ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள்  கோயில் பிரம்மோற்சவம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில்  கொடி மரத்தில்  ஏற்றப்பட்ட  கொடி.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள்  கோயில் பிரம்மோற்சவம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில்  கொடி மரத்தில்  ஏற்றப்பட்ட  கொடி.

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
தொன்மை வாய்ந்த ஆதிகேசவப் பெருமாள் மற்றம் பாஷ்யக்கார சுவாமி கோயில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக காட்சியளிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆதிகேசவப் பெருமாள் (உற்சவர்) திருவீதி உலா நடைபெற்றது. மாலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
பத்து நாள்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருள்வார். பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வரும் 25-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட  தேரில் ஆதிகேசவப் பெருமாள் வீதி உலா வருவார். 
பிரம்மோற்சவம் நிறைவடைந்த பின், ராமாநுஜரின் 1002-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.
பத்து நாள்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் ராமாநுஜர் பல்வேறு வாகனங்களில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 
அவதாரத் திருவிழாவின் 9-ஆம் நாளான மே 8-இல் தேர்த் திருவிழாவும், 10-இல் கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
அஷ்டபுஜப் பெருமாள் கோயில்...
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. 
இக்கோயில், திவ்ய தேசங்களில் 75-ஆவது தலமாக விளங்குகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின், பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இதையடுத்து, நாள்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும், அன்னப் பறவை, கருடன், சேஷன், யாளி, ஹனுமார், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா புறப்படவுள்ளார். வரும் 21-ஆம் தேதி கருட சேவையும், 25-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து,  திருப்பாதம், ஆள்மேல் பல்லக்கு, துவாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம், சக்கரக்கோடி விமானம் உள்ளிட்ட உற்சவங்களும் நடைபெறவுள்ளன. பிரம்மோற்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து 10 நாள்களுக்கு மேல் விழா நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com