
அத்திவரதர் பெருவிழாவின் 34- வது நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் அத்திவரதப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழாவின் 34-ஆவது நாளான சனிக்கிழமை அத்திவரதப் பெருமாள் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கதம்பம் மற்றும் மல்லிகை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
சகஸ்ரநாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்களுக்கு அத்திவரதர் திருவுருவப் படமும், பிரசாதமும் கோயில் பட்டாச்சாரியார்களால் வழங்கப்பட்டது.
5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்திருநாளன்று நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெறுவதால் அத்திவரதரை பொதுதரிசனப் பாதை மதியம் 2 மணிக்கும், முக்கிய பிரமுகர்கள் வரிசை மதியம் 3 மணிக்கும் மூடப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குத் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்திருந்தார்.
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், விடுமுறை நாளாகவும், ஆடிப்பூரத் திருநாளாகவும் இருந்ததால், அதிகாலை 3 மணியிலிருந்தே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மாடவீதிகளிலும், கோயில் வளாகத்திற்குள்ளும் கட்டுக் கடங்காத கூட்ட நெரிசல் காணப்பட்டது. பக்தர்கள் அத்திவரதரை பொதுதரிசனப் பாதையில் தரிசிக்க 5 மணி நேரத்துக்கும் மேலானது. முக்கிய பிரமுகர்கள் வரிசையில் ஒரு மணி நேரத்தில் தரிசிக்க முடிந்தது. காலை 10 மணிவரை இருந்த கூட்டம் ஒரு சில மணி நேரங்களில் 3 மடங்காக அதிகரித்தது.
ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மதியம் 2 மணிக்கு பொது தரிசனப் பாதையான கிழக்கு கோபுர வாசலை மூட முயன்ற போது, அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டியடித்து கோயிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தி தரிசனப் பாதையில் அனுப்பி வைத்தனர்.
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள் மதியம் 2 மணிக்கு கோயில் மூடப்படுவது தெரியாமல் அத்திவரதரை தரிசிக்க வந்து பலமணி நேரம் காத்திருந்தே சுவாமியை தரிசிக்க முடிந்தது.
கோயில் வளாகத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் முடிந்து இரவு 8 மணிக்கு மீண்டும் கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக நள்ளிரவு வரை அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய பிரமுகர்கள் தரிசனம்: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி தனது குடும்பத்தினருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரையும் உடன் வந்திருந்தார். அவர்களுக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் மாலைகள் அணிவித்து அத்திவரதரின் திருவுருவப்படமும், பிரசாதமும் வழங்கினர்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சனிக்கிழமை அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
"பக்தர்களுக்கு தினமும் 200 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கல்'
அத்திவரதர் பெருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு தினமும் 200 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த அவர் கோயிலில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவதால் காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் போதுமான அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி மூலம் தினசரி வழங்கப்பட்டு வரும் குடிநீர் 180 லட்சம் லிட்டராகும். இதுதவிர, வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக பெறப்பட்டு மொத்தம் 200 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
பக்தர்கள் வரும் முக்கியச் சாலைகள் மற்றும் பொது இடங்களில் 100 குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் லாரிகள் மூலம் குடிநீர் நிரப்பி, வழங்கப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்திலும், மாட வீதிகளிலும் அத்திவரதர் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான 20 லிட்டர் கேன்கள் மூலம் 120 பணியாளர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
பேட்டியின்போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் எஸ்.சரவணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர்கள் இளங்கோவன் (ஈரோடு), சரவணன்(நாகர்கோயில்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அன்னதானம் வழங்க ரூ.25 லட்சம் நன்கொடை
அத்திவரதர் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஆணையர் கோ.பிரகாஷ் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து பெற்ற தொகை ரூ.25 லட்சத்துக்கான காசோலையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சனிக்கிழமை வழங்கினார்.
அத்திவரதரை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனத்துக்குப் பின்னர், திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து பெற்ற தொகை ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.
அந்த காசோலையை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசூதனன், செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.