காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 1. திரிசூலநாத சுவாமி திருக்கோயில்

காஞ்சியில் திருநீற்று சோழநல்லூர் திருசுரம் என்றழைக்கப்படும் திரிசூலம் என்னுமிடத்தில் ரிக்..
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 1. திரிசூலநாத சுவாமி திருக்கோயில்

காஞ்சியில் திருநீற்று சோழநல்லூர் திருசுரம் என்றழைக்கப்படும் திரிசூலம் என்னுமிடத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்கள் மற்றும் நான்மறைகளுக்கு (நான்கு மலைகளுக்கு) நடுவே அமைந்திருப்பவர் திரிசூலநாதர். 1500 வருடங்களுக்கு முன்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில்  கட்டப்பட்டதால் திருநீற்றுச்சோழ நல்லூர் என்றழைப்பார்கள். இக்கோயிலில்  ராஜகோபுரம்  இல்லை. மலைப்பாங்கான அழகிய ஊர் இங்குள்ள குகைகளில் பஞ்ச பாண்டவர்கள்  வனவாசத்தின்போது வந்து தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. கோவிலுக்கு எதிரே ஒரு பாழடைந்த சத்திரம் உள்ளது இது குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. பிரம்மா  மற்றும் பல ரிஷிகள் இத்தலத்தில் தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது அதை உறுதிப்படுத்தும் ரிஷி ஓடை அருகிலேயே உள்ளது. சிவனின் சூலத்தில் உள்ள இச்சா, கிரியா,  ஞானசக்தி மூன்றையும் தன் கையில் அடக்கியுள்ளார் நம் திரிசூலநாதர். இங்குள்ள தலவிருட்சம் மரமல்லி. மும்மூர்த்தி தரிசனம் இங்கு உண்டு.

திரிசூலநாதர் இரு அம்பிகைகளோடு காட்சி

இந்து சமயத்தில் வழிகாட்டும் கடவுளர்களான சிவபெருமான் தீய சக்திகளான ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் அழிக்கும் அடையாளமாகக் கொண்ட திரிசூலம்  கைகளில் ஏந்தி, கழுத்தில் பாம்பும், நீண்ட சடை மீது அணிந்த பிறையும், காதுகளில் கலந்து தோன்றும் குழையும், தோடும், திருநீறணிந்த சிவபெருமான் அம்பிகையுடன்  சிவ தொண்டர்களுக்கு காட்சியளிக்கிறார் இங்கு. பண்டையகால தொண்டை மண்டல அரசு அதிகம் கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் கஜப்பிருஷ்ட அல்லது தூங்கானை மாடம் வகை கொண்டது. இந்த கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் மூலவர் கருவறையானது அமைந்திருக்கும். சிவபெருமான் லிங்க ரூபத்தில் கிழக்கு முகமாகவும் இடதுபுறம்  சொர்ணம்பிகை தன் தங்கக் கரத்துடன் சிவனை பார்த்தவண்ணம் நின்ற கோலத்திலும், ஸ்வாமியை பார்த்தவாறு நந்திகேஸ்வரரும் அழகாகக் காட்சியளிக்கிறார். அம்மையும்  அப்பனும் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

வெளிநாட்டவர்கள் இத்தலத்தைச் சூறையாடிய போது சொர்ணாம்பிகை அம்மனின் கை உடைந்து போனதாகவும், ஒரு அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்பிகை தன் உடைந்த   இடத்தில் தங்கத்தால் செய்த கரத்தை பொறுத்துமாறும், தன்னை ஈசன் அருகில் பிரதிஷ்டை செய்யுமாறு கட்டளை இட்டார்கள். சொர்ணாம்பிகை தங்க கரத்தோடு  அழகுக்காக இன்றும் காட்சிதருகிறாள். முன்பு பிரதான அம்பிகையாக இருந்த திரிபுரசுந்தரி தனி சன்னதியில் கருவறையின் வடக்குப் பக்கத்தில் திரிபுரசுந்தரி தேவியின் முன்கைகள் இரண்டும் அபயஹஸ்தத்திலும், வலது பின்னங்கையில் அக்கமாலையும் இடது பின்கையில் மழுவும் தாமரை மலர் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் சாந்த  சொரூபியாகக் காட்சியளிக்கிறாள்.

தோஷம் நிவர்த்தி 

முக்கிய விசேஷம் என்னவென்றால் இரு அம்பிகைகளான திரிபுர சுந்தரி மற்றும் சொர்ணாம்பிகையுடன் ஈசனுடன் இருப்பது. இவர்களிடம் தம்பதியர்கள் ஆசீர்வாதம்  பெற்றால் மிகவும் சிறந்தது. களத்திர தோஷம் நிவர்த்தி, பிரிந்த தம்பதியினர் சேர, உக்ரரத சாந்தி, சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி என்று தம்பதியர் இங்கு வந்து அம்மை  அப்பனிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளலாம்.

மன அமைதி இல்லாதவர்கள் இங்கு வந்து சிறிது நேரம் இருந்தாலே மனசே ரிலாக்ஸ் நிலைமைக்கு வந்துவிடும் ஏனென்றால் அம்பிகை இருவரும் சாந்த சொரூபியானவள். அதற்கேற்ப நேர்மறை அதிர்வு சக்தி அதிகம் இங்கு உண்டு. சந்திரன் தோஷம் உள்ளவர்கள் அம்பிகையை வழிபாடு செய்யவும். ஹரியும் சிவனும்  ஒன்று என்பதற்கேற்ப இங்கு சீனிவாசப் பெருமாள் தரிசனமும் உண்டு. 

பிரம்மபுரி 

பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க, தன் பணியைச் சரிவர தொடர இங்குக் குளத்தில் குளித்து நான்கு வேதங்களையும் சுற்றிலும்  வைத்து பூஜை செய்து, சிவனை நோக்கி தவம் புரிந்து ஈசனின் அருளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த தலவரலாறு பெற்ற தளம் பிரம்மபுரீஸ்வரர் என்றும்  அழைக்கப்பட்டது. லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்கள் மலைகளாக மாறியதாகவும், மலையை “சுரம்’ என்பர். எனவே இறைவனை "திருச்சுரமுடைய நாயனார்"  மற்றும் “திரிசூலநாதர்’ என்றழைப்பார்கள். இங்குப் பிரம்மா வந்து சென்றதால் இந்த இடம் பிரம்மபுரி என்றும் ஈஸ்வரனை பிரம்மபுரீஸ்வரர் என்றும் சொல்லுகிறார்கள்.

தோஷ நிவர்த்தி

ஜாதகத்தில் ஏற்படும் தீராத தலையெழுத்தை, சிறிதேனும் மாற்றும் தன்மை பிரம்மாவிற்கு உண்டு. அவரின் காலில் வணங்கி வழிபடுவோம்.

நாக யக்ஞோபவீத கணபதி

விநாயகர் நாகத்தைப் பூணலாகத் தரித்து அருள்பாலிக்கிறார், உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில், மூலாதார சக்தியான குண்டலினி, நாக வடிவில் இருக்கிறது இந்த குடை சிற்பம்.

தோஷ நிவர்த்தி 

நாம் எடுக்கும் குறிக்கோளில் வெற்றி பெற இந்த விநாயகரை வணங்கினால் ஜெயம் உண்டாகும். புத்தி குறைவாக உள்ள குழந்தைகள் விநாயகரை வணங்கலாம் ராகு கேதுவால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி, அபிஷேகம் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம் செய்து  வேண்டிக்கொள்கிறார்கள். 

வீராசன தட்சிணாமூர்த்தி 

கோஷ்டத்தில், “வீராசன தட்சிணாமூர்த்தி’, இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர்.  இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். 

தோஷ நிவர்த்தி 

குழந்தைகள் படைப்பாற்றல் அதிகம் பெற மற்றும் ஞானத்தைப் பெற இந்த தட்சிணாமூர்த்தியை வணங்குவோம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் வாங்கிக்கொடுத்து  பசு நெய்விளக்கு ஏற்றலாம்.

சுய ரூப சரபேஸ்வரர்

நரசிம்மரின், உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர், சரபேஸ்வரருக்கு "சரபம்' என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால், இறகு இல்லாத சிவஸ்சொரூபமாக  சரபேஸ்வரர், இரண்டு முகங்கள், இரு கைகளில் மான், மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரைப் பிடித்த கோலத்தில் அபூர்வமான கோலத்தில்  காட்சியளிக்கிறார்.  

தோஷ நிவர்த்தி

பயத்தைப் போக்கி தைரியத்தைக் கொடுப்பவர், வீடு  இல்லாதவருக்கு, குடும்பத்தில் அமைதி காக்க - பசு நெய் விளக்கேற்ற இவரை வணங்குவோம்.

கோயிலின் விசேஷங்கள் 

பிரதோஷ வழிபாடு, தை, ஆடி வெள்ளி நாட்களில் "பூப்பாவாடை' மற்றும் எல்லா வெள்ளிக்கிழமை தோறும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சித்திரை  வருடப்பிறப்பு, ஆவணி விநாயகர் சதுர்த்தி, வைகுண்ட ஏகாதசி, அன்னாபிஷேகம், கார்த்திகை தீபத்தன்று மலையின் நான்கு உச்சியிலும் தீபம், ஆருத்ரா தரிசனம்,  மஹாசிவராத்திரி, மார்கழி தனுர்மாத பூஜை, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம், நவராத்திரி விழாவின்போது, விசேஷ ஹோமம், 18 சுமங்கலிகள், 18  குழந்தைகளை வைத்து பூஜைகள் நடைபெறும்.

ஆகமவிதிப்படி இக்கோவிலில் கொடி மரத்தடியில் பிள்ளையார், மார்க்கண்டேஸ்வரர், "சோடச லிங்க' (16 பட்டை லிங்கம்), ஐயப்பன், ஆதிசங்கரர், காசி விசுவநாதன்  விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன், செல்வ முத்துகுமாராசாமி, மார்க்கண்டேயன், ஆஞ்சநேயர் ஆகியோரும் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அங்கு இருக்கும் இளைஞர்களால் குளத்தைச் சுத்தம் செய்யப்பட்டுவருகிறது.

ஆலய தூண்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் சில அற்புத சிலைகள் ஆஞ்சநேயர், வேணுகான கிருஷ்ணன், பிரம்மா லிங்கத்திற்கு பூஜைசெய்வது போல  அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் கர்ப்ப கிரகத்திலிருந்து சுரங்கத்தில் அரசர்கள் தனது செல்வங்களைப் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு  இருக்கும் அனைத்து ஸ்வாமிகளும் வெவ்வேறும் ரூபத்தில் பார்க்கமுடியாத அளவு இருக்கிறது. இங்கு அனைத்துவித தோஷ நிவர்த்திக்காக ஒரே கோவிலாக அமைந்துள்ளது. இங்கு அனைவரும் சென்று திருசூலநாதரை வணங்கி நம்மால் முடிந்ததைப் பூஜைக்கும் மற்றும் கட்டிடச் சீரமைக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கோவில் நேரம்:  காலை 7  - 11 மணி வரை,  மாலை 4 மணி  -  8.00 மணி  திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், 
திரிசூலம், சென்னை - 600 043
காஞ்சிபுரம் மாவட்டம்.  
போன்: 2264 2600, 9444914713

காஞ்சிபுரத்தில் உள்ள பிற சிவன் ஸ்தலங்களை அடுத்துவரும் கட்டுரையில் பார்ப்போம். 

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com