விநாயகர் சதுர்த்தி: நவக்கிரக தோஷம் போக்கி நலமெல்லாம் தரும் லஸ் நவசக்தி விநாயகர்!

வரும் திங்கள் கிழமை 02/9/20189 திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திருமயிலை
விநாயகர் சதுர்த்தி: நவக்கிரக தோஷம் போக்கி நலமெல்லாம் தரும் லஸ் நவசக்தி விநாயகர்!

வரும் திங்கள் கிழமை 02/9/20189 திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திருமயிலை லஸ் நவசக்தி விநாயகர் மற்றும் திருச்சி உச்சிப்பிள்ளையார், பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் முக்குருணி விநாயகர், பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் மற்றும் சகல விநாயகர் கோயில்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடங்களிலும் பக்தர்கள் கூட்டத்தையும் உற்சாகத்தையும் காண முடிகிறது.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரை போற்றுவார்கள். விநாயகர் அவ்வளவு எளிமையானவர். "மஞ்சளிலே செய்யினும், மண்ணினலே செய்யினும் அஞ்செழுத்து  மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும்பிள்ளையார" எனும் வரிகள் அவரின் எளிமையை விளக்குவதாகும். மஞ்சளில், மண்ணில், அரிசி மாவில், காகிதக்கூழில் எனக் கூறிக்கொண்டே போகலாம். அவ்வளவு ஏங்க? பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராக வைத்து அறுகம்புல் சாற்றிவிட்டால் ஓடி வந்துவிடுவார் நம் குறை தீர்க்க. தற்போது குழந்தைகளுக்குப் பிடிக்கும் சாக்லேட் விநாயகராகவும் அவதரித்துவிட்டார். எந்த ஒரு ஓவியராலும் ஓவியரல்லாதோரும் எளிதில் வரையக்கூடிய உருவம் நம் விநாயகரின் உருவம்தான். அவரை எப்படி வரைந்தாலும் பார்ப்பவர் கண்களைப் பொருத்து அழகாகக் காட்சியளிப்பார்.

ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர். தங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், விநாயக சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடும் மிக மிக முக்கியமானது.

நவசக்தி விநாயகரின் ஜாதகம்

ஸ்ரீ விநாயகர் போன்ற தெய்வங்கள் எல்லாம் நவ கோள்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவருக்கே ஜாதகமா என சிலருக்கு தோன்றலாம். எனவே தெய்வங்களுக்கு ஜாதகம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து ஸ்ரீ நவசத்தி விநாயகர் அவதார குறிப்புகளைக் கொண்டு நம் முன்னோர்கள் நமக்களித்துள்ள ஜாதகத்தை இந்த  தினத்தில் விநாயக சதுர்த்தி நாளில் நினைவு கூறுவது நன்மை பயக்கும்.

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 

நன்மை பயக்கும் எனின்"

எனும் வள்ளுவர்பிரானின் வாக்கிற்கிணங்க விநாயகர் ஜாதகம் நேர்மறை எண்ணத்தை உருவாக்கி நன்மை தரும் என்றால் வணங்குவதில் தவறில்லையே! சரி அவர் ஜாதகம் நமக்கு என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

விநாயகர் விருச்சிக லக்னத்தில் ஹஸ்த நக்ஷத்திரத்தில் கன்னி ராசியில் பிறந்தவர். லக்னத்தில் கேது மூன்றாமிடமாகிய தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம். ஏழில் சனி, ராகு, ஒன்பதாமிடமாகிய பாக்கிய ஸ்தானத்தில் குரு உச்சம், பத்திலே சூரியன் ஆட்சி, பதினொன்றாம் வீடாகிய கன்னியில் சந்திரன் உச்ச புதன் மற்றும் நீச சுக்கிரனுடன் சேர்ந்து நிற்கிறார்கள்.

விருச்சிக ராசியை லக்னமாக கொண்டவர்கள் அளவில்லாத சூக்ஷ்ம ஞானத்தையும் எப்படியாவது அடுத்தவரை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். புதனின் வீடாகிய மிதுனம் மற்றும் கன்னியை ராசியாகவோ லக்னமாகவோ கொண்டவர்கள் தங்களது சோம்பல் தனத்தால் பல அறிய குறுக்கு வழிகளைக் கண்டுபிடிப்பர் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். உலகத்தைச் சுற்ற மயிலில் சென்ற முருகனுக்கு முன் “அம்மையப்பன் தான் உலகம் - உலகம் தான் அம்மையப்பன்” என்ற சூக்ஷ்மத்தை உலகத்துக்கு உணர்த்தி   மாம்பழத்துக்காகத் தாய்தந்தையைச் சுற்றி தம்பியை வென்ற சாதுரியம் யாருக்கு வரும்? 

கேது பகவான் விநாயகரின் ஜாதகத்தில் லக்னத்தில் நின்று தன் ஞானகாரகத்தை சிறப்புற அமைத்துக்கொண்டார் என்பதுதான் சரியாக இருக்கும்.  மேலும் கால புருஷ எட்டாவது ராசியாகிய விருச்சிக லக்னத்தில் கேது நிற்க பிறந்தவர்கள் முகம் மாற்றத்திற்குட்பட்டு இருக்கும் என்பது ஜோதிட விதி.  லக்னத்திற்க்கு உச்ச குருவின் பார்வை அமைந்ததால் குருவின் காரகம் நிறைந்த யானை முகத்தையே முகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் எளிமையானவர்களாக இருப்பார்கள். அரசமரத்தடியில் வசிப்பதற்கு இதுவே காரணம் எனலாம். (அரசமரத்தடியில் தான் அளவிலா ஞானம் வரும் என்ற சூக்ஷ்மத்தை உணர்ந்தவர் என்பது தனிக்கதை).

தனம், வாக்கு குடும்பம் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியாகிய குரு பாக்கியஸ்தானத்தில் உச்சம். ஆகவே மிகவும் செல்வாக்கும் சொல்வாக்கும் நிறைந்தவர். பணம் நிறைந்த மும்பைவாசிகளும் வட இந்தியர்களும் விநாயகரை வணக்கும் ரகசியம் இதுதான். புத்திர தடை நீக்குபவர். யானையின் காரகர் குரு பாக்கியஸ்தானத்தில் உச்சமானது யானையின் தலையை முகமாகக் கொள்ளும் பாக்கியத்தைத் தந்தது. 

மூன்றாம் வீடாகிய தைரிய, சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் உச்சமாகி வேகத்தின் அதிபதியாகிய குமரக்கடவுளே சகோதரராக அமைந்தது வியப்பல்லவா! மேலும் மூன்றில் செவ்வாய் காரகோபாவ நாஸ்தி என்பார்கள். மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகைவீட்டில் நின்றது பழத்திற்காக சகோதரனையும் எதிரியாக்கியது. அதனால் தான் விநாயரின் தமையன் மாம்பழத்திற்காகக் கோபித்து குன்றின் மேல் சென்று அமர்ந்தார் போலும். அதே சமயம் சகோதர காரகன் உச்சம் அடைந்ததால் மோகினி பாலனான ஸ்ரீ ஐயப்பனையும் சகோதரனாக அடைந்ததையும் குறிப்பிட வேண்டும். 

நான்காம் அதிபதி சனி நட்பு வீடாகிய ரிஷபத்தில் சனி ராகுவோடு சேர்ந்து நின்றது தாயாரின் அளவிலா பாசத்திற்கு காரணமாகியது.  மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருட்களெல்லாம் சனிதான் காரகர். நிலத்தைத் தோண்டுவதும் சனிதான் காரகர். வாகன ஸ்தானாதிபதியாகிய சனி திக்பலம் பெற்றது நிலத்தை குடைந்து செல்லும் எலியை வாகனமாக்கியது. மேலும் சனைச்சர பகவான் தனது பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் தான் களி மண்ணில் செய்தாலும் உச்ச குருவின் பார்வை பெற்றதால் மஞ்சளில் செய்தாலும் ஓடோடி வந்துவிடுகிறார் போலும்.

லக்னாதிபதியே ஆறாம் வீட்டதிபதியாகி மூன்றில் உச்சமானது அனைவரின் கடன் நோய் எதிரிகளை களைவதில் முதன்மையானவர் என்கிறது.  அதனால் ருண விமோசனர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். 

ஏழில் சனி நின்றால் திருமணத்தடை என்பார்கள். கால தாமத திருமணம் என்றும் கூறுவார்கள். ஏழிலே சனி திக்பலம் பெற்று ராகுவோடு சேர்ந்து நின்றதும் ஏழாமதிபதி கன்னியில் நீசமடைந்ததும் தென்னிந்தியாவில் திருமணமாகாதவராக நிறுத்தியது. பின் புதனோடும் சந்திரனோனும் சேர்ந்து நீசபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தியதால் களத்திர தோஷம் நீங்க பெற்றார்.  இரண்டாம் அதிபதியோ ஏழாம் அதிபதியோ உச்ச கிரக தொடர்பு பெற்றால் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி அமைவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நமது விநாயகரின் இரண்டாம்வீட்டதிபதி குரு பகவான் உச்ச வீட்டில் நின்று விநாயகருக்கு சித்தி புத்தி என்ற இரு மனைவி அமைந்தது மட்டுமல்லாமல் அனைவரின் களத்திர தோஷம் போக்குபவராகவும் விளங்குகிறார்.

மறைந்த புதன் நிறைந்த கல்வி என்பார்கள். எட்டு பதினோறாம்  வீட்டின் அதிபதியான புதன் காலபுருஷனுக்கு மறைவு ஸ்தானமான கன்னியில் நின்றது நான்மறைகளும் விநாயகரிடம் பணிந்து நின்றது. பாக்கியஸ்தானமாகிய கடகத்தில் குரு உச்சம் பெற்றதும் பாக்கிய ஸ்தானாதிபதி கன்னியில் நின்றது இவரைப் பல கன்னிப்பெண்கள் திருமண பாக்கியம் வேண்டி சுற்றி சுற்றி வர செய்தது. புத்திர ஸ்தானதிபதி குரு பாக்கியத்தில் உச்சம் பெற்று நின்றதால் சந்தோஷிமாதா எனும் மகளை நமக்கு அளித்தார். பத்தாமதிபதி சூரியன் பத்திலே ஆச்சி பெற்றது எதிலும் முதல்வராக்கி முழுமுதற்கடவுளாக்கியது. மேலும் அனைத்து இடங்களிலும் சூரியனைப்போல் நீக்கமற வியாபித்து நிற்கச் செய்தது. மேலும் பல அசுரர்களைப் போரில் வெற்றிகொள்ள வழிவகுத்தது. 

பதினோறாம் வீடு ஆசைகளை நிறைவேற்றும் இடம். இங்கு புதன் உச்சம் ஆகி உணவின் காரகர் சந்திரனோடு சுவையான உணவின் காரகர் மற்றும் இனிப்பின் காரகர் சுக்கிரன்  நீசபங்க ராஜயோகத்தை பெற்றதால் மோதகப் பிரியராக்கியது.விநாயகரின் ஆசையே கொழுக்கட்டைதான். கையினை குறிக்கும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பிறந்ததால் கையில் எப்போதும் கொழுக்கட்டை மற்றும் மோதகத்தை ஏந்தி நிற்கச் செய்தது. மேலும்  போஜன ஸ்தானாதிபதி குரு உச்சமாகி லக்னத்தை பார்த்ததால் குருவின் காரகம் பெற்ற இனிப்பு சுவையுள்ள லட்டு மற்றும்  கொழுக்கட்டை மற்றும் மோதகப்பிரியர் ஆனார் என்பது  குறிப்பிடத்தக்கது.

குரு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் பொதுவாக குண்டாக இருப்பார்கள். உணவின் காரகர்கள் காலபுருஷனுக்கு வயிற்றைக் குறிக்கும் இடத்தில் நின்றதாலும் போஜன ஸ்தான குரு உச்சம் பெற்றதாலும் உலகத்தையே  தொப்பையாகப் பெற்று உலகில் உணவுப் பஞ்சத்தை போக்குகிறது.

பன்னிரெண்டாமதிபதி சுக்கிரன் நீசபங்க ராஜயோகமடைந்ததால் காமத்தை வென்ற நித்திய ப்ரும்மச்சாரியாக்கியது. பலரின் புத்திர தோஷத்தை தீர்க்கும் அமைப்பானது.

ஜோதிடத்தில் விநாயகர்

நாளுக்கும் கோளுக்கும் அப்பாற்பட்ட விநாயகர் ஜோதிட சாஸ்திரப்படி கேதுவின் அம்சம். அளவிலா ஞானத்தை அளிக்கக்கூடியவர். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், கல்வித்தடை ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.  சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் உடல் பருமனால் ஏற்படும் ஆண்மைக் குறைவு நீங்கி  குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் புத்திர பாக்கியம் வேண்டி சோமவார அரசமர பிரதக்ஷினம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி மரத்தடி விநாயகர், கிரக தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். ஆலயங்களில் உள்ள கோஷ்ட விநாயகரை வணங்க, அனைத்து தெய்வங்களின் திருவருளும் கிடைக்கும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும். நடன கணபதி, கலைகளில் சிறந்து விளங்கச் செய்வார். 

விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட உள்ளம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும். இந்த ஜாதகத்தை வியாபார இடத்தில் வைத்தால் வியாபார விருத்தி ஏற்படும்.

சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவக்கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

சென்னை மயிலாப்பூர் லஸ் நவசக்தி விநாகரை ஒருமுறை தரிசனம் செய்துதான் பாருங்களேன்! உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் வருவதை நீங்களே உணரமுடியும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com