அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை இரவு  கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதப் பெருமாள் சயனக்கோலத்தில்
அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை இரவு  கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதப் பெருமாள் சயனக்கோலத்தில் எழுந்தருளினார்.

பெருமாளின் திவ்யதேசங்கள் 108-இல் ஒன்றாகத் திகழும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி சனிக்கிழமை (ஆக. 17) நிறைவு பெற்றது. 

1979-க்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து நடப்பு ஆண்டு ஜூன் மாத இறுதியில் திருக்கோயில்  அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து வெளியில் வந்த அத்திவரதர், திருக்கோயில் வளாகத்தில் உள்ள வஸந்த மண்டபத்தில் ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் அத்திவரதர் திருவிழா தொடர்ந்து 48 நாள்கள் நடைபெற்றது. 

இத்திருவிழாவின் போது அத்திவரதரைத் தரிசிக்க   தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும்  லட்சக்கணக்கான  பக்தர்கள்  வருகை  புரிந்து  அத்திவரதரை  தரிசித்து  சென்றனர்.  ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு அத்திவரதப் பெருமாள் சயனக்கோலத்திலும், ஆகஸ்ட் 1 -ஆம் தேதியிலிருந்து 16- ஆம் தேதி வரை நின்றகோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழா நடந்த 47 நாள்களிலும் மொத்தம் ஒரு கோடிக்கும்  அதிகமான பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளனர்.

விழாவின்  நிறைவாக 48 -ஆவது  நாளான சனிக்கிழமை காலை அத்திவரதர் எழுந்தருளப்படவுள்ள திருக்குளம் புதுப்பிக்கப்பட்டு, வாஸ்து சாந்தி பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலையில் உற்சவர் வரதராஜப் பெருமாள் வஸந்த மண்டபத்தில் அத்திவரதருடன் சேர்த்தி, எதிர் சேவையாற்றும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அரிய நிகழ்வைப் பலரும் பார்த்துப் பரவசமடைந்தனர்.

அதன் பிறகு அத்திவரதரை திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பெருமாள் ஜலவாசம் செய்யவுள்ள நிலையில் அத்திவரதர் பாதுகாப்பாக இருப்பதற்கான தைலக்காப்பு  சாற்றுதல் கோயில் பட்டாச்சாரியார்களால் செய்யப்பட்டது. சிறப்பு  தீபாராதனைகள் காட்டப்பட்டு,  20 வகையான நைவேத்தியங்களும் படைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வஸந்த மண்டபத்திலிருந்த அத்திவரதரை  இரவு 11.45 மணிக்கு கோயில் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், ஸ்ரீபாதம் தாங்கிகள் ஆகியோர்  மங்கள வாத்தியங்களுடன்  திருக்குளத்தில் எழுந்தருளச் செய்தனர். 

பட்டாச்சாரியார்கள்  வேதமந்திரங்கள் முழங்க,  அனந்தசரஸ் திருக்குளத்தில் நடவாவிக் கிணற்றில் அத்திவரதர் சயனக்கோலத்தில் வைக்கப்பட்டார். 

அப்போது வாணவேடிக்கைகளும் நடந்தன. திருக்குளமும், அதில் உள்ள நீராழி மண்டபம், பெருமாள் எழுந்தருளிய நடவாவிக்கிணறு ஆகியவை வண்ண மலர்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

சரியாக இரவு 12.45 மணிக்கு பெருமாள் சயனக்கோலத்தில் திருக்குளத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி நிறைவு பெற்ற  ஒரு சில மணித்துளிகளில் இயற்கையின் அருளால் கடும் மழை பெய்து அத்திவரதர் வைக்கப்பட்டிருந்த நடவாவிக்கிணறு நீரால் நிரம்பியது. 

அத்திவரதர் திருக்குளத்தில் எழுந்தருளிய பின்னர்  நள்ளிரவிலிருந்து தொடங்கிய மழையானது தொடர்ந்து பெய்து அனந்தசரஸ் திருக்குளமும் தண்ணீரால் நிரம்பத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பியிருந்தது. பக்தர்கள் பலரும் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தைப் பார்வையிட்டனர். அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள  அனந்தசரஸ் திருக்குளத்திற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நடவாவிக் கிணற்றில் வைக்கப்பட்ட கல்வெட்டு

திருக்குளத்தில் நடவாவிக்கிணற்றில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆலோசனையின்படியும், அத்திவரதரை 1.7.2019 -இல் வெளியில் எழுந்தருளச் செய்து 48 நாள்கள் வஸந்த மண்டபத்தில் ஆராதிக்கப்பட்டு 17.8.2019 -இல் மறுபடியும் இந்த நடவாவியில் எழுந்தருளச் செய்யப்பட்டார் என அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோரது பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக 1937 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் அத்திவரதர் விழா குறித்து வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளும் நடவாவிக் கிணற்றில் ஏற்கெனவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com