சித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்!

 சித்தர்களின் பூமி எனப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்
சித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்!

குடவாசலில் இருந்து திருவிடசேரி செல்லும் சாலையில் ராதாநல்லூர் எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றினை கடந்து ஒரு கி.மீ தூரம் சென்றால் சித்தாடி கிராமத்தினை  அடையலாம். சித்தாடி வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் தான். 

குகையிடி கலகங்களின் பின்னர்,  பல சைவ மடங்கள் தமிழகத்தில் நிறுவப்பட்டு, அதன் கீழ் பல கோவில் நிர்வாகங்கள் "பண்டார" குலத்தவர்களின் நிர்வாக கட்டுப்பாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இவற்றிற்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பண்டாரவாடை என அழைக்கப்பட்டது. சித்தர்கள் பலர் நிறைந்து இருந்து  சித்தர்கள் ஆடிய பூமி என்ற சித்தாடி எனவும் அழைக்கப்பட்டது. அல்லது சிற்றம்பலமாடி என இறைவன் பெயர் தாங்கிய ஊராகலாம். 

விஜய நகர ஆட்சிக்காலத்தில் குறிப்பாக தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின் போது நில நிர்வாகம் எத்தனை கவனத்துடன் நிர்வகிக்கப்பட்டது என்பதற்கு இந்த கிராமத்தினை பற்றிய திருவிடைமருதூர் கல்வெட்டுக்குறிப்பு கி.பி. 1542-1565 சான்றாகும்.

நாட்டின் கிராமங்கள் "பண்டாரவாடை", "அமரம்", "மானியம்" என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது. "பண்டாரவாடை" கிராமங்கள் பேரரசின் நேரடி நிர்வாகத்தில் செயல்பட்டன. சித்தாடி கிராமம் கோயிற் பற்றாக பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனை பண்டாரவாடை கிராமமாக அரசு அதிகாரிகள் மாற்றிவிட்டனர்.

இதனை நாயக்க மன்னர் விட்டல தேவராயரின் கவனத்துக்கு திருவிடைமருதூர் கோயில் தேவகன்மி திருச்சிற்றம்பல பட்டர் கொண்டு செல்ல அரசரின் உத்தரவின் பேரில் தன்னுடைய "முத்திரை வாங்கி" என்னும் பதவி வகிக்கும் அதிகாரிகளான லிங்காயர், தூனி நாயனார் என்னும் இருவரையும்  அனுப்பி சித்தாடி, மற்றும் அடுத்து உள்ள கிராமம் ஆவணம் என்னும் இருகிராமங்களையும்  ஆய்வுசெய்ய உத்தரவிட்டார்.

மகாலிங்க சுவாமி கோயிற்பற்று கிராமம் என்பதற்கான மருதப்பர் முத்திரை கற்கள் நிற்பது கண்டு முத்திரை வாங்கி அதிகாரிகள் அறிக்கை தரவே அதன்படி விட்டல தேவராயர் ஸகாப்தம் 1466 ஆன கிபி 1544-ல் மீண்டும் கோயிற்பற்று கிராமங்களாக சித்தாடி மற்றும் ஆவணம் என்னும் இரு கிராமங்கள் மாற்றப்பட்டன. அருகில் கோயில் பத்து எனும் கிராமமும் உள்ளது. 

விஜய நகரப் பேரரசின் ஆணையினை சாசனமாக வடித்துத் திருச்சிற்றம்பல பட்டரிடமே விட்டல தேவராயர் அளித்தார். இந்த சாசனமே திருவிடைமருதூரில்  கல்வெட்டாக பொறிக்கப்பெற்றுள்ளது.

இந்த ஊரில் கிழக்கு பகுதியில் பெரியகுளத்தின் கிழக்கு கரையில் உள்ளது சிவாலயம். தற்போது குளத்தை இரண்டாக பிரித்து சாலை செல்கிறது. இறைவன் கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார். எனினும் மேற்கு பகுதியில் வாயில் உள்ளது. சிறிய கோயில்தான் எனினும் அழகு மிக்கது கோயில் குருக்களும் மிகவும் சிரத்தையாக பூஜைகள் செய்துவருகின்றார். ஓருகால பூஜைக்கு மட்டும் குருக்கள் வருகின்றார்.  

இறைவன் பக்தவத்சலேஸ்வரர் கிழக்கு நோக்கியுள்ளார். இறைவி தர்மாம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். பிரகாரத்தில் மதில் சுவற்றினை ஒட்டியபடி விநாயகர் சிற்றாலயம் உள்ளது அதுபோல் வடமேற்கு மதில் சுவற்றினை ஒட்டியபடி முருகன் சன்னதி உள்ளது. வடகிழக்கில் வழக்கம்போல் நவகிரகங்களும் பைரவர் சன்னதியும் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகனும் துர்க்கையும் உள்ளனர்.
 
- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com