
மாமல்லபுரத்தில் உள்ள தலயனப் பெருமாள் கோயில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆண்டு தெப்போற்சவம் இக்கோயில் திருக்குளத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி தலயனப் பெருமாளுக்கும், உற்வச மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
திருக்குளத்தைச் சுற்றி மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தெப்பம் புஷ்ப அலங்காரத்துடன் திருக்குளத்தில் தயார்நிலையில் இருந்தது. உற்சவ மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வரவழைத்து தெப்பத்தில் நிறுத்தினர்.
திருக்குளத்தைச் சுற்றி நின்றிருந்த பக்தர்கள் தெப்பத்தின் வடம் பிடித்து இழுத்தனர். அவர்கள் கற்பூரத்தை வெற்றிலையில் ஏற்றிவைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.