கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடுவதன் தாத்பரியமும், விரத முறையும்?

மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடுவதன் தாத்பரியமும், விரத முறையும்?


மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தேவகிக்கும்-வசுதேவருக்கும் பிறக்கும் குழந்தையால் அண்ணன் கம்சன் உயிருக்கு ஆபத்து என்று கம்சனின் கனவில் அசரீரி ஒன்று ஒலித்ததாம். இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கம்சன் தன் உயிர் முக்கியமா, தங்கை மீதான பாசம் முக்கியமா? என்று வரும் போது இறுதியில் தன் உயிர் தான் முக்கியம் என்று முடிவு செய்தான். உடனே தேவகியை கொன்றுவிட முடிவு செய்தான் கம்சன்.

வாளை ஓங்க முற்பட்டான். கம்சா! நிறுத்து தேவகிக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு! என்று மனைவியின் மீதான பாசத்தால் அவனிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார் வசுதேவர்.

அதன்பின் தேவகியை கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டான் கம்சன். ஆனால் இருவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

தேவகிக்குப் பிறந்த குழந்தைகளைத் தொடர்ச்சியாகக் கொன்று புதைத்தான் கம்சன். தொடர்ந்து 8-வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்தக் குழந்தையும் தன் அண்ணன் கையால் மடியப்போகிறதே என்று எண்ணி, கலங்கினால்.

தேவகிக்கு ஒரு நள்ளிரவு நேரத்தில் எட்டாவது குழந்தை பிறந்தது. அழகான ஆண் குழந்தையைக் கண்டதும் தேவகிக்கும் வசுதேவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. மறுகணமே அந்தக் குழந்தை மகா விஷ்ணுவாக உருவெடுத்துப் பேசத் தொடங்கியது. தங்களின் முற்பலனால் நான் உங்களின் மகனாகப் பிறந்துள்ளேன்.

என்னைக் கோகுலத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.

சிறை வாசல் உடைந்து பெண் குழந்தையைக் கொண்டு வந்து தேவகியிடம் சேர்த்தார் வசுதேவர். விஷயம் தெரிந்து காலையில் வந்து பார்த்த கம்சன் பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். எப்படியோ அதை அழித்துவிட வாளை ஓங்கினான் கம்சன், அந்தக் குழந்தை துர்க்கையாக வடிவெடுத்து ஏ! கம்சா உன்னைக் கொல்லப்போகிறவன் பத்திரமாக உள்ளான் என்று கூறி மறைந்தது. உரியக் காலத்தில் கம்சனை அழித்து மக்களைக் காப்பாற்றினார் கண்ணன். ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினமான தேய்பிறை அஷ்டமி திதியை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

விரத முறை: 

அன்றைய தினம் காலையில் வீட்டை மெழுகிக் கோலமிட்டு, கிருஷ்ணருக்குப் பிடித்த பால், தயிர் வெண்ணெய், முறுக்கு, சீடை, ரவா லட்டு ஆகிய பலகாரங்களைப் படைத்து தம்பதிகள் இருவருமாக விரதத்தை மேற்கொள்ளலாம். 

அன்றைய தினம் வீட்டின் வெளியிலிருந்து கிருஷ்ணரின் திருப்பாதத்தை, வீட்டிற்குள் இருக்கும் பூஜையறை வரை வரைவார்கள். வீட்டில் சிறுகுழந்தைகள் இருப்பின் குழந்தையின் கால் தடத்தைப் பதிப்பார்கள். இப்படி வரைவதால் கிருஷ்ண பகவானே வீட்டிற்குள் வருவதாக ஐதீகம். 
திருமணமாகதவர்கள் நல்ல கணவர் வேண்டியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மழலைச் செல்வம் வேண்டியும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். 

கிருஷ்ணர் சிலையை வாங்கித்தான் வழிபடவேண்டும் என்றில்லை, சிலை வாங்கும் வழக்கம் உள்ளவர்கள் வாங்கி அலங்காரம் செய்து வழிபடலாம். இல்லையெனில் வீட்டில் உள்ள கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம். 

கிருஷ்ண ஜெயந்தி விழா நம் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளிலும் குறிப்பாக வடநாடுகளில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தியை அனைவரும் கொண்டாடி வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com