
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்கலப்பொருள்கள் சனிக்கிழமை ஆண்டாள் கோயில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்த் திருவிழாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மங்கலப்பொருள்கள் காணிக்கையாகக் கொண்டு செல்லப்பட்டு ரெங்கநாதருக்கு வழங்கப்படும். அதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து மங்கலப்பொருள்கள் வழங்குவது வழக்கம்.
இந்த நிலையில் நிகழாண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரியும், இணைஆணையருமான ஜெயராமன் தலைமையில், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, முதல்வரின் செயலாளர் ஜெயஸ்ரீ, தொழிலதிபர் என்விவி. முரளி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் அலுவலர்கள் ரெங்கநாதர் கோயில் மங்கலப் பொருள்களை வழங்கினர். ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அலுவலர் இளங்கோவன் பட்டாச்சாரியர்கள் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.