நாகூர் ஆண்டவர் தர்கா 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம்

நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா புனித கொடியேற்றம் புதன்கிழமை இரவு
நாகூர் ஆண்டவர் தர்கா  கொடி ஊர்வலத்தில் புனித கொடிகளுடன் அணிவகுத்த அலங்கார வாகனங்கள்.
நாகூர் ஆண்டவர் தர்கா  கொடி ஊர்வலத்தில் புனித கொடிகளுடன் அணிவகுத்த அலங்கார வாகனங்கள்.


நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா புனித கொடியேற்றம் புதன்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தர்காக்களுள் ஒன்றாக விளங்குகிறது நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 462-ஆவது ஆண்டு கந்தூரி விழா பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்றம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கொடி ஊர்வலம்:  முன்னதாக, நாகையிலிருந்து நாகூர் வரை கொடி  ஊர்வலம் நடைபெற்றது. நாகை  பேய்க்குளம் (மீராபள்ளி) பகுதியிலிருந்து புதுப்பள்ளித் தெரு, சாலாப்பள்ளித் தெரு, நூல்கடைத் தெரு,   ஹத்தீப் லெப்பைத் தெரு, நீலா தெற்கு வீதி, கீழவீதி, மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபீஸ் சாலை உள்ளிட்ட  வழக்கமான வீதிகள் வழியாக, பெரிய ரதம், சின்ன  ரதம், செட்டிப் பல்லக்கு, முஹம்மது ஹவுஸ் கப்பல்  ஆகிய அலங்கார வாகனங்களில் கொடிகள் வைக்கப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. இந்த  ஊர்வலத்தில் மனோரா,  சிறிய கப்பல்,  நகரா மேடை உள்ளிட்ட அலங்கார வாகனங்களும் அணிவகுத்தன.
புதன்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கிய கொடி ஊர்வலம், இரவு 9.30 மணியளவில் நாகூர் தர்கா  அலங்கார வாயிலை அடைந்தது. ஊர்வலத்தின்போது இன்னிசை முழக்கங்கள் மற்றும் இறை வணக்கப் பாடல்கள் இடம்பெற்றன.
பின்னர், தர்காவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னர், இரவு 10.55 மணியளவில் பெரிய மனோரா உள்ளிட்ட 5 மனோராக்களிலும்  கந்தூரி விழாவுக்கான புனிதக் கொடியேற்றம்  நடைபெற்றது. இதை முன்னிட்டு, நாகூர் தர்கா முழுவதும் அலங்கார  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளில், நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள் கே. எம். கலிபா மஸ்தான் சாஹிபு, என்.எஸ். செய்யது அபுல் பதஹ் சாகிபு, எம்.எஸ். முஹம்மது பாக்கர் சாஹிபு, எஸ். ஏ. ஷேக் ஹசன் சாஹிபு, எஸ்.எம். செய்யது  ஹாஜா முஹைதீன் சாஹிபு, முத்தவல்லி சுல்தான் கபீர் சாஹிபு,   எஸ். செய்யது முஹம்மது ஹூசைன் சாஹிபு மற்றும் நாகை ஜமாத்தார்கள், முத்தவல்லிகள், வணிகர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸார்: கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி, நாகை,  நாகூர்  பகுதிகளில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 800 போலீஸார், 200-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் என 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com