திருமலையில் ரதசப்தமி உற்சவம்:  7 வாகனங்களில் வலம் வந்த மலையப்பர்

திருமலையில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
திருமலையில் ரதசப்தமி உற்சவம்:  7 வாகனங்களில் வலம் வந்த மலையப்பர்


திருமலையில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
சூரியன் தன் பாதையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடத்தப்படுகிறது. தை அமாவாசை முடிந்த 7ஆம் நாள் சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால் அதை ரதசப்தமி என்று அழைக்கின்றனர். அதன்படி, திருமலையில் செவ்வாய்க்கிழமை ரதசப்தமி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை 7 வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்தார்.
அதிகாலை 5.30 மணிக்கு 7 குதிரைகள் பூட்டிய சூரியப்பிரபை வாகனத்தில் செந்நிற மாலைகள் அணிந்தபடி அவர் மாடவீதியில் வலம் வந்தார். 
சூரிய உதயம் தொடங்கியபோது கிழக்கு மாடவீதியில் சூரியனின் கதிர்கள் மலையப்ப சுவாமி மேல் விழுந்தன. 
அப்போது அவருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வேட பாடசாலை மாணவர்கள் இணைந்து ஆதித்ய ஹிருதயம், சூரிய அஷ்டகம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்தனர். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். அதன்பின் சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், தீர்த்தவாரி, கல்பவிருட்ச வாகனம், சர்வபூபால வாகனம், சந்திரப்பிரபை வாகனம் ஆகியவற்றில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
ஒரு நாள் பிரம்மோற்சவம் எனப்படும் இவ்விழாவைக் காண பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாடவீதியில் காத்திருந்து வாகனச் சேவைகளைக் கண்டனர். சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீர்த்தவாரியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி திருக்குளத்தில் புனித நீராடினர். வாகனச் சேவையின்போது இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பஜனைப் பாடல்களைப் பாடியதோடு, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். 
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் தர்மதரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்டவை தவிர அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. 
மாடவீதியில் காத்திருந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி, அன்னப் பிரசாதம், குடிநீர், மோர், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக 4 ஆம்புலன்ஸ்கள், 4 பேட்டரி கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 4 முதன்மை சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டன. 
திருமலையில் கி.பி.1564- ஆம் ஆண்டு முதல் ரதசப்தமி உற்சவம் நடைபெற்று வருவதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஏழுமலையான் கோயிலைப் போல் தேவஸ்தானம் நிர்வகிக்கும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளாய
குண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில், நாராயணவரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாகலாபுரம் வேதநாராயணர் கோயில் ஆகியவற்றிலும் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஏழு வாகனச் சேவைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com