
திம்மராஜம் பேட்டை ராமலிங்கேசுவரர் திருக்கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, சனிக்கிழமை வளையல் அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தமிழகத்தின் வட ராமேசுவரம் என அழைக்கப்படும் திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இக்கோயிலில் உள்ள சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தால் ராமேசுவரத்துக்கு சென்று வந்த பலன் கிடைப்பதாக ஐதீகம். ஆடிப்பூரத் திருநாளை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலையில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு அணிவித்த வளையல்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த அம்பாளை தரிசித்தால் குழந்தைப்பேறு தடை, திருமணத்தடை, மாங்கல்யதோஷம் ஆகியவை நிவர்த்தியாகும் என ஸ்தலபுராணம் கூறுகிறது.