2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?

2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து..
2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?


2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக குருபகவானின் ஸ்தலமான ஆலங்குடியில் எப்போது குருப்பெயர்ச்சி நடத்தப்படுகிறதோ அப்போது தான் அனைத்து குரு ஸ்தலங்களிலும் குருப்பெயர்ச்சி நிகழ்த்தப்படுகிறது. 

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் 29.10.2019, ஐப்பசி மாதம் 12-ம் நாள், சித்த யோகம், விசாக நட்சத்திரத்தில், அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2019 நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். 

மேலும், விகாரி வருடம் பங்குனி 15-ம் தேதி 28.3.2020 சனிக்கிழமை அன்றைய தினம் குருபகவானின் அதிசாரம் தொடங்குகிறது. கிட்டதட்ட 90 நாட்கள் 
அதிசாரத்தில் இருப்பார். 

குருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். எனவே, இவர் சிந்திக்கும் ஆற்றலை நமக்குத் தருபவர். பூர்வ ஜென்ம ஞாபகங்களை அளிப்பவர், நல்ல  நினைவாற்றலைத் தருபவரும் இவரே. ஆனால், குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து நீச்சமாகி பாபகிரகங்களை பார்க்கும்போது தான் நினைவாற்றலை இழக்கும் நிலை  ஏற்படுகிறது. இது அபகீர்த்தி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

• தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

• தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் அடுத்த விகாரி வருடம் அக்டோபர் மாதம் மகர ராசிக்கு மாறுகிறார்.

• தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார்.

• குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை  பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். 

• குருபகவான் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவர். குருவின் அதிதேவதை இந்திரன். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி குருபகவானின் நட்சத்திரங்களாகும். 

• குருபகவான் கடக ராசியில் உச்சமடைந்தும், மகர ராசியில் நீசமடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர் வாழ்க்கையில் சகலவிதமான நன்மைகளையும் பெறுவார்கள். 

• கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு குருபகவான் தனுசு ராசிக்கு வருகை தருகிறார். அவர் ஆட்சியாக இருக்கிறார். இதனால், இந்த ராசிக்கு பெரிய விடிவுகாலம் என்று சொல்லலாம். அபரிமிதமான நன்மைகளையும் இவர்கள்  பெறப்போகிறார்கள்.

2019-2020-ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களில், பொதுபலன்கள், அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்?  என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com