ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - மேஷம் (பகுதி 1)

வேதஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகளைவிட ஒருவர் பிறக்கும் லக்னமே ஜாதகருக்கு முக்கிய உயிர் ஆகும்.
ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - மேஷம் (பகுதி 1)

  
ஜாதகத்தில் அடித்தளம் லக்னம் (building basement)

வேதஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகளைவிட ஒருவர் பிறக்கும் லக்னமே ஜாதகருக்கு முக்கிய உயிர் ஆகும். அவற்றின் மூலம் தான் உடலின் தோற்றம், வலிமை, புகழ், ஆயுள், குணம், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், கௌரவம், அஷ்டவர்க்க வலிமை, எண்ணங்களின் ஓட்டம், கடவுள் அருள், பிறப்பின் ரகசியம், திருப்தி, குடும்பம் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். வீட்டின் கட்டிடத்திற்கு அடித்தளம் (Foundation) எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஜாதகருக்கு லக்கினம் தான் முக்கியமான அடித்தளம் ஆகும். 

சூரியனை அடிப்படையாகக் கொண்டு லக்கினமும், சந்திரன் அடிப்படியாக ராசியும் அமையும். இவற்றில் சூரியனின் அமைவிடத்தினை அடிப்படையாகக் கொண்டு அந்த கட்டத்திலிருந்து 24 மணி நேரத்தில் (2 மணி நேரம் x 12 கட்டம்) 12 பாவக்கட்டத்தில் லக்கின புள்ளியானது ஒவ்வொரு நாளும், 0 - 360 டிகிரியில் முடிவு பெரும். எடுத்துக்காட்டாக முதல் மாதமான சித்திரையில் சூரியன் “௦” டிகிரியில் மேஷத்தில் பிரவாசிப்பர் அன்றைய நாளில் ஜனனம் ஆகும் அனைத்து குழந்தைகளும் நாழிகையின் அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு பாவத்திலும் லக்கினம் அமையப்பெறும். அன்றைய முதல் நாழிகை மேஷம் லக்னம், அது தான் ஒரு ஜாதகருக்கு நிரந்தர நிலை (permanent position)ஆகும். ஒரு ஜாதகர் விதி ஒவ்வொரு தசா புத்திக்கேற்ப எல்லா செயல்களும் நிகழும்.

லக்னம் பற்றிப் பேச ஆரம்பித்தால் அது ஒரு மிகப்பெரிய கடலாகும். ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்காக லக்கினம் பற்றிய சிறு விளக்கத்தை பார்ப்போம். ராசியை விட லக்கினம் முக்கியத்துவம் என்கிறோம் இன்னும் சூட்சமமாகச் சென்றால் லக்கினம் அமர்த்திருக்கும் லக்கினாதிபதி முக்கியம் அவர் எங்கு அமர்ந்திருக்கிறார்? அவரோடு யார் சேர்ந்திருக்கிறார், அவர்கள் நட்பானவரா பகையானவரா?, யார் யார் பார்க்கிறார் அவர்களின் சுபத்துவம் எந்த அளவு இருக்கும்?, லக்கின நட்சத்திராதிபதி பலம் பெறுகிறாரா? தசாபுத்திகள் வாயிலாக என்ன என்ன பலன் ஜாதகருக்கு ஏற்படும் என்று லக்கினத்திற்குள் இவ்வளவு சூட்சம விதி உள்ளது. தற்பொழுது 12 லக்கினமும் அவற்றின் நட்சத்திர பொது பலன்களைப் பார்ப்போம்.

மேஷ லக்னம்
 
கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூறப்பா கோணத்தி லிருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே     

இப்பாடலில் மேஷ லக்னத்தில் பிறந்தவரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார். மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனி பகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் திரிகோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாகக் கேந்திரத்தில் இருந்தால் கெடுபலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமி கடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது திசாபுத்திகளில் சொல்க.

மேஷம் என்பது காலாபுருஷனுக்கு தலை மற்றும் தலை கிரகமான சூரியன் மேஷத்தில் உச்சமாவதால் அவரின் பலம் நிறைந்திருக்கும். சூரியன் மகனான சனி 10, 11 பாவத்திற்கு உரியவர். மேஷத்தில் லக்கினத்தில் பிறந்தவா்களுக்கு சனி அவ்வளவாக உதவ முற்படமாட்டார். லக்கினாதிபதி செவ்வாயின் பகை கிரகம், இங்கு சனியானவர் நீச்சம் பெறுகிறார் மற்றும் சனியே இந்த லக்கினத்திற்கு பாதகாதிபதி. அதனால் சனியானவர் இவருக்கு எப்படி உதவுவார். முக்கியமாக மேஷ லக்கினகாரர்களுக்கு குருவின் மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை சீக்கிரம் வந்து தொல்லை அதிகம் கொடுப்பார். சனி பகவான் மறைவு நீச்சம் அல்லது வக்கிரம் பெற்றால் பலன் மாறுபடும்.

ஆடு சின்னம்

அஸ்வினி, பரணி, கிருத்திகை ஒன்றாம் பாதம் வரை - வானவெளி கூட்டத்தில் ஆடு உருவம் தெரிவதாகக் கூறப்படுகிறது, அந்த கூட்டத்தினை மேஷத்தை குறிக்க சின்னம் ஆகும். மேஷ லக்கினகாரர்கள் கொஞ்சம் ஆட்டின் குண நலன்கள் மற்றும் அதன் செயல்கள் இருக்கும். மேஷ லக்கினகாரர்கள் நீண்ட கழுத்துடையவர், மெலிந்த தேகம்,  ஒற்றுமை மிக்கவர், புஜசாலியாகவும், சுறுசுறுப்பாக இருப்பார்கள், கடின உழைப்பாளியாகத் திகழ்வார், மத்திம உயரம், சிலபேருக்கு சிவந்த கண், உடலில் கொஞ்சம் உரோமம் உடையவர், மற்றும் தலை பற்கள் வலுத்தும் இருக்கும். 

இதுதவிர மேஷ லக்கினகாரர்கள் சர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு துடுக்குதனம் மற்றும் ஓட்டம் இருக்கும். இவர்கள் நெருப்பு ராசி என்பதால் அதிகமான ஆவேசம் மற்றும் கோபத்தினால் தடுமாறுவார்கள், முன்கோபி, உணர்ச்சி மிக்கவர், தைரியசாலி, மற்றும் அரசு சேவை, குறைந்த அழகு கொண்டவராகவும், பேச்சுதிறமை, தர்ம மிக்கவர் எழுத்துத்திறமை உடையவர், மூர்க்ககுணம் கொண்டவர், சொத்துக்கள் சேர்க்கை இருக்கும். 

பிடிவாதம் மிக்கவர், மனஉறுதி வலிமை மிக்கவர்,  எடுத்த காரியத்தைத் திறமையாக முடிப்பவர்,சிலர் பொறாமை குணமிக்கவர், என்று சொல்லிக்கொண்டு போகலாம். இவை அனைத்தும் தனிப்பட்ட மேஷ லக்கினத்தில் ஒன்பது பாதங்களை உள்ளடக்கியது. புலிப்பாணி மற்றும் கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரத்தில் புத்தகத்தில் லக்கின விளக்கம் மற்றும் சூட்சமங்கள் கூறப்பட்டுள்ளது.

மேஷ லக்கினத்தில் மொத்தம் மூன்று நட்சத்திரங்கள் ஒன்பது பாதங்கள் அடங்கியுள்ளது. மூன்று நட்சத்திரங்களில் லக்கினபுள்ளி அமர்ந்தால் ஜாதகரின் நிலை மற்றும் உடல் மாற்றங்கள் எவ்வாறு மாறுபடுகிறது என்று பார்ப்போம். ஒன்பது பாதங்களின் அமரும்பொழுது ஏற்படும் மாற்றம் விவரமாக பின்பு பார்ப்போம். லக்கின புள்ளி கீழே உள்ள நட்சத்திர சாரங்களில் அமரும்பொழுது ஜாதகரின் குணநலன்கள் மற்றும் செயல்களைப் பார்ப்போம்.  

அஸ்வினி 
அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கின புள்ளியில் பிறக்கும் ஜாதகர் செவ்வாய் கேது தாக்கத்துடன் இருப்பார். அஸ்வினி நட்சத்திரம் தேவ குணம் கொண்டவர்கள், தெய்வீக அருள் கொண்டவர், ஜோதிட சாஸ்திரங்களில் மற்றும் இதிகாசம் ஆர்வ மிக்கவர். இவர்கள் கடமை தவறாதவர், கருமமே கண்ணாக திகழ்பவர்கள், பெண்கள் மீது அன்பு காட்டுவார்கள், தன்னலமற்றவர்கள், பராக்கிரமம் உடையவர்கள், உண்மை பேசுபவர், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அணிகலன் மீது ஆசை கொண்டவர். 

நற்பெயர் பெற்றவர், கொஞ்சம் கோபக்காரர் ஆனால் வெளியே தெரியாது, சாதுர்யம் மிக்கவர், புத்திசாலித்தனம் கொண்டு புகழையும் பொருளையும் ஈட்டுவார், எதிர்கால திட்டம் புரிபவர், பரிசுத்தமானவன், அமைதியானவர், தெளிப்படுத்தி பின்பு வழக்கை நடத்துபவர், நல்லதே நினைப்பவர், ஒருசிலர் புறம் பேசுவார், உடல் உஷ்ணத்தால் நோய் பிறவியில் இருக்கும், நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு இருப்பார். அழகில் சுமாராக இருப்பார்கள், பெரியவர்களிடம் கேட்டு நடப்பவர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

பரணி
பரணி நட்சத்திரத்தில் லக்கின புள்ளியில் பிறக்கும் ஜாதகர் செவ்வாய் சுக்கிரன் தாக்கத்துடன் இருப்பார்கள். இவர்கள் மனுஷ குணம் கொண்டவர், வசதிமிக்கவன், தான் மனதையும் நற்பெயரும் காத்து வாழ்க்கை நடத்திச்செல்வர்கள். பேச்சில் உறுதி, மனைவியின் பேச்சை கேட்பவன், பெற்றோருக்கு மகிழ்வு தருவானாக, அறச்செயல் செய்பவன், எப்பொழுதும் கோபமாக இருப்பான், தூக்கம் குறைவு, மெய்யறிவு மற்றும் நன்நெறி மிக்க நீதிமான், தான தர்மம் செய்பவர், தெய்வ அருள் கொண்டவர், சுலபத்தில் வெற்றி அடைவார், பிடிவாத மிக்கவர், பருத்த தோற்றமிக்கவர், மனதில் வஞ்சகம் இருக்கும், நன்றியறிவுள்ளவர், பலசாலி, சோம்பல் உடையவர், சாஸ்திரப்படி இருப்பான், உடல் பருமனானவர், அரசுப் பணி செய்பவர் மற்றும் குணம் மாறுபட்டு கொண்டு இருக்கும்.

கார்த்திகை 
கார்த்திகை நட்சத்திரத்தில் லக்கின புள்ளியில் பிறக்கும் ஜாதகர் நெருப்பு ராசியில் செவ்வாய் சூரியன் தாக்கத்துடன் இருப்பார்கள். கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் இரு நெருப்பு கிரகங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் குணம் கோபம், ஆக்ரோஷமாக, சிலர் இதனால் ரத்த அழுத்தப் பாதிப்புடன் இருப்பார்கள், இரவில் தூக்கமில்லாதவர்கள், புலனின் விஷயங்களில் ஆர்வம் மிக்கவர், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவான், பேச்சில் சாமர்த்திய மிக்கவர், தெளிவானவர்,  ஆசாரமுள்ளவர், வித்துவான், சூரன், புத்திமான், நிலம் வீடு, மாடு கன்று பாக்கியம் கொண்டவர், சாஸ்திரங்களை சம்பிரதாயங்கள் அறிந்தவர், இவர்கள் வேலையும் அதிக பலத்துடன் கஷ்டமான வேலையாக  இருக்கும்.  

மேற்கூறியவை அனைத்தும் பொது பலன்கள். இவற்றின் செயல்பாடுகள் நட்சத்திர சாரம், லக்கினாதிபதி, நட்சத்திர சாரதிபதி நிலை, கிரக சேர்க்கை, பார்வை கொண்டு ஜாதகரின் செயல் மற்றும் குணம் மாறுபடும். மேஷ லக்கினத்தில் பலம் குறைந்த கிரகத்தை ஊக்குவிக்கப் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்.

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com