே பிணக்குக்கு / சண்டைக்கு காரணமாகலாமே தவிர வேறு எதுவும் இல்லை என்பது தான் உண்மை. இது போல் சில நட்சத்திரத்திற்கு  அசாத்திய வலிமை இருப்பதால் மற்றவர்கள் அதனைக் கண்டு அஞ்சியே எங்கோ ஒரு இடத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவர்கள் மொத்தத்திற்கும் சொல்வது சரியாகாது. மேலும், உதாரணத்திற்கு சொல்வதென்றால், குருவின் சாரம் பெற்ற விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேதாந்தம் பேசுவார்கள். கேது எனும் ஞான காரகரின் சாரம் பெற்ற மூல நட்சத்திரக்காரர்கள் மாற்றி பேச வாய்ப்புள்ளது. காரணம் அவர்களின் ஞானமே இதற்கு காரணமாகவும், நிறைய சிந்தித்து சரியான தீர்வு அளிப்பவராகவும் இருப்பார்கள். இவற்றை சரியாக புரிதல் இல்லாமல், ஏதோ ஒன்றினை தூவி விட்டு, கேடு செய்தல், ஜோதிடத்திற்கு மட்டும் அல்லாமல் இந்த மானிட இனத்திற்கே செய்யும் தவறே ஆகும். 

6. எனவே, ஒரு ஆண் அல்லது பெண்ணின் நட்சத்திரம் மட்டுமே பார்த்து, முடிவுசெய்து, பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து மணமகன் வீட்டார் வேண்டாம் என்றோ, அல்லது ஆணின் ஜாதகத்தைப் பார்த்து மணமகள் வீட்டார் வேண்டாம் என்றோ கூறுவது சரியே ஆகாது. இதற்கு பல்வேறு வழிகளை ஜோதிடம் நமக்குத் தந்துள்ளது. அதாவது, பெண் / ஆணின் ஜாதகத்தில் மாமனார், மாமியார் மற்றும் இதர உறவுகளைக் குறிக்கும் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் உள்ள இடம் மற்றும் கிரக நிலைகளை அறிந்து அவை எப்படி இருக்கிறது என ஜோதிடப்படி ஆராய்ந்து, பின்னரே அந்த வரனைத் தவிர்க்கலாம். 

7. லக்கினத்திற்கு 7ஆம் இடம் களத்திரம் அதாவது ஒரு ஆணுக்கு அமையப்போகும் மனைவி பற்றி விவரிக்கும். அதே மாதிரி தான் ஒரு பெண்ணுக்கு அமையப்போகும் கணவனைப் பற்றியும் விவரிக்கும். இந்த 7-ஆம் இடத்துக்கு 4-ஆம் இடம் தான் அதாவது 10-ஆம் இடம் ஒருவரின் மாமியாரைப் பற்றி அறிய உதவும். அதே போல் மாமனாரைப்பற்றி அறிய 3-ஆம் இடம் அதாவது 7-க்கு 9ஆம் இடம். அது சரி, அடுத்து மைத்துனர் / மைத்துனி (நாத்தனார்) பற்றி அறிய 7க்கு 3-ஆம் இடமான 9-ஆம் இடம் முதல் இளைய சகோதரர் / சகோதரி பற்றியும் அறியலாம். இவை பற்றி சரியான முறையில் அறிய ஜோதிடருக்கு நல்ல அனுபவமும், கால அவகாசமும் தேவை.  

8. இன்றைய காலங்களில் பொதுவாகப் பொருத்தம் பார்க்க வருபவர்கள், காட்டும் அவசரம் உண்மையில் ஜோதிடத்தில் உள்ளவர்களுக்கு எரிச்சலையும், அவர்களின் அறியாமையை நினைக்கும் போது வேதனையும் ஏற்படுத்துகிறது. எங்கெல்லாமோ கால, நேரத்தை வீணாக்கிவிட்டு ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் வந்து அவசரம் காட்டுவது ஜோதிடர்களை மட்டும் அல்லாது அவர்களுக்கு அவர்களாகவே தீங்கு செய்து கொள்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவு.

9. ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை ஒலியே தவிர அதனைச் சரியாகப் பயன்படுத்துவதில் தான், ஒரு ஜோதிடருக்கும், ஜாதகப் பலனை எதிர்பார்த்துவரும் பயனீட்டாளருக்கும் சரியானதாக இருக்கும். அதனை விடுத்து ஓவென பதறுவதாலோ, அச்சப்படுவதாலோ ஏதும் நடைபெறப் போவதில்லை. பொதுவாகப் பரிகாரங்களாகப் பெரிய அளவில் பொருள் செலவழித்துச் செய்தால் தான் நன்மை ஏற்படும் என்பதை விடுத்து, நாம் நம்மைப் பக்குவப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com