சுடச்சுட

  

  திருக்கழுகுன்றம் கோயிலுக்கு கழுகுகள் மீண்டும் வர வேண்டி பால்குட ஊர்வலம்

  By DIN  |   Published on : 13th February 2019 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  milk

  திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கழுகுகள் மீண்டும் வர வேண்டி நடைபெற்ற 2,008 பால்குடம் ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள்.


  பட்சிதீர்த்தம் எனப்படும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு மீண்டும் கழுகுகள் வர வேண்டும் என்று வேண்டி பக்தர்கள் நடத்திய சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை வழிபாடும், 2,008 பால்குட ஊர்வலமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் தொன்மை வாய்ந்த கோயிலாகும். பட்சிதீர்த்தம், வேதமலை போன்ற பல்வேறு பெயர்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற இத்தலத்தில் உள்ள நான்கு மலைக் குன்றுகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. அதர்வண வேதமாக அழைக்கப்படும் மலைக் குன்றின் மீது வேதகிரீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்.
  பல நூறு ஆண்டுகளாக இக்கோயிலை இரண்டு கழுகுகள் வட்டமிட்டு வேதமலையைச் சுற்றி வந்து, உணவருந்திச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இதைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து கழுகுகளை தரிசித்துச் செல்வர். குன்றில் வசித்து வந்த ஒரு முனிவர் மதிய நேரத்தில் கழுகுகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவின் மீதத்தையும், கழுகுகளுக்கு வைக்கப்படும் தீர்த்தத்தைப் பெறுவதற்காக பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த தீர்த்தத்தை அருந்தியவர்களின் பிணிகள் தீரும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. பக்தர்கள் இறைவனோடு கழுகுகளையும் வணங்கி வந்தனர். 
  எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருப்பணியின்போது கழுகுகள் உணவருந்தும் வட்டப் பாறை மாற்றி வடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கழுகுகள் வருவது நின்று விட்டதாகக் கூறப்படுகிறது. கழுகுகள் வராததற்கு அருகில் உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன. 
  இந்நிலையில், திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழாக் குழு மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து, கழுகுகள் மீண்டும் வர வேண்டி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். யாக குண்ட பூஜைகள், கூட்டுப் பிரார்த்தனை, பால்குட ஊர்வலம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
  அதன்படி, பெருவிழாக் குழுவின் தலைவர் தி.கா.துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2,008 பால்குட ஊர்வலத்தை அதன் செயலர் தி.து.அன்புச்செழியன் கோபூஜையுடன் தொடங்கி வைத்தார். திருக்கழுகுன்றம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து வந்த 2,008 பெண்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டு, வேதகிரீஸ்வரர் மலைக்கு சென்றனர். அங்கு வேதகிரீஸ்வரருக்கும், முனிவருக்கும் நடைபெற்ற பாலாபிஷேக நிகழ்வில் அவர்கள் பங்கேற்று, வழிபட்டனர். இது தவிர, கழுகுகள் மீண்டும் வர வேண்டி திருக்கழுகுன்றம் தாழக் கோயிலான பக்தவத்சலேஸ்வரர் கோயிலின் ஆமை மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. 
  இந்த சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் வேதமலை வல பெருவிழாக் குழுவின் நிர்வாகிகள், கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் இந்து முன்னணியின் காஞ்சி தெற்கு கிளை நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

  திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai