உங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்துவிட்டீர்களா? மாசிப்பூணூல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்துவிட்டீர்களா? மாசிப்பூணூல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உத்திராயணம் பிறந்துவிட்டாலே விவாகம், உபநயனம் போன்ற முகூர்த்தங்கள் கலைகட்டிவிடும். அதிலும்..


உத்திராயணம் பிறந்துவிட்டாலே விவாகம், உபநயனம் போன்ற முகூர்த்தங்கள் கலைகட்டிவிடும். அதிலும் மாசி மாதத்தில் நிறைய உபநயனங்களைக் காணமுடியும். "மாசி பூணூல் பாசி படரும்" என்பது பழமொழி. இந்த மாசி மாத முகூர்த்தங்களில் அனேக திருமண மண்டபங்களில் திருமணத்தை விட உபநயமே அதிகம் நடப்பதையே காணமுடியும். மாசி மாதத்தில் உபநயனத்தைச் செய்வது மிகச்சிறப்பு. முடியவில்லை என்றால் உத்திராயண காலத்திற்குள் செய்துவிட வேண்டும் என்கிறது வேதம்.

குருகுலவாசம்

குழந்தைகளை அதிலும் முக்கியகாக ஆண் குழந்தைகளை குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும். சகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாசம் என்று ஒரு ஆசாரியனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு விட்டார்கள். 

மாணவன் யாரிடமிருந்து தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கற்றுக்கொள்கிறானோ அவரே ஆசாரியர். உடம்பை மட்டும்தான் அப்பா அம்மா தருவார்கள். வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தைத் தருபவர் ஆச்சாரியர்தான். அதனால் அவருக்கு எப்பவுமே தீங்கு நினைக்கவோ அபசாரம் செய்கிறதோ கூடாது.

உபநயனம்

'உபநயனம்' என்றால் 'சமீபத்தில் அழைத்துப் போகிறது'. எதற்கு, அல்லது யாருக்கு சமீபத்தில்? குருவுக்கு சமீபத்தில்தான். இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதன் ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்

உபநயனம் என்பது இவ்விரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகின்றது. 'உப' என்றால் பிரமத்திற்கு அருகில் என்பது பொருள். 'நயனம்' என்றால் குரு சிஷ்யனை அழைத்துச் செல்லுதல் என்பது பொருள். பிராமணர்கள் 8 வயதிற்குள்ளும், க்ஷத்திரியர்கள் 12 வயதிற்குள்ளும், வைஷ்யர்கள் 16 வயதிர்குள்ளும், காமம் மனதிற்குள் புகுமுன் உபநயன தீக்ஷை பெற வேண்டும் என்பது வழக்கம்.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரி மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்திரமாயும் பூணூல் போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், பிரமோபதேசம் என்று சொல்லுகிறோம்.

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு காரியங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின்பற்றுவதில்லை. முஞ்சம் புல் என்கிற புல்லை முப்புரியாக முறுக்கி அதை இடுப்பில் 3 முறை சுற்றி நாபிக்கு நேராக முடியிட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கு மூத்திர கோளாறுகளை தடுக்கும் சக்தி இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

உபநயனத்தில் குரு சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச் சொல்லி ஆசீர்வதிப்பதாவது "இக்கல்லைப் போல் வலிமை கொண்ட உடலும், உறுதி படைத்த நெஞ்சம் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். நீ பிராமச்சாரியாகி விட்டாய். சந்தியாவந்தனத்தையும், மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யவேண்டும். அறியாமையினின்று விழித்தெழு"  என்பது போல் ஆகும்.

உபநயனம் பண்ண வேண்டிய வயதை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பது

உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராமணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும். அதாவது பிறந்து ஏழு வயசு இரண்டு மாசம் ஆனவுடன் பண்ண வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

க்ஷத்திரியர்கள் பன்னிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

உபநயனமும் உத்திராயணமும்

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் சூரியன் பூமியின் வடக்குப் பாதியில் சஞ்சரிக்கிற ஆறு மாசத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும். இந்த ஆறு மாசத்தில்தான் செய்யலாம். இதிலும் வசந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்' என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது சாஸ்திர சம்மதமல்ல என்று மகா பெரியவர் உபநயனம் செய்யும் காலம் பற்றி கூறியிருக்கிறார்.

வாமன மூர்த்திக்கு சூரிய பகவான் உபநயனம் செய்வித்தல்

மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.

பிரமோபதேசம்

உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படுகிறது. அதனாலேயே இதற்கு பிரமோபதேசம் என்று பெயர். பிரபஞ்ச சாரத்துல சங்கரர் கூறுகிறார் இகத்திலேயும் பரத்திலேயும் நல்வாழ்க்கையை நாடும் த்விஜர்களால் இந்த மந்திரம் ஜபித்தற்கு உரியது. காயத்ரி ஜபத்தால் மனது ஒருமைப் படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது.

ஞான ஒளியைத் தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன. காமம் உள்புகுந்த பின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்னே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதைச் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். எண்ணைப் பூசிக்கொண்ட கை பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதைக் காமம் அதிகம் பாதிக்காது.

காயத்ரி ஜெபம்

காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமகக் கொண்டது. எனவே சூரியனை வணங்குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும். காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும். சம்ஸ்க்காரத்தில் ஸந்த்யாவதனம் பிரம்ம யஞத்தின் கீழ் சொல்லப்பட்ட நித்யகர்மாவாகும். (சம்ஸ்க்காரம் எண் 21). 

ஸந்யாவந்தனம் அதிகாலை மற்றும் அந்தியில் சூரியனில் வசிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து செய்யும் நித்ய கர்மாவாகும். காயத்ரி தியான முறையும், தண்ணீரால் செய்யப்படும் அர்க்யமும் இந்த கர்மாவில் செயல் முறை மையமாக உள்ளன. 

சந்தியாவந்தனம் எப்படி செய்யவேண்டும்

சந்தியாவந்தனம் (அ) சந்த்யோபாசனை முறைப்படி குருவிடமோ/ சாஸ்த்திரிகளிடமோ உபநயன தின முதல் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஸ்வரத்துடன் கூடிய வேத மந்திரங்கள் அடங்கியுள்ளது. அதன் பிறகு பெரியோர்களிடமோ அல்லது வேறு ஊடகங்கள் மூலமாகவோ கற்று கொள்ளலாம். 

"காணாமல் கோணாமல் கண்டு கொடு" எனக் கூறுவார்கள். அதாவது காலை சந்தியாவந்தனம் சூரியன் உதிக்கும் முன் (காணாமல்) சாவித்ரிதேவியை மதியம் உச்சிப்பொழுதில் (சூரியன் கோணாமல்) காயத்ரி தேவியை தியானிப்பது சாயங்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நட்சத்திரத்தைப் பார்க்கும் வரையிலும் சந்தியா தேவியை பூஜையை செய்தல் வேண்டும். பசுகொட்டிலிலும், நதி கரையிலும், கோவில் அருகிலும் சந்தியாவந்தனம் செய்வது பன்மடங்கு பலனைத் தர வல்லது. வீட்டிலும் (கொல்லை) சுத்தமான சூரிய ஒளி வரும் இடத்தில் சந்தியாவந்தனம் செய்யலாம். அப்படியும் இடம் இல்லை எனில் வீட்டில் உள்ள கடவுள் சன்னிதானத்தில் செய்யலாம். 

ஜாதகப்படி யாருக்கு உபநயனம் செய்யும் அமைப்பு இருக்கும்?

ஒருவருக்கு ஆன்மீக உலகத்தில் பிரவேசம் செய்ய ஜாதகத்தில் குரு சூரிய சேர்க்கை முக்கியமானதாகும். உபநயனம் எனும் பிரமோபதேசமும் இறைவனை அடையும் ஆன்மீக பயணத்தின் முதல்படி என்பதால் உபநயனம் செய்துகொள்ள ஒருவர் ஜாதகத்தில் சூரியன் குரு இணைவு முக்கியமானதாகும்.

1. லக்னம்/ராசி மோக்ஷ திரிகோணங்களாகிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய வீடுகளாகிய லக்னத்தில் அல்லது திரிகோணத்தில் குரு நின்று ஆட்சி/உச்சம் பெற்று நிற்பது  மற்றும் ரிஷபம் துலாம் லக்னமாகி லக்னத்தில் குரு நிற்பது.

2. லக்னம் மற்றும் திரிகோண பாவங்களில் குரு சூரியன் சேர்க்கை பெற்று நிற்பது.

3. லக்னம் மற்றும் திரிகோண பாவங்கள் குரு வீடாக அமைந்து சூரியன் அங்கு நிற்பது அல்லது சூரியன் வீடுகளாகி அங்கு குரு நிற்பது.

4. குருவும் சூரியனும் சுப பரிவர்தனை பெற்று நிற்பது.

5.  குருவோ அல்லது சூரியனோ ஆட்சி உச்சம் பெற்றும் இரண்டும் இணைந்து ஒரு திரிகோணத்தை பார்ப்பது.

6. குருவோ சூரியனோ திரிகோணங்களில் நின்று சமசப்தம பார்வை பெறுவது. இவற்றில் ஒன்று ஆட்சி உச்சம் பெற்றால் கூடுதல் பலமாகும்.

7. குரு லக்னத்திலும் சுக்கிரன் நான்காம் வீட்டிலும் திக்பலம் பெற்று செவ்வாயின் சேர்க்கை பெற்று குரு மங்கள யோகம், ப்ருகு மங்கள யோகம் பெற்றும் நிற்பது.

ஜனன ஜாதகத்தில் மேற்கண்ட வகையில் இணைவு பெற்று நின்று குரு தசா சூரிய புத்தி மற்றும் சூரிய தசா குரு புத்தி காலங்களில் உபநயனம் நிகழும். மேலும் 1/5/9 அதிபதிகள், மற்றும் சூரியன், குரு ஆகியவர்களின் தசா புத்தி அந்தரம் ஆகியவை நடைபெறும்போதும் ஒருவருக்கு உபநயனம் மற்றும் குருகுல வாசம் போன்ற அமைப்புகள் ஏற்படும்.

உபநயனம் செய்யும் வயதாகியும் அதற்கான சூழ்நிலை அமையவில்லை எனில் சென்னை வியாசர்பாடியில் உள்ள சூரிய ஸ்தலமான ரவீஸ்வரரையும் அங்குள்ள வேதவியாசரையும் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் வணங்கி வர ப்ரம்மோபதேசமும் வேத அத்தியயனமும் குருகுல வாசமும் ஏற்படும். தனியாக உபநயனம் செய்ய வசதியில்லாதவர்கள் சமஸ்டி உபநயனத்தில் பூணல் போட்டுவிட வேண்டும். போடாமல் காலம் தாழ்த்தக்கூடாது என்கிறது சாஸ்திரம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com