சுடச்சுட

  
  athivaradar_blue

   

  தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் “வரதராஜ மஞ்ஜரி”எனும் பெயரில் பதிவாகியுள்ள சுவடி நூலில் காஞ்சி வரதராஜப்பெருமாளின் வைபவங்கள் மிக அழகாக  வருணிக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் அப்பசு கவி.

  அப்பசு கவியின் வரதராஜ மஞ்ஜரி இந்நூலினை இயற்றிய கவியே காஞ்சிபுரம் சென்று அங்குள்ள வைபவங்களை பார்த்து பதிவிடுதல் போல அமைந்திருக்கின்றது  இக்காவியம். மேலும் சுக்லபக்ஷம் வைகாசி மாதம் பௌர்ணமியில் கச்சி வரதராஜப் பெருமாளின் உற்சவம். சூர்யோதய காலம் தொடங்கி, சந்திரோதய காலம் வரை  எல்லோரும் சேர்ந்து அந்நேரத்தில் விளையாட்டுக்கள், பேச்சு, வினோதக்கதைகள் ஆகியன கேட்டு மற்றவர்களுடன் ஆடி பாடிக்கொண்டு, புண்ய கோடி கோபுரமுலு  ரெண்டுனுகன்னுல பண்டுக காகனு பட்டனு புண்ணியகோடி விமானம் கோபுரம் ஆகிய இரண்டையும் காணும்போது கண்களுக்கு சிறந்த காட்சிபோல் தெரிந்தன. மக்கள்  கூட்டம் அதிகரிக்க அவர்களின் பேச்சுக்குரல் கேட்பதற்கு ஒரு திருவிழாவாகவே இருந்தது என்கிறார் ஆசிரியர். 

  காஞ்சி மாநகரத்தில் தாமரை குளங்கள், உயர்ந்த கோபுரங்கள், தங்கத்தால் ஆன மேடைகள், தங்கம்போல் மின்னும் வரிசை வரிசையான வீடுகள், தோரணங்கள்,  மதயானைகள் தங்க நிறத்துடன் மின்னும் திருச்சுற்றுகள், அழகியதான முத்துமணி மண்டபங்கள், சந்திரகாந்த மணிபோல் ஒளிரும் மாளிகைகள், தங்கம்போல் மின்னுகின்ற  மதிற்சுவர்கள் ஆகியவை கண்களுக்கு விருந்தாகின்றன. தாமரைக்கண்ணனைத் தங்க கருடனான தன் கரங்களில் தாங்கிக்கொண்டு திசைகள் எல்லாம் மிளிர, எல்லா உலகும்  வணங்க காலையில் தோன்றும் கதிரவன் சிறுக சிறுக தன்னொளி பரப்பியவாறு தொழுதடி பணியும் தைவசிகாமணியுமான அந்த வரதராஜரின் முன்னே அத்திசைகள்  அனைத்தும் மேருக்கு ஒப்பாக விளங்குவதாய் ஆசிரியர் வருணிக்கிறார். 

  தேர்த்திருவிழாவும் வந்தது. அந்த கச்சி வரதனின் தேரைப்பிடித்திழுக்க சில வைஷ்ணவர்கள் திருவாய்மொழி (நாலாயிர திவ்யப்பிரபந்தம்) பாராயணம் செய்தவாறே  சென்றனர். ருக்வேதம் முதலான நால் வேதமோதும் பிராமணர்களையும், மோக்ஷம் விரும்பும் பக்தர்களையும், பற்பல துறவிகளையும், உறவினர்களையும் அவ்வரதப்பனின்  திருவிழாவிலே உலாவரக்கண்டேன். ஆங்கே குருக்கள், குணவான்கள், கோடிகன்னிகாதானம் தாத்தாச்சாரியார்கள் போன்ற வைஷ்ணவமணிகளையும் காணக்கண்டேன். அந்த  தாதாச்சார்யர்கள் “தாதாச்சார் தடாகம்” என்ற குளத்தையும் ஆங்கே ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்ததை கண்ணுறும் பாக்யமுற்றேன். நடைபாதையையும் கண்டேன்.  தேர்ப்பவனி காணும் எம்பெருமானுக்கு தூப ஆரத்தி எடுத்து உபசரிப்பதையும் அப்பசுகவி நவரசமய காவியமாக வர்ணித்துள்ளார். இதனைக் கேட்டாலும் எழுதினாலும் எல்லா  நன்மைகளும் உண்டாகும் என்ற பயனையும் விளம்பி இந்த வரதராஜ மஞ்ஜரியைப் பூர்த்தி செய்துள்ளார் ஆசிரியர். இந்த சிறு காப்பியம் தஞ்சாவூர் சரசுவதி மகால்  நூலகப்பருவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

  அத்திகிரி வரதர்

  அத்திவரதர் நீரிலே இருந்தமைக்குச் சான்று உதயபானு மண்டபத்தில் குறிப்பிட்டுள்ள கொடிமரத்திற்கருகில் அமைந்த கி.பி.1781-ஆம் ஆண்டு தெலுங்கு மொழிக்கல்வெட்டு  ஆகும். இதன் குறிப்பு அண்மையில் வெளிவந்த ‘அத்திகிரி அருளாளன் வந்தான் 2019’ல் காணக்கிடைக்கிறது. ஆயினும் தஞ்சை-அரியலூர் அருகே உடையார்பாளையம்  என்றொரு கிராமம் உள்ளது. அதனை அங்கிருந்த ஜமீன்தாரர்கள் ஆண்டு வந்தனர். முன்பொருகாலத்தில் அத்திகிரி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்திலிருந்து தேவாதிராஜனும், ஏகாம்பரேசுவரரும், காஞ்சி காமாட்சியும் கலாபகாலமாகையாலே உடையார்பாளையத்திற்கு எழுந்தருளிவிட்டனர். உடையார்பாளையத்தை ஆட்சி செய்தவர்களுள் ரங்கப்ப உடையார் என்பவரும் ஒருவர். அவரது ஆட்சிக் காலத்தில் சாலிவாகன சகம் 1632க்கு சரியான ஆங்கில வருடம் 1710-ஆம் ஆண்டில் காமாட்சி அம்மன் தவிர மற்ற தேவாதிராஜனும் ஏகாம்பரேசுவரரும் மீண்டும் காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளினர். 

  பிற்காலத்தில் கச்சி ஏகாம்பரேசுவரரைத் தரிசிக்க தஞ்சையிலிருந்து இரண்டாம் சரபோஜி மன்னரும் அவரது ராணிகளுடன் காஞ்சி மாநகரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.  ஆங்கே நீராட வசதியாக படித்துறை அமைக்கப்பட்டது என்பதை ஒரு மோடி ஆவணம் குறிப்பிடுகிறது. காமாட்சி அம்மன் பங்காரு (சுவர்ண) காமாட்சி என்ற பெயரில் இன்றும் தஞ்சை மேலவீதியில் அருள்பாலித்து வருகிறார். தேப்பெருமாளும் ஏகாம்பரரும் மீண்டும் காஞ்சி எழுந்தருளிய செய்தியினை உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தம்முடைய நல்லுரைக்கோவை என்ற நூலின் இரண்டாம் பகுதியில் தெரிவித்துள்ளார். 

  இதன் அடிப்படையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பதினேழாம் நூற்றாண்டில் தொடக்ககாலத்தில் அத்தி வரதரின் ஜலாதிவாஸ (நீரினுள் இருப்பு) நிகழ்வு நடைபெற்றிருக்கலாம் எனத்தோன்றுகிறது. இக்கருத்தினை பெருந்தேவித் தாயார் சந்நிதி வடவண்டை திருமுற்றத்திலிருக்கும் குத்துக்கல்லில் உள்ள தெலுங்கு மொழிச்சாஸனம் கூறுவதாய் சித்திரை மாதம் 2019ல் வெளிவந்த 'காஞ்சீ பேரருளாளன்' மாத இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  காலக்கணக்கு நூலின்படி சாலிவாகன சகம் விரோதி வத்ஸரம் பால்குண மாதம், உத்தரட்டாதி, சனி வாரம் (அல்லது பானுவாரம்) அமாவாஸ்யை விருஷப லக்னத்திற்கு  (ஆங்கில தேதி 19.3.1710, பங்குனி 21ஆம் தேதிக்கு) ஈடாக மேற்கூறிய செய்தி அமைகின்றது. உடையார்பாளையம் ஜமீனிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரட்டாதி  நாளன்று சிறப்பு உற்சவம் கொண்டாடப்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

  மேலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே ஜலத்தில் எழுந்தருளிச் செய்யப்பட்டவர்தான் அத்திவரதரான (தாருதிருமேனியான) ஆதி ஹஸ்திகிரி நாதர் ஆவார். காலங்கடந்ததால் அவருக்கு பதிலாக பழையசீவரத்திலிருந்து சிலாபேரத்திருமேனியைக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தனர் என்பது அறிய வருகிறது. இருப்பினும் தாருமயமான திருமேனி தண்ணீரில் இருப்பதால் அதனை  கண்காணிக்கின்ற நோக்கத்துடனும் நம்போன்றோருக்கு காட்சிதந்து அருள் புரிதற்காகவும் ௪40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சேவை தருகின்றார். வரதராஜ  மஞ்ஜரிச்செய்திகளை அறிந்த நாம் இவ்வரியதான வாய்ப்பினைப் பயன்படுத்தி அத்திவரதரையும் சேவித்து வாழ்வில் வளம்பெற்றுய்வோமாக.

  - முனைவர் ஆ. வீரராகவன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai