கருட ஜெயந்தி: நாக தோஷமும் அபிசார தோஷமும் நீங்க பக்ஷிராஜனை வணங்குங்க!

கருட ஜெயந்தி: நாக தோஷமும் அபிசார தோஷமும் நீங்க பக்ஷிராஜனை வணங்குங்க!

வரும் புதன் கிழமை (07/08/2019) ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருகோஷ்டியூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில் திருவல்லிக்கேணி போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூனியம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். 

கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேறிப் பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான்.

ராமாயண காலத்தில் போர்க்களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப்போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் சத்யபாமாவுக்காகப் பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.

கருடாழ்வார்

தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. காஷ்யப முனிவருக்கு காத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். காத்ருவும், வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்குக் கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள். யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை. மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதிசெய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்துத் தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின. வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்குக் கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்குக் கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாகப் பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்குப் பிறகு மிக பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன் தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார். விஷ்ணுவை தன் மீது அமர்த்திக்கொண்டு வெகு வேகமாகக் கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை.

கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்குப் பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழப் பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான்.

ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தைப் பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தைக் காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது.

பெருமாள் கருடனை 'வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிமூலமே என்று கஜேந்திரன் கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் பெருமான்.

கல்கருடன்

கும்பகோணத்திற்கு அருகில் ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் கொண்டுள்ளார். இங்கு கம்பீரமாக கல்கருடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இப்படி கருடாழ்வாருக்கு தனி சன்னதி நாச்சியார் கோவிலில் மட்டுமே உள்ளது.

இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதற்காகவே பெருமாள் தனக்குச் சமமாக கருடனுக்குத் தனியாக சன்னிதானம் அமையச் செய்து கருடாழ்வாராகப் பெருமைப்படுத்தியுள்ளார். பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார். 

ஜோதிடத்தில் கருடன்

ஜோதிடத்தில் பறவைகளுக்கு காரகர் புதபகவானாவார். புதனின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்னுவாகும். நான் பறவைகளில் பட்சி ராஜனாக கருடனாயிருக்கிறேன் என கீதையில் கூறியுள்ளான் கண்ணன்.  எனவே கருடாழ்வார் புதனின் அம்சம் பெற்றவர் ஆகும்.

ஓட்டுனர்களுக்கும் பெரிய வாகனங்களுக்கும் புதனே காரகர் என்கிறது பாரம்பரிய நூல்கள். புதனின் அதிதேவதையான ஸ்ரீ மகாவிஷ்னுவிற்க்கு வாகனம் மற்றும் வாகன ஓட்டுனராகவும் புதன் ஆதிக்கம் பெற்ற கருடபகவான் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

கருடாழ்வார் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலக்ஷமியின் அம்சமாகவும் விளங்குகிறார்.

சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்?

1.  ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

2. புதனின் நக்ஷத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் ஸர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நக்ஷத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.

3. ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள்.

4. ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.

5. சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்.

6. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.

7. பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

8. கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.

9. ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்.

10. கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்

ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்

நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

வியாழன் கருட தரிசனம் - பில்லி, சூனியம் அபிசாரங்கள் நீங்கும்

வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்

சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச! விஷ்ணு வாஹ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: 

என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com