சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 5. குரு 

போரூர் குன்றத்தூர் சாலையில் போரூர் சந்திப்புக்கு அருகாமையில் இந்த புராதன திருக்கோயில், அமைந்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 5. குரு 

குரு பரிகார திருத்தலம்: சிவாகம சுந்தரி உடனுறை ராமநாதேஸ்வரர் திருக்கோயில் (போரூர்)

போரூர் குன்றத்தூர் சாலையில் போரூர் சந்திப்புக்கு அருகாமையில் இந்த புராதன திருக்கோயில், அமைந்துள்ளது. இந்த பழமையான கோவிலானது, ராமாயண காலத்து  தொடர்புடையது. வரலாற்றுப்படி , ஸ்ரீ ராமர் இலங்கைக்கு இந்த வழியில் செல்லும் போது, அடர்ந்த மரங்களைக்கொண்ட காட்டு பகுதியாக இருந்த அப்போதைய சூழலில்,  இங்கு தங்கி இளைப்பாறினார். ஒரு நெல்லிமர நிழலில் இங்கு தங்கியிருக்கும் போது, அங்கு தெரியாமல் பூமிக்கடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் தலைப்பகுதியை போன்ற  ஒரு கல் தனது காலில் தட்டுப்படவே அங்கு ஒரு லிங்கம் இருப்பதை அறிந்தார். 

இவ்வாறு நடந்த இந்த செயலால் ஸ்ரீ ராமருக்கு தோஷம் ஏற்பட்டது. அதனால் அவர் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) விரதம் இருக்கத்தொடங்கினார். ஒருமண்டலம்,  48 நாட்கள் என்பது 27 நட்சத்திரம், 12 ராசி, (9) நவக்கிரகங்கள், இவைகளின் கூட்டுத்தொகையே 48 ஆகும். அந்தத் தோஷத்திலிருந்து விடுபடக் கடுமையான விரதம் அதாவது,  ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்கனி மட்டுமே அருந்தி விரதத்தை மேற்கொண்டார். அந்த லிங்கத்தை வெளிக்கொணரவே அவர் விரும்பியும் அந்த விரதத்தை அனுஷ்டிக்கச்  செய்தார். இந்த தவம் வீணாகவில்லை. ஸ்ரீ ராமரின் இந்த தவத்தை உணர்ந்த சிவபெருமானாரும் தனது லிங்க வடிவத்தை பூமிக்கு வெளிக்கொணர்ந்து தனது ஸ்வரூபத்தை  வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர் தனது விஸ்வரூப தரிசனத்தையும் ராமருக்கு அளித்தார். 

இவ்வாறு கருணைக்கடலாய் தனது தவத்துக்கு அருளிய அந்த சிவனாரின் லிங்க வடிவத்துக்கு ராமநாதேஸ்வரர் எனும் நாமம் இட்டு மிக்க மகிழலானார் ஸ்ரீ ராமர். தாய்  பார்வதி தேவியும் இவருக்கு காட்சி தந்து அருளினார். அந்த தாயின் பெயர் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஆகும். ஸ்ரீ ராமரும், சிவனாரை தனது குருவாக வரித்து வணங்கி, ராவணன்  தனது பத்தினி சீதையை தூக்கிச் சென்றது எந்த திசையாக சென்றால் ஸ்ரீலங்காவை அடைய முடியும் எனவும் வேண்டினார். பிறகு, ராமரின் வேண்டுகோளுக்கு இணங்க  சிவனார் திசையை காட்டி அருளிய பின் ஸ்ரீலங்காவை நோக்கி பயணம் மேற்கொண்டார், ஸ்ரீ ராமர். 

இவ்வாறு சிவனாரை லிங்கவடிவதில், குரு ஸ்தானத்தில் இருத்தி வழிபட்டதால், இந்த தலம் குரு ஸ்தலமாக, சென்னை (முன்பு தொண்டைமண்டலம்) சுற்றி உள்ள  நவக்கிரக கோவில்களின் இந்த ஸ்தலம் குரு பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு சிவ ரூப லிங்கவடிவமே ஸ்ரீ குரு பகவானாக வணங்கப்படுகிறது. மேலும் இந்த இடம்  உத்தர ராமேஸ்வரம் என்றே அழைக்கப்படுகிறது. எப்படி ராமேஸ்வரத்தில் லிங்கவடிவ சிவனை வழிபட்டாரோ அதே போல் இங்கும் ஸ்ரீ ராமர் சிவனை வழிபட்டதால், அவ்வாறு அழைக்கப்படுகிறது. யாரொருவரால், ராமேஸ்வரம் சென்று வணங்கி பரிகாரம் செய்யமுடியாதவர்கள், இங்கு வந்து பரிகாரம் மேற்கொண்டு இறைவனின்  அருளைப் பெறலாம். 

இங்குள்ள ராமநாதேஸ்வரரின் லிங்கவடிவம் மிகவும் பிரமாண்ட அழகுற கிழக்கு நோக்கி விளங்குகிறது. இந்த லிங்கவடிவம் சுயம்பு வானது (தானாக தோன்றியது).  தேவி சிவகாமசுந்தரி தனி சன்னிதானம் கொண்டு அருள்பாலிக்கிறாள். இந்த கோவிலின் விமானம், தூங்கானைமாடம் எனும் கஜப்ருஷ்டம் வடிவில், அதாவது படுத்துக்கிடக்கும் யானையின் பின்புற தோற்றவடிவில் அமைந்துள்ளது. இவ்வகை அமைப்பு கோபுரங்கள், சோழர்காலத்துக் கோவில் வடிவமைப்பாகும். கோவிலைச் சுற்றி ஸ்ரீ  விநாயகர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  மற்றும் கோஷ்ட மூர்த்தி வடிவங்களைக் காணலாம். இந்த கோவிலில் ராஜகோபுரம் காணப்படவில்லை. அதே போல் கர்பகிரஹம், விமானம் இன்றியும் காணப்படுகிறது. நந்திகேஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபத்தை நோக்கி வெளிப்பிரகாரத்தில் உள்ளது. ஸ்ரீ சண்டிகேஸ்வரரின் இருப்பிடம், வித்தியாசமான  வடிவில் நந்திகேவரர் அருகில் உள்ளது. 

தீர்த்தம், சடாரி போன்றவைகள் வழங்கப்படுவதை நாம் பொதுவாக பெருமாள் கோவிலில் மட்டுமே காண இயலும். ஒருவேளை இந்த கோவிலில் மட்டும் தான் தீர்த்தம்,  சடாரி போன்றவைகளை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அளிப்பது இந்த சிவன் கோவிலில் மட்டும் தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த கோவிலின் ஸ்தல  விருக்க்ஷம் வேம்பு, அது சந்நிதானத்துக்கு, தெற்கில், பிரகாரத்தில் அமைந்துள்ளது. இந்த வேப்ப மரத்தடியில் பிரம்மா வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த பிரம்மாவின்  இடத்திற்கு அருகில் ஒரு சிறிய சிவ லிங்கம் நந்தியுடன் கூடி கிழக்கு நோக்கி உள்ளது. இந்த வேப்ப மரத்தை அழகான சேலையைக் கொண்டு சுற்றியுள்ளதால் ஒரு அழகான 
மங்கையைப்போல் காட்சி அளிப்பதாய் உள்ளது. பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் குருப்பெயர்ச்சி காலத்தில் இந்த கோவிலில் விசேஷமான சிறப்புப் பூஜைகள்  நடத்திக் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலானது, சிறப்புக்கும், அழகுக்கும் வியந்து காணப்படுகிறது.

இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற பரிகார கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.  

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com