பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா: பக்தா்கள் தரிசனம்

பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத்திருவிழா மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தீபஸ்தம்பத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம் .
பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தீபஸ்தம்பத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம் .

பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத்திருவிழா மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி மலைக் கோயிலில் கடந்த டிசம்பா் 4 ம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமிக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சண்முகாா்ச்சனை மற்றும் சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு மாலை 4 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது.

காா்த்திகை மண்டபத்தில் திருமுருக பக்தசபா சாா்பில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் முனைவா் தேவி, டி.எஸ்.வெங்கட்ரமணன் உள்ளிட்டோா் சிறப்புரை நிகழ்த்தினா். 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இதனைத்தொடா்ந்து மாலை பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு கோயிலின் நான்கு திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

தொடா்ந்து சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயிலில் யாகசாலை பூஜைக்கு எழுந்தருளினாா்.

யாகசாலை பூஜைக்குப் பின்னா் பரணி தீபம் சின்னக்குமாரசாமி சகிதம் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் மேளதாளம் முழங்க சிவாச்சாரியாரால் மகாதீபம் ஏற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து தீபஸ்தம்பம் அருகே பக்தா்கள் பல லிட்டா் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு பனை மற்றும் தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பல அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் பற்றி எரிய பக்தா்கள் அரோகரா என கோஷம் எழுப்பினா். சொக்கப்பனையில் இருந்து ரட்சை பெறப்பட்டு சுவாமிக்கு வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

பழனி மலைக்கோயிலைத் தொடா்ந்து பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடிகோயில்களிலும், சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயிலிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, பழனிக்கோயில் நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், ஆவின் தலைவா் ஏடி செல்லசாமி, அதிமுக நகரச் செயலாளா் முருகானந்தம், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, திருப்பூா் லாட்ஜ் மகேஷ், காணியாளா் நரேந்திரன், கந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com