சூரியனால் ஏற்படுவது யோகமா! தோஷமா!

யோகம் என்றவுடன் அனைவரும் நல்லது என்று நினைப்போம். ஆனால் அதுவே தோஷமாக இருக்கும்
சூரியனால் ஏற்படுவது யோகமா! தோஷமா!

 
யோகம் என்றவுடன் அனைவரும் நல்லது என்று நினைப்போம். ஆனால் அதுவே தோஷமாக இருக்கும் அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். வேத ஜோதிடத்தில் ஒளிக்கிரகமான சூரியனை பாவியாகக் கூறினாலும் அவரால் உண்டாகும் பொதுவான யோகங்களைப் பார்ப்போம். நல்ல யோகப்பலன்கள் லக்கினத்திற்கு சொல்லப்படும் கிரகங்களின் சேர்க்கை உச்சம் திரிகோணத்தில் இடம் பெற்றால் அதன் பலன் ரெட்டிப்பு ஆகும். இதில் அசுபர்பார்வை லக்கினத்திற்கு யோகமில்லாதவர் பார்வை பெற்றால் அதன் பலன் மாறுபடும்.

பாரப்பா மூன்றாறு பத்துஒன்று

பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்

சீரப்பா சீலனுட மனையில் தானும்

சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்

வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி

வளமான புத்திரர்கள் அரசர்நேசம்

கூறப்பா புரிவனடா சத்துருங்கன்

கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.

இப்பாடலில் புலிப்பாணி இலக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் சூரியன் (சூரியனை பலபெயர் கொண்டு வர்ணித்து) அமரப் பிறந்த ஜாதகர், தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவபரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும். அச்செல்வனுக்கு வாகன யோகமும், ஞானமும், புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும், அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக மற்றும் மூர்க்கனாக விளங்குவான்.

கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு 

கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில்

ஆரேனீ ஆதித்த னிருந்தானானால்

அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு

சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய்

சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும்

கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே

கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே   - புலிப்பாணி 

இவற்றிலும் சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் அந்த ஜாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, கண் நோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று என் குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம்மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும் என்று கிரகநிலையை நன்கு ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக.   

சூரியன் புதன் சேர்க்கை

சூரியனுடன் புதன் சேர்ந்தால் மற்றும் இதில் எதாவது உச்சமோ ஆட்சியோ பெற்றால் அந்த ஜாதகர் அறிவில் மற்றும் ஞானத்தில் அதிக உயர்வு பெற்றவர்.
விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டில் நான்கொன்றில் வலையைக்கூடின மன்னவனாவான்!
-   அறுசீர் ஆசிரிய விருத்தம் 

சூரியன் புதன் இடந்து நன்னிலையில் லக்கின கேந்திரத்தில் அமரப்பெற்றால் அந்த ஜாதக அரசனாவான்.

அமாவாசை யோகம் 

சூரியன் சந்திரன் நெருங்கிய பாகையில் ஒன்றாக இருப்பது அமாவாசை யோகம் நிகழும். இது வளர்பிறை சந்திரன் சேர்க்கை நல்ல பலனை தரும். ஜாதகர் உடல் மற்றும் மனவலிமையும் கொண்டவராகவும், பல எந்திர கருவிகள் உருவாக்குபவனாகவும், மருத்துவம் அறிந்தவனாகவும், புத்திக்கூர்மை, சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள். இந்த இரு ஒளிகிரகங்கள் லக்கினத்திற்கு திரிகோண, கேந்திர மற்றும் 2,9,10 ஆகிய இடங்களில் ஒன்று சேர்ந்து இருந்தால் புகழ், செல்வம், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள். அமாவாசை யோகம் ஒருவிதத்தில் நல்லது என்றாலும் சில பாவங்களில் அமரும்பொழுது மாறுபடும்.

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு

பகலவனும் கலை மதியும் கோணமேற

சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்

செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு

ஆறப்பா அமடு பயமில்லை யில்லை

அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்

கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்

கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே  - புலிப்பாணி 

சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் எல்லாவித செல்வங்களும், வீடு, ஆயுள் விருத்தி , கொண்டவராகவும் மற்றும்  ஜாதகர் இரவில் சப்தங்களைக் கேட்பானகவும் இருப்பார்.  இத்தகைய  அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 78 வயது வரை உயிர் வாழ்வார் என  சித்தர்  கூற்று.

வேசி யோகம் 

இரவிக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன்தான்  கூடி

இருந்தக்கால் அது வேசி யோகமென இசைப்பர்

புரவலரால்  பூச்சியமும் நல்வகையோ சனைக்கும் 

புந்திநல்லோ ரெல்லாம்பு கழ்ந்தருளும் புகழும்  - ஜாதகாங்கரம் 

ஒரு ஜாதக கட்டத்தில் சூரியனுக்குப் 12ல் சுக்கிரன் இருந்தால் வேசியோகம். இந்த யோகத்தில் பிறந்தவர் மன்னர்களால் மதிக்கப்படுவர். இந்த ஜாதகர் நல்ல மனமும், பெரிய நிலபுலம் உடையவராகவும், அறிஞசனாகவும் திகழ்வான். இதுதவிர ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு 2ம் இடத்தில் சந்திரன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சனி போன்ற கிரகங்கள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால் அது வேசி யோகம் என்றும் கூறப்படுகிறது. 

வேசி யோகத்தை சத்ருஜெயம் என்றும் கூறலாம். ஏனென்றால் எதிரிகளை வெல்லுதல் மற்றும் எதிரிகளாலே செல்வம் கொண்டுவரும் தன்மை கொண்டவர்கள் இந்த ஜாதககாரர்கள். ஆனாலும் இவர்களுக்கு பெண்களால் பிரச்னை ஏற்படும் அதனால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் தலையை நீட்டாமல் இருப்பது சாலச் சிறந்தது.  இதில் இருபாலர் கற்புநிலை என்று பார்க்க இன்னும் 1,4,7 பாவத்தையும் கிரக சேர்க்கையும் பார்க்க.

இன்னும் சூரியனால் ஏற்படும் யோகங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் முக்கியமாக வசி யோகம், உபயசர யோகம், பாஸ்கர யோகம், ரவிசந்திர யோகங்கள். நிபுண யோகம், திரிலோசன யோகம், மருத, மாருத யோகங்கள் ஆகும். இவை ஒன்று மற்றும் பல கிரகங்கள் சேர்ந்து யோகத்தினை கொடுக்கும். பொதுவாக சூரியனால் ஏற்படும் இந்த வகை யோகப்பலன்கள் தைரியசாலிகளாகவும், அரசாங்க அதிகாரியாக, உலகப் புகழ் பெற்றவர்கள். நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம், உயர்பதவி பெற்றவராகத் திகழ்வார்கள், உலகப் புகழ் பெற்றவர்கள், தந்தையரால் புகழ், பணத்தைச் சேர்க்கும் ஆர்வமும் உள்ளவர்களாகவும், சிந்தனையாளராகவும், ஞாபகசக்தி மிக்கவராகவும், பேச்சில் கெட்டிக்காரர்களாகவும், ஒருசிலர் மூடத்தனம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

குருவே சரணம் !

- ஜோதிட சிரோன்மணி தேவி
தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com