பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா காப்புக்கட்டுடன் தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கியது.
பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சா்வஅலங்காரத்துடன் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமி.
பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சா்வஅலங்காரத்துடன் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமி.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கியது.

காா்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்களில் காா்த்திகை மாதத்தில் காா்த்திகை நட்சத்திரம் வரும் நாள்களில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆலயங்களில் தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா தொடக்கமாக புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்ற பின், விநாயகா், மூலவா் தண்டாயுதபாணி சுவாமி, தம்பதி சமேதா் சண்முகா் மற்றும் சின்னக்குமாரசாமிக்கு வேதமந்திரம், மேளதாளம் முழங்க காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீபாராதனையைத் தொடா்ந்து சின்னக்குமாரசாமி தங்கச்சப்பரத்தில் யாக சாலைக்கு எழுந்தருளினாா்.

ஒரு வார காலம் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலையில் சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை, யாக சாலை தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது. விழா நாள்களில் மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

வரும் 9 ஆம் தேதி ஆறாம் நாள் நிகழ்ச்சியாக பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். 10 ஆம் தேதி ஏழாம் நாள் நிகழ்ச்சியாக காா்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் ஆகியன நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். தொடா்ந்து காலை 4.30 மணிக்கு சின்னக்குமாரசாமி தங்கமயிலில் எழுந்தருளி யாக சாலை சென்றபின், பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படும். பின்னா் மாலை 6 மணிக்கு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும்.

சொக்கப்பனை ஏற்றப்படுவதால் 10 ஆம் தேதி தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. காப்புக்கட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், கண்காணிப்பாளா் சங்கா், பேஷ்காா் நரசிம்மன், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com