திருநள்ளாறு கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்: பாதுகாப்புப் பணியில் 500 போலீஸார்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் திங்கள்கிழமை காலை 9.10 முதல் 10.10 மணிக்குள் நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்: பாதுகாப்புப் பணியில் 500 போலீஸார்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் திங்கள்கிழமை காலை 9.10 முதல் 10.10 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான 8 கால யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கின.

குடமுழுக்கு விழாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 350 போலீஸாரும், புதுச்சேரியிலிருந்து 150 போலீஸாரும் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், காவலர்கள் எவ்வாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்பது குறித்து கோயில் வளாகத்தில் பயிற்சி அளித்தார்.

காவல்துறையினர் இதுகுறித்து கூறும்போது, 

"கோயிலின் உள் பகுதியிலும், வெளிப்புறத்திலும் குறிப்பிட்ட இடங்களில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கென கண்காணிப்பு, பாதுகாப்பு தரும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்றுள்ளது. 
அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போலீஸார் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். 

மகளிர் போலீஸார் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் கூடுதலாக உள்ளனர். சீருடையில்லா காவலர்களும் பக்தர்கள் இருக்கும் பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபடுவர். கோயில் வளாகத்தில் சிறப்புக் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தவிர, 250-க்கும் மேற்பட்ட என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களும் பக்தர்களை ஒழுங்குப்படுத்துதல், உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். இவர்களுக்கு அதற்கான பயிற்சியை காவல்துறை அளித்துள்ளது.

தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த விவரம் புகைப்படத்துடன் ஆங்காங்கே பதாகையாக வைக்கப்படுகிறது. பதாகையில் இருப்போர் பக்தர்களிடையே உலாவுதல் தெரியவந்தால், அருகில் உள்ள போலீஸாருக்கு தெரிவிக்க பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் தங்களது விலை மதிப்பு மிக்க ஆபரணங்கள், உடைமைகள் மற்றும் குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்தனர். 

ஆய்வின்போது, மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com