பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.30 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்தது. உடன் வெள்ளி சிம்ம வாகனத்தில் கும்பம் வலம் வந்தது. பின்னர் கொடிமரத்தில் வெண்பட்டு சுற்றப்பட்டு சிறப்பு பூஜையும், அங்குச தேவருக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு கொடியேற்றம் காலை 11.10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 பூஜை ஏற்பாடுகளை பிச்சைக்குருக்கள், சோமேஸ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2-ஆம் திருநாள் முதல் 8-ஆம் திருநாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. இரவு ஒவ்வொரு நாளும் சிம்மம், மூஷிகம், கருடன், மயில், ரிஷபம், கமலம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) 6-ஆம் திருவிழாவாக மாலை 5 மணிக்கு கஜமுஹாசுர சம்ஹாரமும், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) திருத்தேரோட்டமும் அன்று மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவர் ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் அளிப்பார்.
 தொடர்ந்து 10-ஆம் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று திங்கள்கிழமை காலை கோயில் திருக்குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவமும் நண்பகல் முக்குருணி எனப்படும் மெகா கொழுக்கட்டைப் படைத்தலும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com