Enable Javscript for better performance
ஜோதிட ரீதியாக நாத்தனார் தொல்லை இல்லாத வீடு யாருக்கு அமையும்?- Dinamani

சுடச்சுட

  

  ஜோதிட ரீதியாக நாத்தனார் தொல்லை இல்லாத வீடு யாருக்கு அமையும்?

  By DIN  |   Published on : 22nd April 2019 02:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astro

   

  1. திருமணம் ஆகக் காத்திருக்கும், ஒவ்வொரு மணப்பெண்ணும் பலவித கற்பனைகளையும், ஆசைகளையும் கொண்டிருப்பார்கள். ஆனால், திருமணத்திற்குப் பின் நடப்பதோ வேறு. கற்பனைகளையும், ஆசைகளையும் மனதுக்குள் போட்டு அழுத்தி வைத்து ஏதோ இயந்திர வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு, அல்லது தமது ஆசைப்படி தாம் மணந்த கணவரை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் செல்ல எத்தனிப்பவர்களும் உண்டு. இதில் அதிகமாகப் பாதிப்பவர்கள் புதிதாக திருமண வாழ்வில் நுழைந்த மணமகன் மட்டுமே என்றால் அது உண்மையே ஆகும். ஏன் எனில், இத்தனை நாள் தன்னை அதிக அளவில் புரிந்து கொண்ட தாய், தகப்பன், இளைய அல்லது மூத்த சகோதரி / சகோதரர் மட்டுமே என்று முழுமையாக நம்பி வந்தவன் இவன். ஆனால், இவனுக்கு ஏற்ற பெண் தானா என குடைந்து பார்த்தவர்களில் அதிமுக்கியமானவர்கள் இந்த நாத்தனார்கள் மட்டுமே என்றால் அது மிகையாகாது என்றே, கருதுகிறேன். 

  இத்தனை நாட்கள் தமக்காகவே அன்பையும் பாசத்தையும் பொழிந்து வந்த தமது சகோதரர், அதனை எல்லாம் மறந்து, புதிதாக வரும் தமது சகோதரரின் மனைவி எனும் அந்தஸ்தோடு வருபவரை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முயலுவதில், சகோதரியின் பாசம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும். 

  2. நாத்தனார், இந்த பதவி எந்த பெண்ணிற்கும், அவளின் வீட்டில் ஒரு முக்கிய பதவியாகும். அந்த பதவியின் சக்தி அவர்தம் வீட்டில் உள்ள மூத்த சகோதரர் அல்லது இளைய சகோதரரின் திருமண வைபவத்தால் வெளிப்படும். பெண் பார்க்கும் படலம் தொட்டே இது துவங்கி விடும். மற்றவர்கள் மணமகனுக்கு ஏற்ற மணமகள் தானா என தேர்வு செய்யும் வேளையில், இந்த நாத்தனார் மட்டும் வரப்போகும் மணமகள், தமக்கு அடங்கியே இருக்க நினைப்பாள். இவளால் நேரில் முடியாவிட்டாலும் தமது தாய் (அதுதான், வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் வீட்டு மருமகளின் மாமியார்), மூலம் சாதித்துக் கொள்ளத் துடிப்பாள்.   

  3. நாத்தனாரின் முக்கிய செயல்பாடுகள், திருமணத்தன்றே துவங்கி விடும். திருமண மேடையில் புதுமண தம்பதிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற, இவள் விளக்கு ஏந்தி முன் நடக்க இவளின் பின்னால் தான் அந்த மணமக்களே நடப்பார்கள். ஆனால், நிஜத்தில் நடப்பதோ வேறு. ஒரு வீட்டில் மாமியார் மருமகளுக்கு வில்லி என்றால், நாத்தனார்கள் நிழலில் (பின் இருந்து செயல்படும்) வில்லிகள். இவர்களின் செயல்பாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொல்லை தருவதில் கெட்டிக்காரர்கள். சிலர் திருமணம் ஆகிச் சென்ற பின்னரும் இந்த வில்லத்தனத்தில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வார்கள். எவ்வளவு ஏற்றி விடவேண்டுமோ அவ்வளவு ஏற்றி விடும் ஜித்தர்கள். 

  4. யாருக்கும் தெரியாத குறைகளை எல்லாம் மாமியாருக்குச் சொல்லித் தருபவர்கள் இந்த நாத்தனார்களே. ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அடக்கி ஆளவேண்டும் என எண்ணும் நாத்தனார்கள் பலர் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வாழப்போகும் பெண்ணிற்கு முதல் தயக்கம், பயம் இந்த நாத்தனார்களே. ஒரு பெண்ணிற்கு, புகுந்த வீட்டில் நாத்தனார் இருப்பாரே ஆயின்; ஜோதிட ரீதியாக, அவர் தொல்லையாக இருப்பாரா அல்லது நல்ல தோழியாக இருப்பாரா என்பதை அந்த மணப்பெண்ணின் ஜாதகத்தை வைத்தே கணித்துவிடலாம். 

  5. ஒரு பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 7ஆம் இடம் கணவனைப்பற்றி சொல்லும் இடம், இந்த இடத்திற்கு, 3ஆம் இடம் அதாவது லக்கினத்திற்கு 9 ஆம் இடம், இதுவே  கணவனின் சிறிய சகோதரி (சிறிய நாத்தனார்) பற்றிய இடம். 7 ஆம் இடத்திற்கு 11 ஆம் இடம் அதாவ்து, லக்கினத்திற்கு 5 ஆம் இடம் பெரிய சகோதரி (பெரிய நாத்தனார்) பற்றியது. இந்த இடங்களை ஆய்வு செய்தால் அந்த நாத்தனார்களின் குணம் தெள்ளத் தெளிவாக தெரிந்து விடும். அந்த 9 ஆம் இடத்திலும் மற்றும் 11 ஆம் இடத்திலும் இயற்கை பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி மற்றும் ராகு / கேதுக்கள் போன்ற கிரகங்கள்  மற்றும் லக்கின பாபர்கள், இயற்கை மற்றும் லக்கின சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருப்பின்; இருவருக்கும் எந்த விஷயத்திலும் புரிதல் இல்லாமல் தகராறுகள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேளை சுபகிரகங்களின் பார்வை அந்த 9, 11ஆம் இடத்திற்கு இருப்பின் எப்படியோ சமாளித்து ஓட்டிவிடலாம். 

  6. 9-ஆம் அதிபதி அல்லது 11ஆம் அதிபதி, லக்கினத்திற்கு கேந்திர (1, 4, 7, 10) மற்றும் திரிகோண (1, 5, 7) இடத்தில் இருப்பின் நாத்தனார் (முறையே சிறிய / தங்கை   மற்றும் பெரிய / அக்காள்) வகையில் தொந்தரவு இல்லாமல், உற்ற தோழிகளைப் போல் இருப்பார்கள். ஆனால், 9ஆம் அதிபதி மற்றும் 11ஆம் அதிபதி லக்கினத்திற்கு மறைவு இடங்களான 6, 8, 12ல் இருப்பின், தினம் தினம் பிரச்னைகளை (முறையே சிறிய மற்றும் பெரிய) நாத்தனார் வகையில் சந்திப்பது, தவிர்க்க இயலாது. எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் போதே பெண்ணைப் பெற்றவர்கள், மகளின் ஜனன ஜாதகத்தில், 9 ஆம் அதிபதி / 11ஆம் அதிபதி மற்றும் 9ஆம் இடம் / 11ஆம் இடத்தில் உள்ள கிரக இருப்பு நிலைகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

  7. கிராமங்களில் ஒரு வார்த்தை புழக்கத்தில் இன்றளவும் உள்ளது. அதாவது, நாத்தனார் நட்பும், நார்த்தங்காய் உப்பும் வீண் போகாது என்பர். அதாவது நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது சரியான அளவில் உப்பிட்டோமே ஆனால் அது கெடாமல் பல நாட்கள் வரை உதவும். அதே போல் நாத்தனாரிடம் நட்பு பாராட்டி வந்தால், குடும்பத்தில் விரிசல் வராது மற்றும் சுனாமி இல்லை என கருத்துப்படப் பேசுவர். வீட்டுப் பெண் என்று இன்றளவும் கிராமங்களில், கணவனின் சகோதரியான அவளுக்கு மரியாதை உண்டு. குடும்பம் எனும் மலர்களை ஒன்றாகக் கோர்த்து மாலை ஆக்கும் நாத்தனார்களும் உண்டு. அதே மாலையைப் பிய்த்து எடுத்து நார் நாராகப் போடுபவர்களும் உண்டு. 

  நாத்தனாரால் ஏற்படும் தொல்லைகள் நீங்க, பரிகாரம்

  பாதிப்படைந்த மற்றும் பாதிப்பு வரும் என அறிந்த பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதுடன், ஏதேனும் ஒரு மகானை மனதில் நினைத்து வந்தால், அவ்வாறு தொடர் தொல்லை தரும் நாத்தனார்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

  மேலும் அவர்கள் மனநிலை மாறி நட்போடும் நல்ல உள்ளத்தோடும் பழகுவர், இது திண்ணம். லோக சமஸ்தா சுகினோ பவந்து, எனும் வார்த்தைக்கிணங்க உலகில் உள்ள அனைவரும் சுகமாக வாழ, சீரடி சாயி நாதன் பாதம் பணிந்து வேண்டுகிறேன். 

  - ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்.

  தொடர்புக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai