சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று!

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும்,
சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று!

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தியாகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி. ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க துவங்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் இந்த ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபடுவதால் கிடைக்கப்பெறும்.

மஹா சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கும் பலன்கள்

கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும். செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும். சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

'முதாகராத்த மோதகம்' எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம்(5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம்(எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும். இதெல்லாம் உட்கார்ந்து சொல்வதற்கு நேரம் இல்லை என்று சொல்பவர்கள் இன்று முழுவதும் "ஓம் கம் கணபதயே நம" என்ற மூலமந்திரத்தை மனதில் சொல்லி வழிபடலாம். 

இன்று மாலை மறக்காமல் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, தங்களால் இயன்ற அறுகம்புல் மாலை அல்லது புஷ்பம் என ஏதாவது ஒன்றை வாங்கி கணபதிக்குக்  காணிக்கை செலுத்திவிட்டு, தோபிக்கரணம் போட்டு முழு முதற்கடவுளே என் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். கட்டாயம் கணபதி அருள்புரிவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com