தேவஸ்தான நிபந்தனைகளை மீறியதால் சீனிவாச கல்யாணம் ரத்து

திருப்பதி தேவஸ்தானம் விதித்த நிபந்தனைகளை மீறியதால் ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த சீனிவாச கல்யாண உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


திருப்பதி தேவஸ்தானம் விதித்த நிபந்தனைகளை மீறியதால் ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த சீனிவாச கல்யாண உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனிவாச கல்யாண உற்சவம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதன்மூலம் உலகம் முழுவதும் ஏழுமலையானின் திருக்கல்யாண உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. திருமலைக்கு வந்து கல்யாண உற்சவ டிக்கெட் பெற்று ஏழுமலையானின் கல்யாணத்தைக் காண முடியாத பக்தர்கள் தேவஸ்தானம் நடத்தும் இந்த உற்சவங்களில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். 
வெளியூர்களில் இந்த உற்சவத்தை நடத்த விரும்பும் ஏற்பாட்டாளர்கள் இதற்காக கட்டணம், நன்கொடை உள்ளிட்டவற்றை வசூல் செய்யக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கல்யாணத்துக்குத் தேவைப்படும் உற்சவர் சிலைகள் முதல் அர்ச்சகர்களை அனுப்புவது வரை தேவஸ்தானத்தின் பொறுப்பாகும். இடம் ஏற்பாடு செய்து அளித்தல், உற்சவத்துக்காக பிரசாரம் செய்தல், வருபவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வது ஆகியவற்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டும். 
இந்நிலையில், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள எல்.பி.மைதானத்தில் சீனிவாச கல்யாணம் நடத்துவதற்காக தத்தகிரி மகாராஜ் அறக்கட்டளை கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி தேவஸ்தானத்தைத் தொடர்பு கொண்டது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு கல்யாண உற்சவம் நடத்த தேவஸ்தானம் ஒப்புக் கொண்டது. 
அதையடுத்து, கல்யாண உற்சவம் நடத்தவுள்ள அறக்கட்டளை இந்த உற்சவத்துக்காக நன்கொடை வசூல் செய்யத் தொடங்கியது. பெரிய தொகையை நன்கொடையாக அளிப்பவர்களுக்கு திருமலையில் எல்-1 பிரேக் தரிசனம், ஏழுமலையான் பிரசாதங்கள், வஸ்திரம், தாயார் வஸ்திரம், பட்டு வேட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் நன்கொடை அளிப்பவர்கள் கல்யாண உற்சவம் நடைபெறும் மேடையில் அமரவைக்கப்படுவர் என்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்தது. 
இத்தகவலை அறிந்த தேவஸ்தானம், கல்யாண உற்சவத் திட்டத்தின் நிபந்தனைகளை மீறி அந்த அறக்கட்டளை நன்கொடை வசூலித்ததால் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவிருந்த அந்த உற்சவத்தை திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com