திருப்பணிக்காகக் காத்திருக்கிறது திருகளப்பூர் திருகோடிவந்தீஸ்வரர் ஆலயம்!

திருப்பணிக்காகக் காத்திருக்கிறது திருகளப்பூர் திருகோடிவந்தீஸ்வரர் ஆலயம்!

உடையார்பாளையம் வட்டம், சோழர்களின் சொந்த மண், பொட்டல் மண் பூமி பிற மாவட்டங்களைப்

உடையார்பாளையம் வட்டம், சோழர்களின் சொந்த மண், பொட்டல் மண் பூமி பிற மாவட்டங்களைப் போல் தொடர்ந்தாற்போல் ஊரிருக்காது, சில மைல்களுக்கொரு ஊர், செல்லும் வழியெங்கும் முருங்கை, அதனடியில் தர்பூசணி, கடலைகொல்லைகள், பலா, முந்திரி, சோளம், கம்பு, தைல மரங்கள், இலுப்பை காடுகள். பரபரப்பான நவீனத்துவத்திற்கு அடிமையாகாத மக்கள் எளிமையாக, அமைதியாக, இன்னும் மண்பானை சமையல், பனை ஓலை குடில்கள், ஊர்கோடி குளத்தில் மஞ்சள் வண்ண நீரில் குளியல் ஆலமரத்தடியில் சிதறிக்கிடக்கும் செம்பாறங்கல்லில் அமர்ந்து உலக நியாயம் பேசி கூடிக்களிக்கும் மக்கள். அழகு தமிழ் சொல்லோட்டம் கொண்ட மேலைசீமைபேச்சு. அவ்வப்போது வந்து செல்லும் டவுன் வண்டிகள் ஹாரன்ஒலி கேட்டுப் பாதி போட்ட சட்டையுடன் சடுதியா வா... புள்ள.. என்று ஓடிவந்து ஏறும் அறுபதுகள். இவற்றை இலுப்பை மரத்தின் மேல் கிளைகளில் அமர்ந்து ரசிக்கும் கிளி கூட்டம். காக்கைகளை விரட்டும் இரட்டைவால் கருங்குருவிகள்.

இத்தனைக்கும் மத்தியில் திருகோடிவனதீஸ்வரர் திருக்கோயில், திருக்களப்பூர் கிராமம் சோழனின் வழியினர் கட்டிய கோவில், செம்பாறாங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயில். அகத்தியர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டிமடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சபூதங்களின் அம்சமாக ஐந்து சிவாலயங்களை நிறுவியுள்ளார். பஞ்சபூதத்தில் ஆகாயத்தலமாக அழைக்கப்பட்டதால் இதனை மேலை சிதம்பரம் எனவும் அழைக்கின்றனர்.

கிழக்கு நோக்கிய கோவில், ராஜகோபுரமில்லை ஆனால் அதற்கான பெரும் கல்ஹாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தாண்டியதும் கம்பீரமான நந்தி மண்டபம் பலிபீடம் உள்ளது. 

இறைவன் - திருக்கோடிவனதீஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி - காமாட்சியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். முகப்பு மண்டப வாயிலின் இருபுறமும் இரு விநாயகர்கள் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் சிறிய மடத்தில் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர், சில சிறிய லிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. மதில் சுவற்றில் புருஷா மிருகம் சிவலிங்கத்தைப் பூஜிப்பது போல் உள்ளது. பெரிய கல்வெட்டு ஒன்று மதிலோரம் உள்ளது அதில் சுபானு வருடன் ஆனிமாதம் என தொடங்கும் வரிகள் உள்ளன.

மேலை சிதம்பரமல்லவா நடராஜருக்கு எனத் தனி சன்னதி, முகப்பு மண்டபம் ஆகியன உள்ளது அதன் கதவுகளில் தான் எத்தனை வேலைப்பாடுகள்!! பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுமா? எப்போது பணிகள் முடியும்? எனப் பல கேள்விகளுடன் அந்த நாய்க்குட்டி போல் நானும் குடமுழுக்கு நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. உதவிக்கரம் கொடுப்போம்.

ஆலய திருப்பணிக்காக

A C NUMBER S.SENTHAMARAI KANNAN
VARADHARAJAM PETTAI 
SBI AC NO - 30643197796
IFSC - SBIN0008685

இந்த அக்கவுண்ட் திருகளப்பூர் திருகோடிவந்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்காக தங்களால் முடிந்த பணத்தைச் செலுத்திடுக. 

வழி எப்படி?

கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பாகுடி தாண்டி சென்றதும் காடுவெட்டி நிறுத்தம் உள்ளது இங்கிருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் 8 கி.மீ சென்றால் திருக்களப்பூர் தான். 8 கி.மீ ரோடும் சூப்பரா இருக்கும், பயப்படாமல் போகலாம்.

வாருங்கள் கிராம சிவாலயம் செல்வோம்.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com