சுடச்சுட

  

  ரத சப்தமியன்று எருக்க இலைக்கொண்டு ஸ்நானம் செய்வது ஏன்?

  By - மாலதி சந்திரசேகரன்  |   Published on : 09th February 2019 04:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  suriyan

   

  ஏழு என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 'சப்த' ரிஷிகள், 'சப்த' கண்ணியர், 'சப்த' நகரங்கள், 'சப்த' ஸ்வரங்கள் என்கிறோம்.அதுமட்டுமின்றி, வாரத்தின் நாட்கள், வானவில்லின் நிறங்கள், சூரிய பகவானின் தேர்க் குதிரைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் கிரணங்கள் என அனைத்துமே ஏழு.

  இதில் சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாளாக ரத ஸப்தமி கொண்டாடப்படுகிறது. உத்ராயண தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.

  பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’  நாளில்தான் ஆரம்பமாகிறது.

  திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே நேர்கோட்டில் வருவது தாமதப்படும் என்பதை விளையாட்டுப் போட்டியில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல ஏழு குதிரைகளும் ஒரு சேரத் திரும்பி, பயணம் தொடங்கும் நாள் தை மாத சப்தமி. சூரியனின் ஒற்றைச் சக்கர ரதத்தின் உத்தராயணப் பயணம் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதனால், ‘ரத சப்தமி’ என்று கொண்டாடப்படுகிறது இந்தத் திருநாள்.

  சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம்  கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

  சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின் சூரிய நமஸ்காரம்  அவசியம் செய்யவேண்டும். நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

  அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை.

  இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானைப் பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம், புத்திர பலம் தேஹிமே சதா! என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்கியம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். வைசம்பாயனர் சூரியனிலிருந்துதான் சுக்ல யஜுர் வேதம் பயின்றார். 

  பிதுர் லோகத்துக்கு அதிபதியாகவும், ஆத்ம காரகனாகவும் விளங்கும் சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய  வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது. சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்பதியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

  இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருமலையப்பன். இந்த ரத சப்தமி சமயத்தில், 'ஒரே நாளில் ஏழு வாகன உலா' என்பதால், 'அர்த்த பிரம் மோத்ஸவம்' என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள்.

  அன்று....

  * ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். * சூரியனுக்கு அர்ச்சனைகள் செய்யலாம். * பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்கலாம். * சூரியப் பிரபையில் எழுந்தருளி  சூரியநாராயணனாக காட்சி தரும் சென்னை திருமழிசை ஜகந்நாதப் பெருமாளைத் தரிசிக்கலாம்.

  ரத சப்தமிக்கும் எருக்க இலைக்கும் என்ன சம்பந்தம்? 
   
  ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்த்தாள்.  ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, 'இரு கொண்டுவருகிறேன்'' என்று கூறிய அதிதி மாதா மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து   கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள்.

  ஆத்திரம் கொண்ட பிராமணன், "என்னை உதாசீனம் பண்ணியதால் உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான். பிராமணரின்  சாபம் கேட்டு  அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தைச் சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்குக் கிடைப்பான்'' என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியனே  மகனாகப்  பிறந்தான்.  

  ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகைச் சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

  ரத சப்தமி அன்று  ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது  வழக்கம். 12.02.2019 அன்று  அதிகாலை ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை  மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

  ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்குப் பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை  இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.  சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

  கீழ்க்கண்ட சூரிய காயத்ரியை காலை வேளையிலும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சொல்வது பன் மடங்கு பலனைத் தரும். 

  ஸ்ரீ சூரிய காயத்ரி 

  ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
  பாசஹஸ்தாய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் பாஸ்கராய வித்மஹே
  திவாகராய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  மகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பையால்  வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப்  படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார். ''வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று பீஷ்மர் கேட்டார். 

  "பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.''  என்கிறார் வியாசர்.

  சபை நடுவே பாஞ்சாலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த  மிகப்பெரிய தவறு என  பீஷ்மர் உணர்ந்தார்.

  ''வியாஸா இதற்கு விமோசனம் எது? 

  'பீஷ்மா, எப்பொழுது உன் தவற்றை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள்,  கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு  வேண்டுகிறார் பீஷ்மர்.

  ''இதற்கு எருக்க இலையைக் காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன். இதை  தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை. அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.

  நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையைத் தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?

  - மாலதி சந்திரசேகரன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai