சுடச்சுட

  

  அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்! ஏன் ஜோதிடரும் அறிவான்!!

  By - ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்  |   Published on : 14th September 2019 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vishnu

   

  கடலின் ஆழத்தையும் அறிந்துவிடலாம் ஆனால், ஒருவரின் மனதின் ஆழத்தை அறிவதென்பது மிகவும் சிரமம். மனதிற்குள் பொதிந்து கிடக்கும் அத்துணையையும்  அறிவதென்பது நம்மால் முடியாத ஒன்று. அதனை நம்மைப் படைத்த அந்த இறைவனால் மட்டுமே அறியமுடியும். ஒருவரின் அந்தரங்கம் யாவும் அந்த ரங்கனே அறிவான். ஒருவரின் அந்தரங்கத்தை இறைவனுக்கு அடுத்ததாக ஒரு ஜோதிடன் அவரின் ஜாதகத்தைக் கொண்டே நன்கு அறிந்திடுவான். 

  ஆம், பெண் பித்தர்களைக் காட்டிக் கொடுத்துவிடும், அவர்களின் ஜனன கால ஜாதகம். இதனையும் ஜோதிடம், வெகு ஸ்த்ரீ யோகம் அல்லது ஸ்த்ரீலோல யோகம் என்று. பல பெண்களுடனான தொடர்பு கொள்பவரை, பெண்களின் பின்னால் அலைபவரை எடுத்துக்கூறுவதே இந்த யோகம். இதனைப்பற்றி விரிவாகக் காணலாம். 

  உடலுறவு விஷயத்தில் தவறு செய்பவர்கள் அதனை ஒப்புக்கொள்வது என்பது மிகக்கடினம். ஆயினும், ஒருவரின் ஜனன கால ஜாதகம் அவரின் அந்தரங்க விஷயமான  உடலுறவு பற்றிக் காட்டிக் கொடுத்துவிடும். ஜாதகர் ஒப்புக்கொள்ளவில்லை எனினும் உண்மை, உண்மைதானே. எவ்வளவு தான் பிற பெண்களின் தொடர்பை ஒருவர்  மறைத்தாலும், அது எப்படியும் ஒருநாள் வெளியாகி அனைவருக்கும் தெரிய வந்துவிடும். ஆனால், அதனையே ஒரு ஜோதிடர் கூறினால் ஏற்றுக்கொள்பவரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். 

  ஆம், அப்படிதான் சமூக அந்தஸ்தில் உள்ள ஒரு பெரிய நபர் காண வந்தார். அவரின் ஜாதகத்தில் இந்த வெகு ஸ்த்ரீ யோகம் இருப்பதையும் அது அவருக்கு பாதிப்பை அளித்திருக்கும் என்பதனையும் எடுத்துக் கூறியதற்கு அவர் மறுக்கவே செய்தார். ஆனால், ஒரு சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி அவரின் ஜாதகம் பார்க்க வந்தார். வந்தவர் நான் பார்ப்பதற்கு முன்னரே சற்று வருத்தத்துடன் தன்னை ஒருவர் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவரை எபப்டியாவது திருமணம் செய்து கொள்ளமுடியுமா என்றார். மேலும் அவர் அந்த நபரின் பெயரைக் கூறி அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதையும் சொன்னார். அவர் வேறு யாருமல்ல முன்பு வந்து சென்ற அந்த வெகு ஸ்த்ரீ யோகம் கொண்ட அதே நபர் தான் எனத் தெரிந்துகொள்வதற்கு நேரம் அதிகம் ஆகவில்லை. இருப்பினும், அதனை வெளிக்காட்டாமல், இவருக்கு இவரின் ஜாதக பலனைக் கூறி அனுப்பிவியாகிவிட்டது. 

  இந்த கலியுகத்தில், ஒரு ஆணுக்கு, பிற பெண்களின் தொடர்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், பெண்கள் கூட பிற ஆண்கள் தொடர்புகொள்வது, என்பது கூடுதலான தகவல் தான். ஆண்களாவது தங்களின் ஆண்மைத் தன்மையைப் பற்றி பெருமை அடிக்கும் விதமாகப் பிற பெண்கள் தொடர்பைப் பகிரங்கப்படுத்தி விடுவது உண்டு. ஆனால், பெண்கள் விஷயம் அப்படியல்ல! அப்படியே ஒன்றும் தெரியாதது போல அமுக்கிவிடுகிறார்கள். 

  இது ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது. ஆம், ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின் ஜாதகத்தைக்கொண்டே அறியலாம். 

  1. லக்கினமும், ராசியும் ஒற்றைப்படை ராசியாக அமைந்து அதனை பாபர் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால், இவ்வாறு அமையலாம். 

  2. சுக்கிரனும், செவ்வாயும் பரிவர்த்தனைப் பெற்று ராசியிலோ அல்லது அம்சத்திலோ, பாவிகளின் பார்வை பெற்றிருந்தாலும் இவ்வாறு கெட்ட நடத்தை ஏற்படக் காரணமாகலாம். 

  3. செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம்; சனியின் வீடுகளான மகரம், கும்பம் லக்கினம் ஆகி, அதில் சந்திரனும், சுக்கிரனும் அல்லது சுக்கிரனும், செவ்வாயும் இருந்து பாவர் பார்வை ஏற்படின் நிச்சயம் கெட்ட நடத்தை ஏற்படும். 

  வெகு ஸ்த்ரீ யோகம் அல்லது ஸ்த்ரீலோல யோகம் 

  1. ஒருவரின் ஜாதகத்தில், லக்கின அதிபதியும், 7-ஆம் இட அதிபதியும் சேர்ந்தோ, பரஸ்பர பார்வையில் இருந்தாலோ இந்த யோகம் வேலை செய்யும். குருவின் பார்வை இருப்பின் சற்று குறையவோ அல்லது ஏதேனும் ஒரு உதவியைச் செய்துவிட்டு மிகப்பெரிய மனிதர் போல் வேடமிடுவர். அப்படிப்பட்ட குருவும் இவருக்கு லக்கின சுபராக இருக்கும்பட்சத்தில் தான். 

  2. மேற்சொன்ன நிலையில், இவர்களை சனி / ராகு / கேது பார்த்தாலோ அல்லது இவர்களுடன் இணைந்திருந்தாலோ இந்த யோகம் வேலை செய்யும். 

  3. சுக்கிரன், சந்திரன், லக்கினாதிபதி இவர்களுடன் செவ்வாயின் தொடர்பு இருந்தாலோ அல்லது சுக்கிரன் பலம் இல்லது இருந்தால் அந்த ஜாதகருக்கு பல பெண்கள் (பெண்கள் எனில் பல ஆண்கள்) தொடர்பு ஏற்படும். விதிவிலக்கு என்பது, வலிமைபெற்ற குருவின் பார்வை (5, 7, 9) மட்டும் தான். ஒரு உதாரண ஜாதகம் மூலம், இந்த யோகம் பற்றி அறியலாம். 

  அப்படியென்றால், இதற்குத் தீர்வு தான் என்ன?

  இந்த யோகம் பல பெண்களின் வாழ்க்கையில் துன்பத்தையும், ஏன் ஒரு சில ஆண்களுக்கு பெண்களால் துன்பமும் ஏற்படுவதால் அதனை அடக்கியாள்வது என்பது பின்வரும் அருணகிரி நாதரின் திருப்புகழ் போன்றவற்றை அர்த்தம் அறிந்து உணர்ந்து படிப்பதால், மனம் சீர்ப்பட்டு வாழ்வு சிறக்கவே செய்யும். 

  பெண் ஆசையை அறுக்கும் அருணகிரி திருப்புகழ்!

  பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
  குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
  பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள்

  பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
  யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
  பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யிதழூறல்

  எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
  இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
  மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர்

  இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
  பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
  இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே

  நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
  ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
  நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர்

  நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
  நட்டர வப்பணி சுற்றிம தித்துள
  நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே

  கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
  றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
  றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா

  கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
  குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
  கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.

  சொல் விளக்கம்

  பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள்... பச்சிலைப் பொடியைப் பூசி முகத்தை மினுக்குபவர்கள்.

  குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்... வஞ்சகமான வித்தைகளில் மிக்க சாமர்த்தியசாலிகள்.

  பப்பர மட்டைகள் கைப் பொருள் பற்றிட நினைவோர்கள்... கூத்தாடும் பயனிலிகள். (வருபவருடைய) கைப்பொருளை அபகரிப்பதிலேயே எண்ணம் வைப்பவர்கள்.

  பத்தி நிரைத் தவளத் தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்... வரிசை வரிசையாக உள்ள வெள்ளை நிறமுத்துக்களை ஒத்ததான பற்களாலும், கண்களாலும்  மயக்குபவர்கள். பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழ் ஊறல் எச்சில் அளிப்பவர்... அன்பு மிகும்படியாக (மா, பலா, வாழை என்னும்) முப்பழங்களையும் சர்க்கரையையும் போன்ற வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள்.

  கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தோடும் எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும்  மடமாதர்...
  கச்சைக் கயிற்றாலாகிய படுக்கையில் முகஸ்துதியான வார்த்தைகளை நிரம்பப் பேசி பக்குவமாக ஏமாற்றி வஞ்சித்து அழைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள் (மேலுள்ள)

  இச்சையில் இப்படி நித்தம் மனத் துயர் பெற்று உலகத்தவர் சிச் சி எனத் திரி இத்தொழில் இக்குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே... 

  ஆசையால் இவ்வண்ணம் நாள் தோறும் மனவருத்தத்தை அடைந்து, உலகோர் சீ சீ என்று வெறுப்புக் காட்டத் திரிகின்ற இந்தச் செயலும், இந்தக் குணமும் நான் விட்டொழிக்க நல்ல  திருவடிகளைத் தருவாயாக.

  நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணைக் கடல் பத்ம மலர்த் திருவைப் புணர் நத்து தரித்த கரத்தர்... 

  விஷம் உள்ள பாம்பு (படுக்கையில்) துயில்கின்ற பச்சை மேகம் போன்றவரும், கருணைக் கடலானவரும், தாமரை மலரில் வாசம் செய்யும் லக்ஷ்மியைச் சேர்பவரும், சங்கு தரித்த கையை உடையவரும்,

  திருத்துளவ(ம்) அணி மார்பர் நட்ட நடுக்கடலில் பெரு வெற்பினை நட்டு அரவப் பணி சுற்றி மதித்து உள நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே... 

  துளசி மாலையை அணிந்த மார்பினரும், பாற்கடலின் நட்டநடு மத்தியில் பெரிய மந்திர மலையை நாட்டி, பாம்பாகிய வாசுகியை கயிறாகக் கட்டி, சுற்றிலும் மத்தால் கடைந்து, உள்ளத்தில் ஆசைப்பட்ட அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்த திருமாலின் மருகனே, 

  கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா...     

  மழலைப் பேச்சினளும், கரிய கண்களை உடையவளும், சிறிய இடையை உடையவளும், பெரிய மார்பை உடையவளும் (ஆன) குறப்பெண்ணாகிய வள்ளிக்கு மனத்தில் ஆசை கொண்ட குமரேசனே,

  கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தோடு குற்ற மறக் கடிகைப் புனல் சுற்றிய கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே... 

  இதழ்க் கொத்துக்கள் விரிகின்ற தாமரை மலர் நிறைந்த வயல்களும் (மருத நிலங்களும்), நன்றாக ஓடும் கடிகை என்னும் ஆற்றின் நீரும் சுற்றியுள்ள நல்ல திருவக்கரை என்னும் ஊரில் பொருந்த வீற்றிருக்கும் பெருமாளே.

  சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

  - ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

  தொடர்புக்கு : 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai