வள்ளிமலை முருகன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பிரசித்தி பெற்ற வள்ளிமலை முருகன் குடவரைக் கோயிலில் புதிய கொடி மரப் பிரதிஷ்டை விழாவில் சுற்றுவட்டாரத்தைச்
வள்ளிமலை முருகன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை


பிரசித்தி பெற்ற வள்ளிமலை முருகன் குடவரைக் கோயிலில் புதிய கொடி மரப் பிரதிஷ்டை விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷங்கள் முழங்க கொடி மரத்தைத் தூக்கி நிறுத்தி வழிபாடு செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட வள்ளிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு மலை மீது அமைந்துள்ள குடவரைக் கோயில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியாகவும், மலையடிவாரக் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக நாதராகவும் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார்.
இந்தக் கோயிலை நிர்மாணித்தபோது கோயில் கருவறையின் எதிரே பலி பீடத்துக்கு அருகே கொடிமரம் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். கோயிலின் கொடிமரம் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதையடுத்து, முருக பக்தர்கள் தாங்களாக முன்வந்து சுமார் ரூ.15 லட்சம் செலவில் புதிய கொடி மரம் அமைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். அதற்காக கேரளத்தில் இருந்து 60 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட தேக்கு மரத்தை வாங்கினர்.
இந்நிலையில், கொடிமரத்தை 444 படிகளைக் கடந்து மலையின் உச்சிக்கு கொண்டு செல்ல உரிய சாலை வசதி இல்லை. இதனால் கொடி மரம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே, மலைக் கோயிலுக்கு பாதை அமைப்பதற்கு தமிழக அரசின் வனத் துறை, தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பதாக தினமணியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து புதிய கொடிமரம் செய்ய கொண்டுவரப்பட்ட 60 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட தேக்கு மரத்தை கடந்த மாதம் 444 படிகள் வழியாக தூக்கிச் சென்று மலை உச்சியில் சேர்த்தனர். இதையடுத்து, புதிய கொடி மரம் செதுக்கப்பட்டு குடவரைக் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 
அங்கு திரண்டிருந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அரோகரா  கோஷம் முழங்க, கொடி மரத்தைத் தூக்கி நிறுத்தி வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com