Enable Javscript for better performance
சொர்க்கத்தை அடைய இதுவும் ஒரு வழி!- Dinamani

சுடச்சுட

  
  guru_purnima

   

  பணத்தை புழுவுக்கு சமமாக மதிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதுதான் ஜானஸ்ருதி என்ற மன்னனின் கதை. இந்த மன்னன் தான தர்மத்தில் உயர்ந்தவன். பகல் முழுக்க தானம் செய்வான். இரவானால், உப்பரிகையில் போய் படுத்துக்கொள்வான். இவன் தானம் செய்ய செய்ய, புண்ணியத்தின் அளவு உயர்ந்து கொண்டே போனது. 

  ஒருநாள், இவன் உப்பரிகையில் நிலா வெளிச்சத்தில் படுத்திருந்தான். அப்போது, இரண்டு அன்னப் பறவைகள் பேசியபடியே பறந்தன. பறவைகளின் மொழி இவனுக்கு தெரியும். ஒரு அன்னம், இன்னொன்றிடம், இதோ படுத்திருக்கிறானே, ஜானஸ்ருதி. இவனைப் போன்ற புண்ணியவான் யாருமில்லை, என்றது.

  இன்னொன்று அதனிடம், என்ன பெரிசா புண்ணியம் பண்ணிட்டான், இவனுக்கு மறுபிறவி உறுதி. என்ன தான் இருந்தாலும் நம்ம ரைக்வருக்கு இவன் ஈடாவானா? என்றது.

  ஜானஸ்ருதி எழுந்துவிட்டான். தன்னை விட ஒரு புண்ணிய ஆத்மாவா! 

  அவர் நம்மை விட கூடுதல் தானம் செய்திருப்பாரோ! ஒருவேளை, ராத்திரி கூட தானம் செய்வார் போலிருக்கிறது! எதற்கு சந்தேகம்! அவரைப் பார்த்து விட்டால் விஷயம் தெரிந்து விடப்போகிறது!

  ஏவலர்களை அழைத்தான். ரைக்வர் எங்கிருக்கிறார் என விசாரித்து வரச்சொன்னான். அவர்களும் ஊர் ஊராக சுற்றினார்கள். ஒரு கிராமத்தில், ரைக்வர் என்ற பெயரில், ஒரு தொழுநோயாளி படுத்துக்கிடந்தார். உடம்பெல்லாம் புழுக்கள் நெளிந்தன. ஊர் மக்களிடம் விசாரித்தார்கள். எங்களுக்கு தெரிந்து இவர் பெயர் தான் ரைக்வர். இவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பெயரில் இல்லை, என்றனர் மக்கள்.

  ஏவலர்கள் மன்னனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அவனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். யாராயிருந்தால் என்ன! பார்த்து விடுவோம் என தங்கத் தாம்பாளம் ஏழில் நவரத்தினங்களை அள்ளி வைத்து பயபக்தியோடு அவரருகே சென்றான். 

  சுவாமி! நான் இந்நாட்டு மன்னன் ஜானஸ்ருதி. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றான். 

  ரைக்வர் எழுந்தார். தன் உடலில் இருந்து ஒரு புழுவை எடுத்து கீழே போட்டார். மன்னா! உனக்கு இந்தப் பொருட்கள் பெரிதாக இருக்கலாம். ஆனால், எனக்கு இது இந்த புழுவுக்கு சமமானது, என்றார்.

  அப்படியா! இந்த ஐஸ்வர்யத்தை புழுவுக்கு சமமாக மதிக்கிற ஒருநிலை கூட இருக்கிறதா சுவாமி என்றான் அவன். ஏனில்லை! அந்த நிலையை அடைய வேண்டுமானால், நீ இந்த பதவியையே உதறிவிட்டு வர வேண்டும். வருவாயா? என்றார். மன்னன் உடனடியாக பதவியைத் துறந்து விட்டு, அவரிடம் உபதேசம் பெற்றான். 

  அவ்வாறு அவன் பெற்ற உபதேசம் என்ன தெரியுமா? நரசிம்மரை வழிபடும் முறையை அவர் உபதேசித்தார். அவனும் நரசிம்மரை வழிபட்டு மோட்சத்தை அடைந்து விட்டான். அவன் செய்த தானத்தின் அளவிற்கு அவனுக்கு குபேர பதவி கூட கிடைக்கும். ஆனால், தவறேதும் நிகழ்ந்தால், மீண்டும் பிறக்க நேரிடும். ஆனால், இப்போது கிடைத்த சொர்க்க பதவியோ, இறைவனின் அருகிலேயே இருக்கக்கூடிய பெரிய பதவி. 

  பணத்தை யாரொருவர் புழுவாக எண்ணி, இறைவழிபாட்டில் இறங்குகிறானோ அவனே சொர்க்கத்தை அடைய முடியும் என்பது இந்தக் கதை காட்டும் நீதி.

  நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….” 

  ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...! 

  தொகுப்பு - கோவை ச. பாலகிருஷ்ணன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai