சூரியனுக்குரிய முக்கிய விழா!

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள், மகர சங்கராந்தி, தைப் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
சூரியனுக்குரிய முக்கிய விழா!

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள், மகர சங்கராந்தி, தைப் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. கண்களுக்குத் தெரியும் கண்கண்ட தெய்வமாக சூரிய பகவான் போற்றப்படுகிறார். அதனால் தினமும் காலையில் குளித்து, உடல் சுத்தம், மனசுத்தத்துடன் சூரிய பகவானுக்குரிய மந்திரத்தை சொல்லி வந்தால், சிறப்பான பலன்கள் உண்டாகும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாரதத்தில் சூரிய வழிபாடு என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழிபாடாகும். சூரியனுக்குரிய கோயில்கள் இந்தியாவில் பல இடங்களில் உள்ளன. பாரதத்தில் வேத காலத்திலிருந்தே சூரிய வழிபாடு நடந்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன. கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தொல்பொருள் ஆய்வு தெரிவிக்கிறது.

எகிப்து, ஈரான், சீனா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, எகிப்து, ஸ்ரீ லங்கா போன்ற நாடுகளில் சூரிய வழிபாடு போற்றப்படுகிறது. சுமேரியர்களும் சூரியனை வழிபட்டு வந்துள்ளனர். காஷ்மீரில் 1200 ஆண்டுகளுக்கு முன்பே அமைந்த மார்த்தாண்டு, ஒரிசாவில் பூரி நகருக்கு அருகில் உள்ள கோனார்க், குஜராத்தில் மெரதேரா ஆகிய இடங்களில் சூரியனுக்குகென்றே தனிக் கோயில்கள் உள்ளன. தவிர
காசி மாநகரத்தில் மட்டும் சூரிய பகவானுக்கென்று 12 கோயில்கள் உள்ளன.

தமிழகத்தில் சூரியனார் கோயில், திருக்கண்டியூர், வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் ஆகிய தலங்களில் சூரியனுக்கு கோயில்கள் உள்ளன. இதில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனார்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தில் சூரிய பகவான் உஷா தேவி மற்றும் பிரதியுஷா தேவி ஆகியோருடன் காட்சி தருகிறார். அதோடு கோள் தீர்த்த விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி மற்றும் நவக்கிரகங்களும் அவர்களுக்குரிய இடத்தில் எழுந்தருளியிருப்பதால் தோஷ பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. மேலும் இங்குள்ள சூரிய புஷ்கரணியில் நீராடினால் களத்திர தோஷம், புத்திர தோஷம், பிதுர் தோஷம், சனி தோஷம் ஆகிய தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் உள்ள நவத்தீர்த்தங்களில் நீராடி, எருக்கன் இலையில் பிரசாதமாகத் தரப்படும் தயிர்சாதம் மட்டும் உண்பவருக்கு சரும நோய் நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அதோடு, தொடர்ந்து 48 நாள்கள் இங்கு சூரியனை வணங்கி இப்பிரசாதத்தினை உண்டுவர, தொழு நோய் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. சூரிய பகவானை வணங்குவதால் நம் கண்ணொளி பிரகாசிக்கும் என்பர்.

தைப்பொங்கல் இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனுக்குரிய தானியமான கோதுமையில் கரும்புச்சாறு கலந்து பொங்கல் தயாரித்து நிவேதனம் செய்கிறார்கள்.

பொதுவாக "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழரின் நம்பிக்கையாகும். கதிரவனையும் உழவுக்கு காரணமான காளையையும் வணங்கி வழிபடுவது நம் மரபு! சூரியனுக்குரிய முக்கிய விழாவான பொங்கல் திருநாளை, மக்கள் தமிழர் திருநாளாக உவகையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com