சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு 2 லட்சம் பக்தர்கள் பாத யாத்திரை

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வமாக வழிபடும் நகரத்தார்கள் உள்ளிட்ட..
சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு 2 லட்சம் பக்தர்கள் பாத யாத்திரை


சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வமாக வழிபடும் நகரத்தார்கள் உள்ளிட்ட சமூகத்தினர் சித்திரை 2-ம் செவ்வாய் வழிபாட்டில் காரைக்குடி, புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் செவ்வாய் தலாக விளங்கும் இக்கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாத சுவாமி குலதெய்வமாகவும், தையல்நாயகி அம்மனை தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் காரைக்குடி நகரத்தார்கள் மற்றும் புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை, தேவகோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  மற்ற சமூகத்தினரும் குலதெய்வமாக கொண்டு வழிபடுகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-ஆவது செவ்வாய்கிழமை தங்கள் பகுதிகளிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக வந்து வழிபட்டு வருகின்றனர். 

அதன்படி நிகழாண்டு 2-ஆவது செவ்வாய்க்கிழமையையொட்டி, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகராத்தார்கள் உள்ளிட்ட சமூகத்தினர் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கடந்த செவ்வாய்கிழமை பாத யாத்திரையை தொடங்கி திங்கள்கிழமை மாலை முதல் வைத்தீஸ்வரன் கோயிலை வந்தடைந்தனர். இரவில் கோயில் வெளிப்புற வளாகம், சத்திரம், நகரத்தார் விடுதிகளில் பக்தர்கள் தங்கியிருந்தனர். செவ்வாய்கிழமை அதிகாலை பாத யாத்திரை பக்தர்களை ஊர் எல்லையில் கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளித்து வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பாத யாத்திரை பக்தர்கள் கோயில் நடை திறந்தவுடன் கோயில் சித்தாமிர்த் தீர்த்தக் குளத்தில் நீராடி கற்பக விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய தெய்வங்களின் சன்னிதிகளில் அர்ச்சனைகள் செய்தும், மாவிளக்கு, தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

மேலும் பாத யாத்திரையின்போது தாங்கள் எடுத்து வந்த மஞ்சள் தடவிய, வேப்பிலை சொருகிய குச்சிகளை கோயில் கொடி மரத்தில் சமர்பித்தனர். அதேபோல் நகரத்தார் பக்தர்கள் நடை பயணத்தின்போது 30-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை கட்டிகொண்டு வந்திருந்தனர். அந்த வண்டிகளில் தையல்நாயகிஅம்மனுக்கு அலங்கரித்து அழகு பார்க்க தங்க ஆபரண நகைகளை கொண்டு வந்திருந்தனர்.அவற்றை அம்மனுக்கு சாத்தி மகிழ்ந்து பின்னர் மீண்டும் தங்கள் ஊருக்கு எடுத்து சென்றனர். 

இதுகுறித்து பாத யாத்திரையாக வந்திருந்த சிவகங்கையைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் பக்தர் கூறியது:  நான் கடந்த 23 ஆண்டுகளாக பாத யாத்திரையாக வந்து சுவாமி-அம்பாளை வழிபாடு செய்து வருகிறேன். எங்களது சிவகங்கை மாவட்டம் கீழசீவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தையல்நாயகிஅம்பாளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் பாத யாத்திரையாக வந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்து சென்றால், அந்த ஆண்டு முழுவதும் இல்லறத்தில் கெட்ட சம்பவம் ஏதும் நடைபெறாது. இல்லத்தில் மகிழ்ச்சியும், குடும்ப ஒற்றுமையும் நிலைத்திருக்கும் தடைப்படாமல் தொடர்ந்து பாத யாத்திரை வரவேண்டும் என தையல்நாயகிஅம்மனை வழிபட்டு செல்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com