சனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர் சிவன்கோயில்!

தெய்வீகம், கலை, இலக்கியம், மொழி, இசை இவை வளர்ந்த இடம், பாதுகாக்கப்பட்ட
சனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர் சிவன்கோயில்!

தெய்வீகம், கலை, இலக்கியம், மொழி, இசை இவை வளர்ந்த இடம், பாதுகாக்கப்பட்ட இடம் கோயில்கள் தான். கோயில்கள் இல்லையென்றால் கலையும், இலக்கியமும், மொழியும் தமிழகத்தில் வளர்ந்திருக்க முடியாது.
 
ஒவ்வொரு சிறு கோயில்களிலும் அது கிராம தேவதைகள் கோயில்களானாலும், சைவ வைஷ்ணவ கோயில்களானாலும் சரி அங்கு கலை, இசை மொழி வளர்க்கப்பட்டது.அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். இந்த சிந்தனையுடன் நாம் செல்வது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள "செருகளத்தூர்" தலம்.   

செருக்களம் என்பதற்கு போர்க்களம் என பெயர். போர் நடைபெற்ற இடம் அல்லது போர்வீரர்கள் அடங்கிய சிறு படை தங்கியிருக்கும் இடமாக இருந்திருக்கலாம். இதிலிருந்து செருகளத்தூர் வந்திருக்கலாம். 

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள குடவாசல் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காவிரியின் பிரிவுகளில் ஒன்றான குடமுருட்டி இவ்வூரை மாலையிட்டார் போலச் செல்கிறது. இங்கு ஒரு சிவாலயமும், வைணவ ஆலயமும் உள்ளன. சிவாலயம் ஊரின் கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சோமன் வழிபட்டதால் சோமேஸ்வரர் என இறைவன் அழைக்கப்படுகிறார். 

கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாக உள்ளது இளம் வயது குருக்கள் பூசிப்பதைப் பார்க்க மனதுக்கினிய காட்சியாக உள்ளது. கோயில் நடுத்தர அளவுடைய கோயில், கிழக்கு தெற்கு என இரு வழிகள் உள்ளன. சோமேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி லோகநாயகி தெற்கு நோக்கியும் உள்ளனர். அகில உலகை காக்கும் இறைவனை,  இறைவி இங்கு வந்து வழிபட்டதால் லோகநாயகி எனப் பெயர். இத்தலத்தினை ஆனந்தகிரி பீடம் என அழைக்கின்றனர். 

பிரகாரத்தில் உள்ள விநாயகர் செல்வவிநாயகர் எனவும், முருகன் இருக்குமிடத்தில் மகாலட்சுமி சன்னதியும் உள்ளது. மகாலட்சுமி சன்னதியிருக்குமிடத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் தெற்கு நோக்கியவாறு சனி பகவான் உள்ளார். இதன் விளக்கம் அறியமுடியவில்லை. 

கருவறை கோட்டத்தில் தென்முகனும், துர்க்கையும் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்கள் உள்ளன. அருகில் சிவசூரியன் சன்னதி உள்ளது. இறைவனின் எதிரில் உள்ள முகப்பு மண்டபத்தின் வெளியில் உள்ளது சிறிய நந்தி மண்டபம். சண்டேசர் சன்னதி வாயிலில் ஒரு தாரா லிங்கமும் நந்தியும் உள்ளது. 

தென் திசை நோக்கிய சனி என்பதால் சனியின் தாக்கம் உள்ளவர்கள் கட்டாயம் தரிசனம் செய்யவேண்டிய தலம் இது என்றால் மிகையல்ல. அனைத்து நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய கோயில் இதுவாகும். குறிப்பாக  திங்கள் கிழமையில் வழிபடவேண்டிய கோயில் இது. 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் பிரதான சாலையிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் செருகளத்தூர்சிவன்கோயில் திருத்தலம் அமைந்துள்ளது. 

வாருங்கள் கிராம சிவாலயம் செல்வோம்

- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com