வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவின் 35-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதுடன் அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரம் வரை ஆனதாக

அத்திவரதர் பெருவிழாவின் 35-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதுடன் அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரம் வரை ஆனதாக பொது தரிசனப் பாதையில் வந்த பலரும் தெரிவித்தனர்.
 தங்க நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழாவின் 35-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தங்க நிறப் பட்டாடையிலும், நீல நிற அங்கவஸ்திரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 பக்தர் ஒருவர் வழங்கிய மகிழம்பூ மாலையும், பெருமாளின் தங்கக் கிரீடத்தில் ஏலக்காய் மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. காலையிலும், மாலையிலும் சகஸ்ரநாம அர்ச்சனையும் கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.
 வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: அத்திவரதரை பொதுதரிசனப் பாதையில் சென்று தரிசிக்க 7 மணி நேரம் வரை காத்திருந்ததாக அவ்வரிசையில் வந்த பக்தர்கள் பலரும் தெரிவித்தனர்.
 முக்கிய பிரமுகர்கள் வரிசையில் ஒரு மணி நேரத்தில் சுவாமியை தரிசிக்க முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்ததால் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நகரமே நிரம்பி வழிந்தது.
 ரங்கசாமி திருக்குளம், திருக்கச்சிநம்பி தெரு, கோயில் மாடவீதிகளில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ரங்கசாமி தெருவிலிருந்து திருக்கச்சி நம்பி தெரு வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளூர் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
 கோயில் கிழக்கு கோபுர வாசலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கோயில் வளாகத்துக்குள் வந்தவுடன், வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை குடும்பம், குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவதைப் பார்க்க முடிந்தது.
 முக்கிய பிரமுகர்கள் தரிசனம்: அத்திவரதரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 அவர்களுக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் பட்டு வஸ்திரம், பெருமாளுக்கு அணிவித்த மாலைகள், அத்திவரதர் திருவுருவப் படங்கள், கோயில் பிரசாதம் ஆகியவற்றை வழங்கினார்கள்.
 தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
 இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
 மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் அத்திவரதரை 2 -ஆவது முறையாக தரிசனம் செய்தார்.
 இதற்கு முன்பு சயனக்கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்திருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை நின்ற கோலத்தில் தரிசனம் செய்தார்.
 கோயில் பட்டாச்சாரியார்கள் ராஜாத்தி அம்மாளுக்கு அத்திவரதர் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும் வழங்கினர்.
 தரிசனத்துக்குப் பின்னர் அவர் கூறுகையில், அத்திவரதரை மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்தேன். வேண்டுதல் ஒன்றும் வைத்துள்ளேன். பொதுவாக வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது. அத்திவரதர் பெருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றார்.
 அத்திவரதர் பெருவிழாவின் 35-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
 பகுத்தறிவாளர்களையும் வரவேற்போம்
 அத்திவரதர் தரிசனத்துக்குப் பின்னர் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியது: பகுத்தறிவுவாதிகள் என்று சொல்பவர்களும் அத்திவரதரை தரிசிக்க வந்திருக்கிறார்கள். மற்றவர்களைப் போல அவர்கள் வருவதையும் வரவேற்கிறேன். மு.க.ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்ய வந்தாலும் வரவேற்பேன். தமிழகம் ஒரு மிகச்சிறந்த ஆன்மிக பூமி என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
 ஒருசில கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒளிவுமறைவாக வந்து அத்திவரதரை தரிசனம் செய்து விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com