சுடச்சுட

  

  திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

  By DIN  |   Published on : 11th February 2019 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  trtkov

  திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
   அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாசித் திருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசம், வேல் உள்ளிட்டவற்றை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
   அடுத்ததாக, திங்கள்கிழமை (பிப். 11) காலை 9.30 மணிக்கு வெள்ளி சூரியப் பிரபை வாகனத்திலும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் முருகன் காட்சியளிப்பார். புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறும். அன்று இரவு 7.30 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும், வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அன்ன வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகத்திலும், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்திலும், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தேரிலும், ஞாயிற்றுக்கிழமை (பிப். 17) 9.30 மணிக்கு யாளி வாகனத்திலும் முருகப் பெருமான் காட்சியளிப்பார்.
   பிப். 17 அன்று மாலை 5 மணிக்கு திருத்தணி ஆறுமுக சுவாமி கோயிலில் பாரிவேட்டை நடைபெறும். அன்று நள்ளிரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் முருகன் காட்சியளிப்பார். அதையடுத்து வள்ளி திருமணமும், திங்கள்கிழமை (பிப். 18) காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப்பொடி விழாவும் இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும் நடைபெறும். பிப். 19ஆம் தேதி காலை 5 மணிக்கு தீர்த்தவாரி, சுப்பிரமணிய சுவாமி உற்சவம், மாலை 5 மணிக்கு கேடய உலா, 20ஆம் தேதி மாலை சப்ராபரணம் ஆகியவை நடைபெறும்.
   இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai