சுடச்சுட

  
  tan

  தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெரியகோயில் தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
   தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பெரியகோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 5.15 மணியளவில் ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீ கமலாம்பாள், ஸ்கந்தர் புறப்பாடும், பின்னர் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. ஒன்றன் பின் ஒன்றாக மேல வீதியில் உள்ள தேர் மண்டபப் பகுதியை அடைந்தது.
   இதையடுத்து, ஏறத்தாழ 40 அடி உயரமுள்ள திருத்தேரில் தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளினர்.
   இத்திருத்தேரை காலை 6 மணியளவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து, திருத்தேரை பக்தர்கள் இழுக்கத் தொடங்கினர். அட்சர தேவர், விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே செல்ல தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பின்னால் சென்றது. இதை பின் தொடர்ந்து நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் வந்தன.
   இதைக் காண்பதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்தனர். இதனால், நான்கு ராஜ வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
   தேருக்கு முன்னால் பெண்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றனர். மேலும், கும்மியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர்.
   இதேபோல, தம்பை, உடும்பா, கொம்பு வாத்தியங்கள் முழங்கப்பட்டன. இதனால், 4 வீதிகளிலும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
   மேலும், திருவையாறு ஐயாறப்பர் கோயில் யானை தர்மாம்பாள் முன்னே சென்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேரோட்டம் வேகமாக இழுக்கப்பட்டு பகல் 11.35 மணியளவில் நிலையை அடைந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai