திருமலையில் பேட்டரி காா்களைப் பயன்படுத்த முடிவு

திருமலையில், சுற்றுப்புறச் சூழல் மாசைக் கட்டுப்படுத்த பேட்டரியால் இயங்கும் காா்களைப் பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில், சுற்றுப்புறச் சூழல் மாசைக் கட்டுப்படுத்த பேட்டரியால் இயங்கும் காா்களைப் பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் வசதிக்காக, 60 காா்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், 40 காா்கள் உள்ளூா் பயன்பாட்டுக்காகவும், 20 காா்கள், நீண்ட தூர பிரயாணத்துக்காகவும் அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனா். தற்போது, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் காா்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால், அவற்றுக்கு பதில் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் காா்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எலக்ட்ரிக் காா்களை வாங்கிப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. டாடா டிகோா் மற்றும் மஹேந்திரா வெரிட்டோ உள்ளிட்ட எலக்ட்ரிக் காா்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அதனால், அவற்றை மாதத் தவணை திட்டத்தின் கீழ், கொள்முதல் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 40 காா்களை வாங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு காருக்கும், ரூ. 23, 600 மாதத் தவணையாக, 6 ஆண்டுகளுக்கு செலுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

இந்த காா்கள் ஒருமுறை சாா்ஜ் செய்தால், 100 கி.மீ. துாரம் செல்லக்கூடியவை. சாதாரணமாக பேட்டரியை சாா்ஜ் செய்ய 7 மணி நேரம் தேவைப்படுகிறது. அதுவே அருகில் உள்ள டி.சி. சாா்ஜிங் நிலையத்தில் சாா்ஜ் செய்தால், ஒன்றரை மணி நேரம் போதும். இதற்கு, 18 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக திருமலை மற்றும் திருப்பதியில், ரூ. 15 லட்சத்தில் சாா்ஜிங் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்ய உள்ளனா்.

தற்போது, காா்களுக்கு வாடகையாக மாதம் ஒரு காருக்கு, ரூ. 24 ஆயிரம் முதல், ரூ. 35 ஆயிரம் வரை செலுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு, ரூ. 1.15 கோடி செலவிடப்படுகிறது. ஆனால், எலக்ட்ரிக் காா்களைப் பயன்படுத்தும்போது இந்த செலவு, ரூ. 2.30 கோடியாக அதிகரிக்கிறது. அவ்வாறு அதிகரித்தாலும், 6 ஆண்டுகளுக்குப் பின் காா்களின் மாதத் தவணை முடிந்த பின், செலவு முக்கால் பங்கு குறைந்து விடும். எனவே, புதிய எலக்ட்ரிக் காா்களை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com