அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் சித்ரா பௌர்ணமி!

புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்கவேண்டிய அவசியமில்லைனு பெரியவர்கள்
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் சித்ரா பௌர்ணமி!

புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்கவேண்டிய அவசியமில்லைனு பெரியவர்கள் சொல்வதுண்டு. இருந்தாலும் சில நல்ல காரியங்களைச் சில புண்ணிய தினத்தில் செய்வது நல்லதென்று இந்து தர்மம் வகுத்துள்ளது. அவற்றிலொன்றுதான், சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது!

அன்னதானத்துக்கு ஏன் "சித்ரா பௌர்ணமி' திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்...? காரணம் உள்ளது. அது "சித்திரகுப்தன்' என்ற தேவனின் பிறந்த நாள். யார் அந்த சித்திரைகுப்தன் என்றால் நம் மரணத்திற்கு பிறகு எமலோகம் செல்லும் போது நாம் செய்த பாவ புண்ணியங்களை கணக்கெடுத்து சொல்பவர் தான் இந்த சித்ர குப்தன். 

"சித்ரா பௌர்ணமி' என்றாலே சித்திர குப்தனின் நினைவும், "பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம்' என்ற உணர்வும் அனைவருக்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக "அன்ன தானம்' செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் "சித்ரா பௌர்ணமி' தினத்தை, "அன்ன தானத்துக்கு உகந்த நாள்' என்று அறிவித்தனர் நமது மூதாதையர்கள்.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கென்று தனி ஆலயம் அமைந்துள்ளது. முடிந்தவர்கள் அங்கு சென்று சித்ரகுப்தனுக்கு சர்க்கரை பொங்கல், இளநீர், அப்பம், பானகம் போன்ற உணவுகளை படைத்து வழிபடலாம். காஞ்சிக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டு அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டு வரலாம். மேலும், அன்றைய தினம் நம்மால் இயன்றஅளவு நான்கு பேருக்காவது அன்னதானம் செய்யலாம். 

ஆனால், காலப் போக்கில் "சித்ரா பௌர்ணமி' என்பது சுற்றமும் நட்பும் சேர்ந்துகொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், எதுவுமில்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் "நமக்கு நாமே' தின்று மகிழும்படி திரிந்துவிட்டது. இதையொட்டி புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு "சித்ரான்னம்' என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே, சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.

சித்ரா பெளர்ணமியன்று விரதம் இருப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்றால்... பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். பாவ வழியில் நம் மனதை செலுத்தவிடாமல் புண்ணிய வழியில் செலுத்தி நம் மனதை செம்மையாக்கி பக்குவப்படுத்துபவர். எனவே அன்றைய தினம் நாம் அனைவரும் சித்ரகுப்தனை வணங்கி அவனது அருளை பெறுவோம்.

இப்புண்ணிய நாளின் பொருளை உணர்ந்து அன்னதானத்திலும், இறைவனது திருநாம கீர்த்தனத்திலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் சித்திரகுப்தன் முன், கைகட்டி நிற்கும் நிலைமையே நமக்கு ஏற்படாது. எதற்குக் கை கட்டுவானேன்? மாறாக, "சிவ, சிவ' என்று கை தட்டிப் பாடிக்கொண்டே சிவலோகம் சேர வழி பார்ப்போமே! நாம் சிறிது முயற்சித்தாலும் போதும்! "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலவன்' ஆதரவுக் கரம் நீட்டாமலா போய்விடுவான்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com