கோயில்களில் கும்பாபிஷேகம்...

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் கோபுரக் கலசங்களுக்கு  புனித நீரை ஊற்றும் சிவாச்சாரியார்கள்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றும் சிவாச்சாரியார்கள்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 தொண்டை மண்டலத்தில் முப்புரம் எரிப்பதன் பொருட்டு புறப்பட்ட சிவபெருமானின் திருத்தேர் அச்சு இற்ற (முறிந்த) காரணத்தால் அச்சிறுப்பாக்கம் என்று பெயர் பெற்ற இத்தலத்தில் இளங்கிளி நாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். திரிநேத்திரதாரி என்ற முனிவரால் பூஜிக்கப் பெற்றதும், அருணகிரிநாதர், வடலூர் வள்ளலார், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரால் பாடல் பெற்றதுமாக இத்தலம் விளங்கி வருகிறது.
 கடந்த 2001ஆம் ஆண்டு பிப். 11-க்குப் பின் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதனால் இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், திருப்பணிக் குழுவினர், கோயில் செயல் அலுவலர், கிராம மக்கள் ஆகியோரின் முயற்சியால் 18 ஆண்டுகளுக்குப் பின் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும், சுவாமி சந்நிதிகளையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோயிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-இல் பாலஸ்தான விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள அனைத்து பகுதிகளும் சீரமைக்கப்பட்டன.
 இந்நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை, கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கியது. அதையடுத்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மூர்த்தி ஹோமம், ஆசார்ய விசேஷ சந்தி , நாடி டி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) காலை 10 மணிக்கு மேளதாளம் முழங்க, யாகசாலையில் இருந்து கோயில் ஸ்தானிகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் புனித கலசங்களை ஏந்திச் சென்றனர். அவர்கள் அனைத்து ராஜகோபுரங்கள், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
 விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெங்கடேசன், சரவணன், அதிமுக மாவட்டச் செயலர்கள் எஸ்.ஆறுமுகம், கணேசன் மற்றும் ஆயிரக்கணக்காôன பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7.30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்சமூர்த்தி வீதியுலா, பரதநாட்டியக் கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் ஸ்தானிகர், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 காவாத்தூர் ஆதிகேசவ
 பெருமாள் கோயிலில்...
 மதுராந்தகத்தை அடுத்த காவாத்தூர் அம்புஜலட்சுமி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் மகா சம்ரோக்ஷண விழா (கும்பாபிஷேகம்) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
 இக்கோயிலின் அநைத்து சந்நிதிகளையும் சீரமைத்து, மகா கும்பாபிஷேகத்தை நடத்த அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி முதல் கிராமத்தார் சங்கல்பம், ஆச்சார்யவர்ணம், கும்பாராதனம், ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஞாயிற்றுக்கிழமை காலை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன் யாகசாலையில் இருந்து புனிதக் கலசங்களை வேத விற்பன்னர்கள் சுமந்தபடி கோயிலை வலம் வந்தனர். அனைத்து சந்நிதி கோபுரக் கலசங்களுக்கும் அவர்கள் காலை 8.30 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், அறங்காவலர்கள், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 கைலாசநாதர் கோயிலில்...
 செங்கல்பட்டு அருகே கடம்பூர் கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மறைமலைநகரை அடுத்த கடம்பூர் கிராமம், விஜிலன்ஸ் நகரில் ஸ்ரீபாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கைலாயதீர்த்தம் மற்றும் கடம்பதீர்த்தம் ஆகிய இருதீர்த்தங்களும் உள்ள சிறப்பு வாய்ந்தது.
 இக்கோயில் திருப்பணிக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறை ரூ.28 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து, தர்மகர்த்தா கே.பிச்சுமணி, ஓய்வுபெற்ற காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் ஜி.சம்பந்தம், சி.சுதர்சன், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் உபயதாரர்களின் உதவியுடன் திருப்பணி நிறைவுபெற்றது.
 இதையடுத்து, செங்கல்பட்டு ராமகிருஷ்ண மடம் சர்வசதானந்த சுவாமிகள், காவல்துறை முன்னாள் இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மங்கள வாத்தியம், சிவநாதங்கள் ஒலிக்க மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவில், அதிமுக மாவட்ட செயலர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், காவல்துறை டிஐஜி தேன்மொழி, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, டிஎஸ்பி வளவன், சம்பந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். திருக்கழுகுன்றம் சிவதாமோதரனின் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் செந்தில்குமார், பிச்சுமணி, கே.பி.ராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com